செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 21 ஜூலை 2020 (08:09 IST)

திருப்பதியில் 15 நாட்கள் முழு ஊரடங்கு: அதிர்ச்சியில் பொதுமக்கள்

கொரோனா வைரஸ் பாதிப்பு நாடு முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில் இந்தியாவில் சுமார் 11 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆந்திர மாநிலம் திருப்பதியில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிக அதிகமாக பரவி வருகிறது. குறிப்பாக திருப்பதி திருமலையில் பணியாற்றும் 15 அர்ச்சகர்கள் உட்பட 160 பேருக்கு கொரோனா  வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் இதனையடுத்து அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது 
 
மேலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சீனிவாச மூர்த்தி என்ற முன்னாள் தலைமை அர்ச்சகர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பெரிய ஜீயர் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் என்பவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்நிலையில் திருப்பதியில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் திருப்பதியில் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதாக சித்தூர் மாவட்ட ஆட்சியர் நாராயணா பரத்குப்தா அவர்கள் அறிவித்துள்ளார். இதனை அடுத்து திருப்பதி முழுவதும் காலை 6 மணி முதல் 11 மணி வரை மட்டுமே கடைகள், உணவகங்கள் திறந்திருக்க வேண்டும் என்றும் 11 மணிக்குப் பின்னர் பால், மருந்து கடைகள் மட்டுமே திறந்திருக்க வேண்டும் என்றும் 11 மணிக்கு மேல் பொது மக்கள் வெளியில் நடமாட அனுமதி இல்லை என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கூறியுள்ளார்
 
ஏற்கனவே திருப்பதிக்கு அருகில் உள்ள காளஹஸ்தியில் ஒரு வாரம் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.