கடலில் மிதந்து வந்த தேர்; தாய்லாந்து, ஜப்பான், மலேசியா - எங்கிருந்து வந்தது ?
ஆந்திர மாநில கடலில் தங்க நிறத்திலான தேர் கடலில் மிதந்து வந்த நிலையில் இது குறித்து உளவுத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கோடை காலம் நிலவி வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதிலிருந்து புயலாக உருவான இதற்கு அசாணி என பெயர் வைக்கப்பட்டது.
கடந்த 8 ஆம் தேதி புயலாக உருவான அசானி பின்னர் வலுவடைந்து அதி தீவிர புயலாக ஆனது. இந்த புயல் தற்போது ஆந்திரா நோக்கி நகர்ந்து வரும் நிலையில் வலுவிழந்து அதிதீவிர புயலில் இருந்து புயலாக மாறி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஆந்திர மாநில கடலில் தங்க நிறத்திலான கோவில் கடலில் மிதந்து கொண்டு இருந்தது. இதனைக் கண்டு மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் அருகில் சென்று பார்த்த போது அது தங்க முலாம் பூசப்பட்ட தேர் என்பது தெரிய வந்தது. பின்னர் அதனை கரைக்கு கொண்டு வந்த மீனவர்கள் கடலோர காவல் படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதிகாரிகள் வந்து விசாரணை நடத்திய நிலையில் தேரின் மீது தாய்லாந்து, ஜப்பான் அல்லது மலேசிய நாட்டு எழுத்துக்களால் எழுத்தப்பட்டிருந்ததை கண்டறிந்துள்ளனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது குறித்து உளவுத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.