புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. தலங்கள்
Written By Sasikala

முருக பெருமானின் பிரசித்திப்பெற்ற ஆறுபடை வீடுகள் என்ன...?

திருப்பரங்குன்றம்: முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதன்மையானது, திருப்பரங்குன்றம் திருத்தலம். 


சூரபதுமனிடம் அடிமைப்பட்டுக் கிடந்த தேவர்களை, அந்த அசுரனை வதம் செய்து விடுவித்தார், முருகப்பெருமான். அதற்கு நன்றி செலுத்தும் விதமாக, தேவேந்திரன் தன்னுடைய மகளான தெய்வானையை முருகப்பெருமானுக்கு  திருமணம் செய்து வைத்தான். அதன்படி தனது மனைவி தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் முருகப்பெருமான் காட்சி தருகிறார்.
 
திருச்செந்தூர்:
 
ஆறுமுகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது திருத்தலம் இது. மேலும் கடற்கரையோரம் அமைந்த ஒரே திருக்கோவிலும் இதுதான். சூரபதுமனை,  முருகப்பெருமான் வதம் செய்த இடம் இதுவாகும். இங்கு ராஜ அலங்காரத்தில் சண்முகனாக, கைகளில் அன்னை தந்த வேல் தாங்கி வெற்றிவீரனாக அருள்கிறார்  முருகப்பெருமான். இங்கு நடைபெறும் கந்தசஷ்டி விழாவும், அதன் ஒருபகுதியாக நடைபெறும் சூரசம்ஹார நிகழ்வும், உலக பிரசித்திப்பெற்றதாகும். 
 
பழநி:
 
கந்தனின் ஆறுபடை வீடுகளில் மூன்றாவது தலம் இது. பழநி என்ற பெயர் தற்போது நிலைத்திருந்தாலும், இதன் ஆதிகால பெயர் ‘திருவாவினன்குடி’ என்பதாகும்.  மலையடிவாரத்தில் சற்று மேல்புறத்தில் ஒரு ஆலயம் அமைந்திருக்கிறது. மலை உச்சியில் உள்ள முருகனின் சிலையானது, நவபாஷாணத்தால் செய்யப்பட்டது.  இதனைச் செய்தவர், போகர் என்னும் சித்தர் ஆவார். 
 
சுவாமிமலை:
 
முருகப்பெருமான், தன் தந்தையான ஈசனுக்கு உபதேசம் செய்த இடம் இந்த சுவாமிமலை. இது முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் நான்காவது திருத்தலம்.  கோவிலின் நுழைவு வாசலில் சிவனின் இடது தோளில், குழந்தையாக வடிவேலன் அமர்ந்து உபதேசம் செய்யும் காட்சி சுதை சிற்பமாக உள்ளது. 
 
திருத்தணி: 
 
திருச்செந்தூரில் சூரபதுமனை வதம் செய்தபிறகு வந்து கோபம் தணித்த இடம் இது என்பதால், இந்த ஆலயத்தில் முருகப் பெருமானின் பிரசித்திப் பெற்ற நிகழ்வான  சூரசம்ஹாரம் நிகழ்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முருகப் பெருமானின் ஐந்தாவது வீடு இது. முருகப்பெருமான், குறத்திப் பெண்ணான வள்ளியை மணம்  புரிந்து கொண்டதும் இந்தத் தலத்தில்தான்.
 
பழமுதிர்சோலை:
 
பசுமையான சூழலில் மலை மீது அமைந்துள்ள இந்த ஆலயத்தில் வள்ளி-தெய்வானையுடன் தம்பதி சமேதராக முருகப்பெருமான் அருள்புரிந்து வருகிறார். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஆறாவது திருக்கோவில் ஆகும். தொடக்க காலத்தில் முருகனின் வேலுக்கும், தற்போது சிலை ரூபத்தில் பிரதிஷ்டை  செய்து வணங்கும் முறை உள்ளது.