1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 26 செப்டம்பர் 2022 (11:37 IST)

வீட்டுக்கு தெரியாம முதல்வரை பாக்க வந்த மாணவன்! – காரணத்தை கேட்டு அதிர்ச்சி!

Pinarayi Vijayan
கேரளாவில் வீட்டுக்கு தெரியாமல் பள்ளி மாணவன் கேரள முதல்வரை சந்திக்க சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் குற்றியாடி வேளம் பகுதியை சேர்ந்த ராஜீவ் என்பவரது மகன் தேவானந்த். 16 வயதான தேவானந்த் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில் உள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன் வீட்டு முன்பு ஆட்டோவில் வந்திறங்கிய தேவானந்த் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலரிடம் முதல்வரை பார்க்க வேண்டுமென கேட்டுள்ளார்.


அந்த சிறுவனை விசாரித்த போலீஸார் சிறுவனை ம்யூசியம் காவல் நிலையத்தில் ஒப்படைத்ததுடன், சிறுவனின் பெற்றோர்களுக்கும் தகவல் கொடுத்துள்ளனர். இதற்குள்ளாக பள்ளி மாணவன் ஒருவன் தன்னை தேடி வந்ததை அறிந்த முதல்வர் பினராயி விஜயன் அந்த சிறுவனை தன்னிடம் அழைத்து வரும்படி சொல்லியுள்ளார்.

பின்னர் மாணவரும், அவரது பெற்றோரும் முதல்வரை சந்தித்தனர். அப்போது சிறுவன் தனது தந்தை ஒரு இடத்தில் கடன் வாங்கி இருந்ததாகவும், அவர்கள் தவணை கட்டாததால் வந்து மிரட்டுவதால் குடும்பம் சோகத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறிய முதல்வர், பெற்றோருக்கு தெரியாமல் இப்படி வரக்கூடாது என சிறுவனுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.