வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 19 டிசம்பர் 2016 (15:29 IST)

செல்லாத நோட்டுகள் மூலம் 8 ஆயிரம் கிலோ தங்கம் இறக்குமதி!

ஐதராபத்தில் நவம்பர் 8ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை பழைய ரூபாய் நோட்டுக்கள் மூலம் ரூ.2 ஆயிரத்து 700 கோடி மதிப்பிலான தங்கம் வாங்கப்பட்டுள்ளது.


 

ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பின்னர் நவம்பர் மாதத்தில் ஐதராபாத் நகரில் மட்டும், பழைய ரூபாய் நோட்டுக்களைக் கொண்டு ரூ. 2 ஆயிரத்து 700 கோடி மதிப்பளவில் தங்கக் கட்டிகள் வாங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

நவம்பர் 8ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை ஐதராபாத் நகரில் எட்டாயிரம் கிலோ தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது என்று அமலாக்கப்பிரிவு தகவல்கள் தெரிவித்துள்ளதாக தி எக்கனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

டிசம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து 10ஆம் தேதி வரை மட்டும் ஆயிரத்து 500 கிலோ தங்கம் இறக்குமதியாகி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையை அடுத்து தங்க விற்பனையாளர்கள் மற்றும் நகைக்கடைகளில் இருந்து பழைய ரூபாய் நோட்டுக்களைக் கொண்டு பெருமளவு தங்கம் வாங்கப்பட்டு உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐதராபாத்தில் உள்ள முசாதிலால் ஜுவல்லர்ஸ் தொடர்பான வழக்கை மேற்கோள் காட்டியுள்ள அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

குறிப்பிட்ட நிறுவனம் 5 ஆயிரத்து 200 வாடிக்கையாளர்களிடம் இருந்து தங்கம் கேட்டு கோரிக்கை வந்ததாகவும் அதற்கு முன் கூட்டியே பணம் வழங்கப்பட்டது என்றும் கூறுகிறது. முசாதிலால் ஜுவல்லர்ஸ் ரூ. 100 கோடியை வங்கிக் கிளையில் டெபாசிட் செய்து உள்ளது. அதை நான்கு தங்க வியாபாரிகளுக்கும் வழங்கியுள்ளது.

ஆனால், அருகாமையில் இருக்கும் கடைகளில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைப் பார்த்தபோது முசாதிலால் ஜுவல்லர்ஸ் கடைக்கு வாடிக்கையாளர்கள் வந்ததற்கான பதிவுகள் இடம்பெறவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நவம்பர் மாதம் மட்டும் ஐதராபாத் நகருக்கு 8 ஆயிரம் கிலோ தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது என்று ’ஏர் கார்கோ’ தகவல்கள் தெரிவித்துள்ளன.

கருப்புப் பணத்தை ஒழிப்பதாக கூறிய பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பால் சில தனியார் முதலாளிகள் நல்ல லாபம் அடைகின்றனரே ஒழிய, ஏழை, எளிய மக்கள் பெரும் சிரமத்தையே அனுபவித்து வருகின்றனர் என்று சமூக ஆர்வலர் ஒருவர் கூறியுள்ளார்.