ஒரு வருடமாக 2000 ரூபாய் நோட்டே அச்சடிக்கப்படவில்லை – அதிர்ச்சி தகவல்!
மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதிய 2000 ரூபாய் நோட்டுகள் 2019- 2020 ஆம் ஆண்டு காலத்தில் அச்சடிக்கப்படவே இல்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
2000 ரூபாய் நோட்டுகள் மத்திய அரசால் 2016- 2017 ஆம் நிதியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டன. அதில் இருந்து அந்த நோட்டின் பணப்புழக்கம் கணிசமாக குறைந்துகொண்டே வந்தது. இதுகுறித்து சில மாதங்களுக்கு முன்னர் 2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சிடுவது நிறுத்தப்பட்டுவிட்டதாகவும் ஏடிஎம்களில் இனி 2000 நோட்டு கிடைக்காது என்றும் செய்திகள் வெளியானது. ஆனால் 2000 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதை நிறுத்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாகூர் அவர்கள் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் இப்போது 2019-2020ம் ஆண்டில் ரூ2,000 நோட்டு ஒன்றுகூட அச்சடிக்கவில்லை என்று ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் பணப்புழக்கம் குறைந்ததுதான் என சொல்லப்படுகிறது. ஆனால் ரூ500, ரூ100 நோட்டுகளின் புழக்கம் கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்திருக்கின்றன.