வெள்ளி, 19 டிசம்பர் 2025
  1. ஆன்மிகம்
  2. »
  3. ஆன்மிகம்
  4. »
  5. தலங்கள்
Written By Webdunia

திருவரங்கம் என்கின்ற ஸ்ரீரங்கம்

திருவரங்கம் என்கின்ற ஸ்ரீரங்கம்
Webdunia
எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணன் எழுந்தருளி அருள் பாலிக்கும் திவ்ய தேசங்களை ஒவ்வொன்றாகச் சென்று பார்க்குமுன், அவற்றைப் பற்றிய பின்னணியை ஓரளவு அறிந்து கொண்டால் நேரில் சென்று நம் பெருமானின் தரிசனம் கிட்டும் போது மேலும் பயனுள்ளதாக இருக்கும்.

பயணவசதி கருதி சோழநாட்டுத் திருப்பதிகளாகத் திருச்சிராப்பள்ளி, தஞ்சையைச் சுற்றி அமைந்துள்ள திவ்ய தேசங்களை முதலில் பார்ப்போம்.

திருவரங்கம் என்கின்ற ஸ்ரீரங்கம

ஸ்ரீவைணவத் திருப்பதிகளில் முதலாவதாகவும், பூலோக வைகுண்டம் என்றும் கோயில் என்றும் சிறப்புப் பெயர் பெற்றதுமான திருவரங்கம் என்கின்ற ஸ்ரீரங்கம் சென்று முதலில் ஸ்ரீ ரங்கநாதனைத் தரிசிக்கலாம்.

அமைந்துள்ள இடம் : -
காவிரி, கொள்ளிட நதிகள் சூழ்ந்து ஓர் அழகான தீவு போல் அமைந்துள்ளது ஸ்ரீரங்கம்.
திருச்சி - விழுப்புரம் ரயில் பாதையில் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்திலிருந்து ஒரு 1 கி.மீ. தொலைவில் திருவரங்கனின் கோயில் அமைந்துள்ளது. திருச்சியிலிருந்து பஸ்ஸில் சென்றால் தெற்கு கோபுர வாசலிலேயே இறங்கலாம். தங்குவதற்கு வசதியான விடுதிகளும் சத்திரங்களும் நிறைந்த இடம்.

மூலவர் : -
ஸ்ரீ ரங்கநாதன், ஆதி சேஷன் மீது துயில் கொண்ட திருக்கோலம். தெற்கு முகம் நோக்கி சயனித்திருக்கிறார். இவருக்குப் பெரிய பெருமாள், நம்பெருமாள், அழகிய மணவாளன் என்ற பெயர்களும் உண்டு.

தாயார் : -
திருவரங்கம் என்கின்ற ஸ்ரீரங்கம்
Webdunia
ஸ்ரீ ரங்கநாயகி என்கின்ற ரங்க நாச்சியார்.

உத்ஸவர் : -
நம்பெருமான் என்ற சிறப்புப் பெயர் பெற்றவர். நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார்.

தீர்த்தங்கள் : -
சந்த்ர புஷ்கரிணி, காவேரி, கொள்ளிடம்.

தலவிருட்சம் : -
புன்னை மரம்

விமானம் : -
ப்ரணவாக்ருதி விமானம்.

சிறப்பம்சம்: -
எம்பெருமான் எழுந்தருளியுள்ள தலங்களில் ஸ்ரீரங்கம், ஸ்ரீமுஷ்ணம், திருவேங்கடம், சாளக்ராமம், நைமிசாரண்யம், தோதாத்ரி, புஷ்கரம் மற்றும் பத்ரிநாத் ஆகிய இந்தக் கோயில்கள் தானாகவே உண்டான தலங்களாக - ஸ்வயம்வ்யக்த ஷேத்திரங்கள் என்றழைக்கப்படுகின்றன. அரங்கனிடம் சரணாகதி அடைந்து, அவனின் திருவடிகளைப் பற்றி வாழ்ந்து வந்த தொண்டரடிப்பொடி ஆழ்வார் நந்தவனம் அமைத்து கைங்கர்யம் செய்து வந்தார். திருமங்கை ஆழ்வார் திருமதில் கைங்கர்யம் செய்தார்.


திருவரங்கம் என்கின்ற ஸ்ரீரங்கம்
Webdunia
அரையர் சேவை: -
திவ்யப் பிரபந்தங்களை ராகதாளங்களுடன் பாடி, ஆடும் முறையை அரையர் சேவை என்ற பெயரின் ஸ்ரீமந் நாதமுனிகள் தொடங்கி வைத்தார். இன்றும் இப்பெயரில் அரையர் சேவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மற்ற சன்னதிகள் : -
கம்பராமாணயம் இங்கு தான் அரங்கேற்றப்பட்டது என்று வரலாறு கூறுகிறது. அப்படி அரங்கேற்றம் நடைபெற்ற போது தலையசைத்து ஆமோதித்த `மேட்டு அழகிய சிங்கர்‘ என்னும் ஸ்ரீநரசிம்ம மூர்த்தி இங்கு கோயில் கொண்டுள்ளார்.

ஸ்ரீதன்வந்தரி பகவானின் சன்னதி வேறெங்கும் காணக் கிடைக்காது. பரமபதவாசலுக்கு வடக்கிலும், சந்த்ர புஷ்கரிணிக்கு மேற்கிலுமாக இச்சன்னதி அமைந்துள்ளது.

திருவரங்கம் என்கின்ற ஸ்ரீரங்கம்
Webdunia
மற்றும் ஸ்ரீராமர், ஸ்ரீசக்கரத்தாழ்வார், நின்ற நிலையில் உள்ள 20 அடி உயரமுள்ள மூலஸ்தான கருடாழ்வார், தனித்தனியாகப் பன்னிரண்டு ஆழ்வார்கள் அனைவருக்கும் சன்னிதிகள் உள்ளன.

தங்க விமானம்: -
மூலவர் ரங்கநாதர் கர்ப்பக்ருஹத்தின் மேல் தங்க விமானத்தில் தென்பகுதியில் பரவாசுதேவர் தங்க விக்ரஹம் உள்ளது. எம்பெருமானைத் தரிசித்து விட்டு வரும் பொழுது, தங்க விமானத்தையும் பரவாசுதேவரையும் தரிசிப்பது வழக்கம்.

விழாக்கள்: -
மார்கழி மாதம் வரும் வைகுண்ட ஏகாதசி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

மங்களாசாஸனம்: -
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், குலசேகராழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப் பொடியாழ்வார், திருப்பாணாழ்வார் என மதுரகவி ஆழ்வானைத் தவிர மற்ற 11 ஆழ்வார்களும் மொத்தம் 247 பாசுரங்கள் பாடி மங்களாசாஸனம் செய்துள்ளனர்.

சில பாசுரங்கள

திருமாலை - 2, தொண்டரடிப்பொடி ஆழ்வார்

பச்சைமா மலைபோல் மேனி
பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா! அமர ரேறே!
ஆயர்-தம் கொழுந்தே! என்னும்,
இச்சுவை தவிர யான்போய்
இந்திர லோக மாளும்,
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரந்கமா நகரு ளானே!

பெரிய திருமொழி - 5, திருமங்கையாழ்வார்

ஏனாகி யுலகிடந்தன் நிரு நிலனும் பெருவிசும்பும்,
தானாய பெருமானைத் தன்னடியார் மனத்தென்றும்
தேனாகி யமுதாகித் திகழ்ந்தானை, மகிழ்ந்தொருகால்
ஆனாயன் ஆனானைக் கண்டதுதென் னரங்கத்தே