ஆவணி மாதத்தின் சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா....?
ஆவணியில் சூரியன் தன் சொந்த வீட்டில் ஆட்சி பெற்று வலுவாக அமர்கிறார். சூரியனே ஆத்மகாரகன் என்றும், பிதுர்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். இதன் காரணமாக சூரியன் வலுப்பெறும்போது எந்த காரியத்தை செய்தாலும் சிறப்பான பலனை தரும்.
தமிழ் மாதங்களில் ஒவ்வொன்றிற்கும் தனி முக்கியத்துவம் உண்டு. சித்திரை தொடங்கி பங்குனி வரை பல்வேறு விசேஷங்கள் வருவதுண்டு. அதில், ஒரு சில மாதங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.
'ஆடி போய் ஆவணி வந்தால் நன்மை கூடி வரும்" என்பதைப் போல் ஆவணி மாதம் மிகச் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. ஆடியில் சில நிகழ்ச்சிகள் செய்யமாட்டார்கள். ஆவணி தொடங்கியதும், உடனே அந்த நிகழ்ச்சியினை வைத்துவிடுவார்கள். ஆவணி மாதத்தில்தான் விநாயகர் அவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகியன நிகழ்ந்ததாக சொல்வார்கள்.
ஆவணி மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் ஞாயிறு என்றாலே சூரியன். அது மட்டுமின்றி, ஆவணி மாதத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைதோறும் காலை 6.00 - 7.00 மணி வரை சூரிய ஓரையே இருக்கும். ஆவணியில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆன்மீக அறிவைப் புகட்டினால், அவர்கள் அதில் சிறந்து விளங்குவார்கள். தேகநலனுக்காக சூரிய நமஸ்காரப் பயிற்சி எடுப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் தொடங்குவது மிகவும் விசேஷமாகும்.
விநாயகர் சதுர்த்தி: விநாயகருக்கு உரிய விரதங்களுள் மிக விசேஷமானது விநாயகர் சதுர்த்தி. விநாயகரை போற்றி வரும் ஆவணி சதுர்த்தியான விநாயகர் சதுர்த்தியில் விரதமிருந்து வழிபட அனைத்து நன்மையும் கிடைக்கும்.
ஆவணி மாதத்தில் கிரகப்பிரவேசம் செய்தால் அந்த வீட்டில் நீண்ட நாட்கள் தங்கலாம். திருமணம் செய்தால் வாழ்க்கை சிறப்பாக அமையும். விவசாயத்திலும் ஆவணி மாதம் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது.