இந்திய ’மாஸ்டர் பேட்ஸ்மேனை’ வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் ’டெஸ்ட் புயல்’
ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் சிறந்த வீரர் பட்டியலில் டெண்டுல்கரை, விவியன் ரிச்சர்ட்ஸ் பின்னுக்கு தள்ளினார்.
கிரிக்கெட் மாதாந்திர இதழான ‘கிரிக் இன்ஃபோ’ இணையதளத்தின் சார்பில், 44 ஆண்டுகால ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் சிறந்த ஆட்டக்காரர் யார் என்று ஆன் லைன் மூலம் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.
விவியன் ரிச்சர்ட்ஸ் உடன் சச்சின் டெண்டுல்கர்
இதில் முன்னாள் வீரர்கள், வர்ணனையாளர் உள்பட 50 பேர் கொண்ட நடுவர் குழு இதனை நடத்தியது. இதில் 58 சதவீதம் ஆதரவை பெற்ற வெஸ்ட் இண்டீஸ் ’ஜாம்பவான்’ டெஸ்ட் புயல் விவியன் ரிச்சர்ட்ஸ் 179 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார்.
விவியன் ரிச்சர்ட்ஸ் 121 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 24 சதங்கள், 45 அரைச்சதங்கள் உடபட 8540 ரன்களையும் [சராசரி 50.23], 187 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 11 சதங்கள், 45 அரைச்சதங்கள் உட்பட 6,721 ரன்களையும் [சராசரி 47.00] எடுத்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் விவியன் ரிச்சர்ட்ஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி, 1984ஆம் ஆண்டு முதல் 1991ஆம் ஆண்டு வரை 50 போட்டிகளில் பங்கேற்று 27இல் வென்றுள்ளது. இதில் 8 போட்டிகளில் மட்டுமே வெஸ்ட் இண்டீஸ் தோற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் ’மாஸ்டர் பேட்ஸ்மேன்’ சச்சின் டெண்டுல்கர் 68 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தை பிடித்துள்ளார். பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் 66 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தையும், ஆஸ்திரேலிய அதிரடி வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் 29 புள்ளிகளுடன் 4ஆவது இடத்தையும், இந்திய அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி 25 புள்ளிகளுடன் 5ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.