நீங்களா ? நானா ? பார்போம் .. – எடப்பாடிக்கு உதயநிதி சவால் !
தமிழக முதலமைச்சர் எடபாடி பழனிச்சாமிக்கு திமுகவின் உதயநிதி ஸ்டாலின் சவால் ஒன்றை விடுத்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலினின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் திமுக கூட்டங்களில் அதிகளவில் கலந்துகொள்ள ஆரம்பித்துள்ளார். மேலும் தேர்தல் பிரச்சாரங்களிலும் கலந்துகொண்டு தீவிரமாகப் பணியாற்றி வருகிறார். அவருக்கு செல்லும் இடம் எல்லாம் மக்கள் கூட்டம் பெருவாரியான வரவேற்பை அளித்து வருகின்றனர்.
இதன் ஒருகட்டமாக இன்று முதல்வரின் சொந்த தொகுதியான சேலம் மாவட்டம் மல்லூரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டார். அப்போது ’ கலைஞரின் பேரன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன் நான், முதல்வருக்கு ஒரு சவால் விடுகிறேன். தமிழகத்தில் உள்ள எதாவது கிராமத்துக்கு செல்வோம். நம் இருவரில் மக்கள் உங்களிடம் வருகிறார்களா அல்லது என்னை நோக்கி வருகிறார்களா என்பதை பார்ப்போம்.
கலெக்ஷன் - கரப்ஷன் - கமிஷன் ஆகியவை மட்டுமே தாரக மந்திராக செயல்படக் கூடியது அதிமுக ஆட்சி. அதற்கு சரியான உதாரணமே சேலம் எட்டு வழிச்சாலை. அம்மா வழியில் ஆட்சி என்கின்றனர். ஆனால், அந்த 'அம்மா' எப்படி இறந்தார் என்பதை கடைசி வரை சொல்லவில்லை. முதல்வருக்கே பாதுகாப்பில்லாத அரசாங்கம் தான் தமிழகத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.’ என பேசினார்.