புதன், 27 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (13:18 IST)

புரூஸ் லீக்காக பொய்யாக நடித்தேன்!! – பல வருட ரகசியத்தை உடைத்த ஜாக்கிசான்

ஆரம்ப காலங்களில் ஸ்டண்ட்மேனாக இருந்து ஹீரோவாக மாறி உலக முழுவது ரசிகர்களை ஈர்த்த ஜாக்கிசான், தனது ஆதர்ச நாயகன் புரூஸ் லீ பற்றிய ரகசியம் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ள வீடியோ வெளியாகியுள்ளது.

ஹாங்காங் மார்ஷியல் ஆர்ட்ஸ் திரைப்படங்களை உலகம் முழுவதும் உள்ளவர்கள் திரும்பி பார்த்தார்கள் என்றால் அதற்கு காரணம் புரூஸ் லீ. அவரது சண்டை போடும் வேகத்தை படம் பிடிக்க அந்த காலத்து கேமராக்களே தடுமாறின என்பது வரலாறு. புரூஸ் லீயின் படங்களில் அடியாளாக, ஸ்டண்ட்மேனாக நடித்து பின்னாளில் ஹாலிவுட் வரை பிரபலமாகி, இன்னமும் குட்டீஸ்களின் சூப்பர் ஸ்டாராய் வலம் வருபவர் ஜாக்கி சான். தனது திரைப்பட நுழைவுக்கு ப்ரூஸ் லீ ஒருவகையில் காரணம் என பல மேடைகளில் பேசியிருக்கிறார் ஜாக்கிசான்.

சமீபத்தில் ப்ரூஸ் லீயின் மகள் ஷானன் லீ தனது இன்ஸ்டாகிராமில் ஜாக்கிசான் பேசும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் பேசும் ஜாக்கிசான் “எண்டர் தி டிராகன் திரைப்படத்தில் நான் ஸ்டண்ட்மேனாக அப்போது நடித்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு சண்டை காட்சிக்காக என்னை ப்ரூஸ் லீ அடிப்பது போல் படம் பிடிப்பு நடந்தது.

கேமரா எனக்கு பின்னால் இருந்தது. புரூஸ் லீ முன்னால் நின்று கொண்டிருந்தார். நான் அவரை நோக்கி வேகமாக ஓடினேன். திடீரென்று என் கண்கள் இருட்ட தொடங்கின. எனக்கு என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை. மெதுவாகதான் புரிய வந்தது ப்ரூஸ் லீ கையில் இருந்த கம்பால் என்னை அடித்தார் என்பது!

கேமரா படம் பிடித்து கொண்டிருந்ததால் அவர் நடிப்பதை நிறுத்தவே இல்லை. படப்பிடிப்பு முடிந்ததும் நான் சரிந்து விழுந்தேன். உடனே பாய்ந்து வந்த ப்ரூஸ் லீ என்னை தாங்கி பிடித்து கொண்டார். என்னிடம் “மன்னித்து விடு நண்பா!” என்று கூறினார்.

அவரது அண்மையில் இருக்க விரும்பியதால் நான் தொடர்ந்து வலிப்பது போல பொய்யாக நடித்தேன். அன்றைய பொழுதுகள் என்னால் மறக்க முடியாதவை” என்று கூறியுள்ளார்.

தன் வாழ்நாள் காலத்தில் ப்ரூஸ் லீ நடித்தது வெறும் 5 படங்கள்தான். ஆனால் அவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உருவானார்கள். அவரது கடைசி படமான “எண்டர் தி ட்ராகன்” உலகம் முழுவதும் வெளியாகி வசூல் சாதனையை படைத்தது. ஆனால் அந்த படம் வெளியாகும் முன்னரே ப்ரூஸ் லீ இறந்துவிட்டதுதான் வரலாற்று சோகம்.