1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By Sasikala
Last Updated : வியாழன், 15 டிசம்பர் 2016 (18:47 IST)

ஸ்ரீ ராம ராஜ்ஜியமும் ஸ்ரீமான் மோடி ராஜ்ஜியமும்

திரேதா யுகமும் மோடி ஜி யுகமும்: அது திரேதா யுகம். ஸ்ரீ ராம சரித்திரத்தில் துர்முகன் ஒருவனது பேச்சைக் கேட்டு ஸ்ரீ ராமா சந்திர மூர்த்தி தன் இல்லாளை, இனியவளை, சீதையை ரகு வம்சத்தின் கீர்த்தியை நிலை நாட்ட, ராஜ தர்மத்தை சுட்டிக் காட்டி, பரிசோதனை செய்கிறார். சீதை தன் கற்பை நிரூபிக்க தீ குளிக்கிறார். தீயும் பூமா தேவியும் சீதையை தாங்கி கொண்டன.

 
இது ஸ்ரீமான் மோடி ஜி யுகம். இங்கு துர்முகன்கள் இல்லை. தன்னை அசுர பலத்துடன் அரியணையில் அமர வைத்த சாமானியனை கருப்புப் பண பறிமுதலை சுட்டிக்காட்டி, பரிசோதனை செய்கிறார். சீதை தன் கற்பை நீருபித்தது போல வங்கிகளிடம் தங்களின் புனிதத் தன்மையை நீருபித்து கருப்பு மையை பெற்றுக் கொண்டன இன்றைய சீதைகள்.
 
அன்றைய சீதை இன்றைய சீதைகள்
 
என்ன சோதனை ! அன்று ஒரு சீதை. இன்று பல சீதைகள். அன்றைய சீதைக்கு தபோவனம். இன்றைய சீதைகளுக்கு வங்கி வனம் /ATM வனம். ஆனாலும் அம்பாணி சீதைகளையும் அதானிகளையும் பரிசோதனை செய்ய மாட்டார் காரணம் அம்பாணி சீதைகளும், அதானி சீதைகளும், மகா பத்தினிகள் அல்லவே.
 
மரணம் எனும் பரிசு
 
அன்றைய சீதை, ஸ்ரீ ராமர் மேல் அளவற்ற அன்பு கொண்டு அவரை பூசித்தார். இன்றைய ATM வன சீதைகள் ஸ்ரீமான் மோடிஜி மீது வெறுப்பு கொண்டு அவரை தூற்றுகிறார்கள். வனத்தில் சீதைக்கு முக்தி கிடைத்தது. ஆனால் இன்றைய சில சீதைகளுக்கு அரிதினும் அரிதான வாழ வழி அற்றவர்களுக்கு மோடி தரும் பரிசு மரணம். உதாரணம் தமிழகத்து சுப்ரமணியன்கள்.
  
திரு பீட்சாதிகள்
 
தசரத சக்கரவர்த்தியின் மகன் ஆன ஸ்ரீ ராமர்க்கு குருகுலத்தில் கற்று தர பட்ட முதல் பாடம் திரு பீட்சாதி அதாவது யாசகம் செய்தல். அது போல ஸ்ரீமான் மோடிஜி தன் மக்களை வங்கிகளிடம் யாசகம் கேட்க வைத்து இருக்கிறார். வரிசையில் நிற்கும் மக்களை பார்த்து நீங்கள் வரிசையில் நிற்பது இதுவே கடைசி முறை என்கிறார் ஸ்ரீமான் மோடிஜி. வரிசையில் நிற்கும் சிலர், நீங்கள் பிரதமராக எங்கள் முன்  நிற்பதும் இதுவே கடைசி முறை என்று பேசிக்கொள்கிறார்கள். ஆனாலும் மோடிஜி சில ரெட்டி காருகளை மட்டும் தன் கஜான அதிபதி ஆக்கிவிட்டார் உதாரணம் தமிழகத்து ரெட்டிகள்.
 
ராஜ சபையின் கம்பீரம்
 
ராஜ சபையில் ஸ்ரீ ராமர் கம்பீரமாக வீற்று அருள் பாலித்தார். வாதங்கள் செய்தார். ஆனால் ஸ்ரீமான் மோடிஜி ராஜ சபைக்கே வருவது இல்லை. ராஜ சபைக்கு வராத ஸ்ரீமான் மோடிஜி மக்கள் சபையில் மட்டும் பேசுவார். அங்குதான் அவரால், அவருக்காக, அவர் மட்டுமே  பேச முடியும். 
 
ராமன் சந்தேகத்திற்க்கு அப்பாற்பட்டவர்
 
திரேதா தொடங்கி டிஜிட்டல் வரை சக்கரவர்த்திகள் மாறி  இருக்கலாம்.  ஆனால் சக்கரவர்த்திகளின் சோதிக்கும் பண்பு மட்டும் மாறவில்லை. அன்றைய சீதை ஸ்ரீ ராமனை கேள்விகள் கேட்கவில்லை. காரணம் ஸ்ரீ ராமன் சந்தேகத்திற்க்கு அப்பாற்பட்டவர். இன்றைய சீதைகள் ஸ்ரீமான் மோடிஜி-யை கேள்விகள் கேட்கின்றன. ஆனால் ஸ்ரீமான் மோடிஜி பதில் சொல்லுவது இல்லை. ஸ்ரீ ராமனை போல சந்தேகத்திற்க்கு அப்பாற்பட்டவரா என்ன ஸ்ரீ மான் மோடி ஜி?

இரா .காஜா பந்தா நவாஸ் ,
பேராசிரியர் 
[email protected]