கரடியுடன் செல்பி - உயிரைவிட்ட இளைஞர்
ஒடிசா மாநிலத்தில் இளைஞர் ஒருவர் கரடியுடன் செல்பி எடுக்க முயன்றபோது கரடியால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகமெங்கும் வயது வித்தியாசம் இன்றி இன்று பரவியுள்ள ஒரு வியாதி செல்பி. எதை பார்த்தாலும், யாரை பார்த்தாலும் உடனே மொபைலை எடுத்து செல்பிஎடுப்பது இப்போது ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது. மேலும் செல்பி எடுக்கும்போது ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகமாக உள்ளது.
இந்நிலையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரபு பட்டாரா, திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு, வேனில் காட்டுப்பகுதி வழியாக திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது காயமடைந்த கரடி ஒன்றுடன், பிரபு பட்டாரா செல்பி எடுக்க முயன்றுள்ளார். செல்பி எடுக்க முயற்சித்தபோது கால்தவறி அவர் கரடி அருகே விழுந்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கரடி பிரபுவை கடுமையாக தாக்கியுள்ளது.
அவருடன் சென்றவர்கள் பிரபுவை காப்பாற்ற முயற்சித்த போதும் முயற்சி பலனளிக்கவில்லை. கரடி தாக்கியதில் பிரபு பரிதாபமாக உயிரிழந்தார். மீட்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பிரபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். செல்பி மோகத்தால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.