1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 16 மார்ச் 2024 (07:34 IST)

டி 20 உலகக் கோப்பையில் கோலி இல்லாம ஒன்னுமே பண்ண முடியாது- சீனியர் வீரர் காட்டம்!

கடந்த ஆண்டு இறுதியில் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் நடந்து முடிந்த நிலையில் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி 20 உலகக் கோப்பை தொடர் நடக்க உள்ளது. முதல் முதலாக இந்த தொடரில் 20 அணிகள் பங்கேற்கின்றன. உலகக் கோப்பை தொடர் ஒன்றில் இவ்வளவு அதிக அணிகள் கலந்துகொள்வது இதுவே முதல்முறை.

இந்நிலையில் இந்த டி 20 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலியை அணியில் எடுக்காமல் இருக்க பிசிசிஐ தேர்வுக்குழு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. வெஸ்ட் இண்டீஸில் உள்ள பிட்ச்களின் தன்மை கோலியின் பேட்டிங் பாணிக்கு சரிவராது என்பதால் அவருக்கு பதில் இளம் வீரர் ஒருவரை அணியில் எடுக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதுகுறித்து கடுமையான எதிர்வினையை ஆற்றியுள்ளார் சீனியர் வீரரும் வர்ணனையாளருமான ஸ்ரீகாந்த். அவரது பேச்சில் “கோலி இல்லாமல் நாம் கடந்த டி 20 உலகக் கோப்பையில் நாம் அரையிறுதி வரை சென்றிருக்கவே முடியாது.  50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் தொடர்நாயகன் விருதை வென்றுள்ளார். சில விமர்சகர்களுக்கு வேலையே கிடையாது. எந்த அடிப்படையில் இதுபோன்ற கருத்துகளை வெளியிடுகிறார்கள் என்றே தெரியவில்லை. இந்திய அணி இந்த முறை கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் கோலி அணியில் இருக்கவேண்டும்” எனக் கூறியுள்ளார்.