மனைவியை அடித்த ஹாலிவுட் நடிகர்; படத்தை விட்டு நீக்கிய வார்னர் ப்ரோஸ்! – ரசிகர்கள் குமுறல்
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் மனைவியை அடித்த விவகாரத்தால் பிரபலமான படத்தின் வில்லன் பாத்திரத்திலிருந்து விலக்கப்பட்டுள்ள சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹாலிவுட்டில் வெளியான பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்தில் கேப்டன் ஜாக் ஸ்பேரோ கதாப்பாத்திரத்தில் நடித்து உலக புகழ் பெற்றவர் ஜானி டெப். தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ள இவர் தற்போது தனது முன்னாள் மனைவியை தாக்கியதாக லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால் ஏகப்பட்ட சர்ச்சைகளை சந்தித்து வருகிறார்.
அவரது முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்டை தாக்கியதாக அவர் மீது விசாரணை நடைபெற்றதை தொடர்ந்து அவருக்கு எதிராக பலர் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வந்தனர். முன்னதாக வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனத்தின் பிரபலமான “ஃபெண்டாஸ்டிக் பீஸ்ட்” படத்தில் முக்கிய வில்லன் கதாப்பாத்திரமான க்ரிண்டல்வால்ட் பாத்திரத்தில் ஜானி டெப் நடித்திருந்தார். இந்த படத்தின் மூன்றாம் பாகம் 2022 வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு பிரச்சினையால் க்ரிண்டல்வால்ட் பாத்திரத்திலிருந்து அவரை விலகிக்கொள்ள வார்னர் ப்ரோஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதை சமூக வலைதளங்களில் ஜானி டெப் பகிர்ந்து கொண்டதை தொடர்து பலர் #JusticeForJohnnyDepp என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்ய தொடங்கியுள்ளனர்.