வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 6 நவம்பர் 2020 (12:42 IST)

வீட்டுக்குள் குட்டி தியேட்டர்; ப்ரீமியம் விலையில் சோனி ஆண்ட்ராய்டு டிவி!

சோனி நிறுவனத்தின் 65 இன்ச் நவீன வசதிகள் கொண்ட ஆண்ட்ராய்டு டிவி விழாக்காலத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சியால் மக்கள் எல்சிடி, எல்இடி டிவிக்களை தாண்டி ஆண்ட்ராய்டு டிவி வரை வந்துவிட்டார்கள். தற்போது சினிமா முதல் அனைத்தும் ஓடிடி மயமாகிவிட்ட நிலையில் இணைய வசதி கொண்ட ஆண்ட்ராய்டு டிவிக்களின் விற்பனை இந்திய சந்தையில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சோனி நிறுவனம் தனது நவீன வசதிகள் கொண்ட OLED ஆண்ட்ராய்டு டிவியை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. OLED மாடலில் AH8 மாடலான இது 4K HDR Display கொண்டது. ஆண்ட்ராய்டு இயங்கு தள வசதியுடன் Trilimunous பேனல், சர்பேஸ் ஆடியோ, அல்டிமேட் இமேஜ் பிராசஸர் தொழில்நுட்பமும் கொண்டுள்ளது.

அமேசான் அலெக்ஸா, ஆப்பில் ஏர் ப்ளே ஆகிய சாதனங்கள் மூலம் டிவியை இயக்குவதற்கான வசதியும் உள்ளது. இதில் ஸ்பீக்கர்களுக்கு தனி ஸ்பேஸ் இல்லாமல் டிவி டிஸ்பிளேவே ஸ்பீக்கராகவும் பயன்படுத்தப்படுவதால் டிவி வைக்கப்பட்டுள்ள அறையின் தன்மையை பொறுத்து சரவுன்ட் சவுண்ட் நிர்வகித்துக் கொள்ளும் வசதியும் உள்ளது.

இந்திய சந்தையில் இதன் விலை ரூ.3,39,900 ஆகும். எனினும் அறிமுக விலை, ஆன்லைன் தள்ளுபடி, வங்கி கார்டு உபயோகித்தால் கிடைக்கும் கழிவு போன்றவற்றினால் ரூ.2,79,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாடலின் 55 இன்ச் திரை கொண்ட டிவியும் விரைவில் அறிமுகம் ஆக உள்ளது.