1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (14:35 IST)

வாமன ஏகாதசி நாளில் விரதத்தின் பலன்கள் என்ன...?

Sarva ekadasi
பகவானை வாமனராகவும் ஓங்கி உலகளந்த பெருமாளாகவும் தியானம் செய்து வழிபட வேண்டும். இந்த நாளில் பகவான் தன் சயனக்கோலத்தில் இருக்கும் பெருமாளையும் பூஜை செய்வது சிறப்பு. வழக்கமாக ஏகாதசி விரதம் இருப்பவர்கள், தசமி திதி அன்றே இரவு உணவைத் தவிர்த்து விரதத்தைத் தொடங்க வேண்டும்.


பெருமாளுக்கு உகந்த பாசுரங்களைப் பாராயணம் செய்வது மிகவும் சிறந்தது. ஆண்டாள் மூன்று திருப்பாவைப் பாசுரங்களில் வாமன அவதாரத்தைப் போற்றுகிறாள். ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி என்னும் 3 வதுபாசுரம், அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும் என்று தொடங்கும் 17வது பாசுரம், அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி என்று தொடங்கும் 24 வது பாசுரம் ஆகியவற்றைக் கட்டாயம் பாராயணம் செய்ய வேண்டும். இவற்றைப் பாராயணம் செய்வதன் மூலம் நம்மைப் பிடித்திருக்கும் மனபயமும் நோயும் அகன்று அமைதியான உள்ளமும் ஆரோக்கியமான உடலும் வாய்க்கும் என்கின்றனர் அடியார்கள்.

விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வதும் சிறப்பு வாய்ந்தது. இந்த நாளில் தானம் செய்வது மிகவும் சிறந்தது. குறிப்பாக பசித்தவர்களுக்குத் தயிர்சாதம் தானம் செய்ய, சகல நன்மைகளும் உண்டாகும்.

இந்த நாளில் இரவு உறக்கம் நீக்கி விழித்திருந்து பகவானின் நாமத்தை ஜபம் செய்கிறவர்கள் பூவுலகிலேயே சுவர்க்கத்தில் கிடைக்கும் நன்மைகள் கிடைக்கப்பெற்று வாழ்வார்கள் என்கிறது புராணம். இந்த நாளில் முழுமையாக விரதம் அனுசரிப்பவர்கள் மோட்சத்தை அடைவார்கள் என்று ஏகாதசி மஹாத்மியம் தெரிவிக்கிறது.

துவாதசி அன்று காலை பாரணை முடித்து ஏகாதசி விரதத்தை முடிக்க வேண்டும். துவாதசி நாளிலும் சாத்விகமான உணவுகளை உண்டு பெருமாளை சேவித்து ஏகாதசி விரதத்தை நல்ல முறையில் நிறைவு செய்ய வேண்டும்.