வியாழன், 14 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Modified: புதன், 7 செப்டம்பர் 2022 (10:16 IST)

வாமன ஏகாதசி எந்த நாளில் கொண்டாடப்படுகிறது தெரியுமா...?

Vamana Ekadasi
ஆவணி மாத வளர்பிறை துவாதசி நாளில் வாமன ஏகாதசி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் உலகளந்த பெருமாளைத் தரிசனம் செய்வது பல்வேறு சிறப்புகளை வழங்கும்.


மகாபலி, பிரகலாதனனின் பேரன். 100 அசுவமேத யாகங்கள் செய்தால் இந்திரப் பதவியை அடையலாம் என்று முடிவு செய்து யாகங்களைச் செய்யத் தொடங்கினான். அவ்வாறு அவன் யாகம் செய்து முடித்து விட்டால் தேவலோகம் முழுமையும் நிரந்தரமாக அவன் வசமாகிவிடும் என்பதால் தேவர்கள் அனைவரும் மகாவிஷ்ணுவிடம் சரண் அடைந்து தங்களைக் காக்குமாறு வேண்டினர்.

அதற்கு மகாவிஷ்ணு, "மகாபலி முறைப்படி யாகம் செய்கிறான். மேலும், அவனுக்கு குருவின் பரிபூரண அனுக்கிரகம் உள்ளது. அவன் எப்போது அவன் குருவால் சபிக்கப்படுகிறானோ அப்போதே அவனை என்னால் வெல்ல முடியும்” என்று கூறினார்.

மகாவிஷ்ணுவின் பதிலைக் கேட்ட தேவர்களின் தாயான அதிதி, காஷ்யப முனிவரிடம் `மகாவிஷ்ணு வின் அருளைப் பெற என்ன வழி?’ என்று கேட்டாள். அப்போது காஷ்யபர் பூஜைகளில் உயர்ந்ததான பயோ விரதத்தை உபதேசித்தார். அதிதியும் அந்த விரதத்தை சிரத்தையாக மேற்கொண்டாள். அவளின் பூஜைக்கு மகிழ்ந்த விஷ்ணு சிறு பாலகனாகத் தோன்றி அவளுக்கும் காஷ்யபருக்கும் காட்சி கொடுத்தார்.

அவ்வாறு அவர் காட்சி கொடுத்த தினம் ஆவணி மாத வளர்பிறை துவாதசி திதி. அந்த பாலக ரூபமே 'வாமனர்' அவதாரம் என்று போற்றப்படுகிறது. மகாவிஷ்ணு முதன் முதலில் முழுமனித வடிவில் தோன்றிய அவதாரமும் வாமன அவதாரமே.  ‘வாமனன்’ என்றால் ‘குள்ளமானவர்’ என்றும் ‘அழகானவர்’ என்றும் பொருள். குள்ளமானவராகத் தோன்றினாலும் உலகையே அளந்து விஸ்வரூபம் எடுத்துச் சிறப்பித்த அவதாரம், வாமன அவதாரம்.

வாமன பாலகனுக்கு கதிரவனே காயத்ரி மந்திரம் உபதேசித்தார். பிரம்மனே முப்புரிநூல் அணிவித்தார். கலைமகள் தன் கை ருத்ராட்ச மாலையை வழங்க சந்திரன் தண்டமும் பூமிதேவி மான் தோலும் கொடுத்தார் என்கிறது புராணம்.