வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 சிறப்பு நிகழ்வுகள்
Written By
Last Modified: திங்கள், 25 மார்ச் 2019 (09:35 IST)

பணப்பிரச்சனை: புஷ்பவனம் குப்புசாமி - அனிதா குப்புசாமி கடும் வாக்குவாதம்!!

தேர்தல் பறக்கும் படையினர் தங்களின் பணத்தை பறித்ததால் புஷ்பவனம் குப்புசாமி - அனிதா குப்புசாமி ஆகியோர் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
 
பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதால் நாடெங்கிலும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். அதன்படி 50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணமின்றி எடுத்து செல்லும் பணத்தை பறக்கும்படையினர் பறிமுதல் செய்து வருகிறார்கள்.
 
அந்தவகையில் பிரபல நாட்டுப்புற பாடகர்களான புஷ்பவனம் குப்புசாமி - அனிதா குப்புசாமி ஆகியோர் சேலம் தாரமங்கலத்தில் நடைபெற உள்ள கோவில் திருவிழாவில் பாட்டுபாடுவதற்கான அட்வான்ஸ் தொகையை(57 ஆயிரம்) வாங்கிக்கொண்டு காரில் ஊர் திரும்பினர்.
 
அப்போது தேர்தல் பறக்கும்படையினர் அவர்களின் காரை வழிமறித்து சோதனை நடத்தினர். அவர்களிடம் இருந்து 57 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இதனால் கடும் கோபமடைந்த புஷ்பவனம் குப்புசாமி - அனிதா குப்புசாமி அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனடியாக அங்கு வந்த கோவில் நிர்வாகிகள் இது தாங்கள் கொடுத்த பணம் தான் என கூறினர்.
 
இதையடுத்து தேர்தல் அதிகாரிகள் பணத்தை அவர்களிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனால் சற்று நேரம், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.