தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நிறைவு..! சென்னையில் வாக்குப்பதிவு மந்தம்..!!
தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மாலை 5 மணி நிலவரப்படி 63.20 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் முதல் கட்டமாக தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் இன்று தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.
தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இருப்பினும் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் வாக்களிக்க பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை. மேலும் ஒரு சில இடங்களில் தேர்தல் புறக்கணிப்பு போராட்டமும் நடைபெற்றது. குறிப்பாக சென்னையில் மூன்று தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாக நடைபெற்றது.
மாலை 5 மணி நிலவரப்படி 63.20 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மாலை 6 மணிக்கு முன்பு வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்த பொதுமக்கள் டோக்கன் பெற்று வாக்குகளை செலுத்தி வருகின்றனர். அரசியல் கட்சியினர் மற்றும் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் மொத்தம் பதிவான வாக்குகளின் முழு விவரங்களை தேர்தல் அதிகாரிகள் இன்று இரவுக்குள் அறிவிப்பார்கள் என தெரிகிறது.