1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 5 டிசம்பர் 2018 (15:52 IST)

நள்ளிரவில் பாம்பை பிடிக்க முதல்வருக்கு போன் செய்த நபர்

புதுவையில் நபர் ஒருவர் வீட்டிற்குள் பாம்பு புகுந்த பதற்றத்தில் முதல்வருக்கு போன் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுவை மாநிலம் மணவெளியை சேர்ந்த ராஜா என்பவர் நேற்று தனது வீட்டில் மனைவி மகளுடன் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்டது. 
 
இதையடுத்து முழித்துப்பார்த்த ராஜா சமயலறையில் கருநாகப் பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக 100க்கு போன் செய்தார். அவர்கள் வனத்துறை அதிகாரிளின் போன் நம்பரை கொடுத்து அதற்கு போன் செய்ய சொன்னார்கள். அதற்கு போன் செய்தால் யாரும் எடுக்கவில்லை.
நேரம் ஆக ஆக பதற்றமடைந்த அவர், உடனடியாக முதலமைச்சர் நாராயணசாமிக்கு போன் செய்துவிட்டார். போனை எடுத்த முதல்வரிடம் நடந்தவற்றை கூறினார் ராஜா. யாரும் பயப்படாதீர்கள் உடனடியாக  வனத்துறை அதிகாரிகளை அனுப்புகிறேன் என நாராயணசாமி கூறினார்.
 
சற்று நேரத்தில் ராஜா வீட்டிற்கு இரு வனத்துறை அதிகாரிகள் பறந்தனர். அங்கிருந்த பதுங்கி இருந்த பாம்பை பிடித்தனர். சற்று நேரம் கழித்து முதலமைச்சர் எண்ணில் இருந்து ராஜா எண்ணிற்கு போன் வந்தது. பாம்பை அப்புறப்படுத்திவிட்டார்களா என ராஜாவிடம் முதல்வர் கேட்டறிந்தார். முதல்வரின் இந்த செயலை பலர் பாராட்டி வருகின்றனர்.