வெள்ளி, 1 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 14 நவம்பர் 2015 (16:34 IST)

இந்திய சுழலில் சிக்கிய தென் ஆப்பிரிக்கா; 214 ரன்களுக்குள் ஆல் அவுட்

இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சால், தென் ஆப்பிரிக்கா அணி 214 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
 

 
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. மொஹாலியில் நடைபெற்ற தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 108 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று [14-11-15] சனிக்கிழமை, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
 
அதன் படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர் வான் ஷைல் 10 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த டு பிளஸ்ஸி டக் அவுட் ஆகி வெளியேறினார். மற்றொரு வீரர் கேப்டன் ஹசிம் அம்லா 7 ரன்களில் வெளியேற தென் ஆப்பிரிக்க அணி 45 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.
 

 
இந்நிலையில், டி வில்லியர்ஸ் களமிறங்கினார். இதற்கிடையில் எல்கர் 38 ரன்களில் வெளியேறினார். பின்னர் டி வில்லியர்ஸுடன், டுமினி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இந்த இணை 5ஆவது விக்கெட்டுக்கு 42 ரன்கள் சேர்த்தது.
 
100ஆவது டெஸ்டில் களமிறங்கிய டி வில்லியர்ஸ் 59 பந்துகளில் [8 பவுண்டரிகள்] அரைச்சதம் கடந்தார். சிறிது நேரத்தில் டுமினி மற்றும் டேன் விலாஸ் ஆகியோர் தலா 15 ரன்களில் வெளியேறினார். ஒருவழியாக டி வில்லியர்ஸ் 85 ரன்களில் வெளியேறினார்.
 
இறுதியில், 59 ஓவர்கள் முழுமையாக விளையாடிய தென் ஆப்பிரிக்கா 214 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா தரப்பில் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
 
பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி முதல்நாள் ஆட்ட முடிவில், விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் குவித்துள்ளது. முரளி விஜய் 28 ரன்களுடனும், தவான் 45 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்க அணியின் இலக்கை தாண்டுவதற்கு இன்னும் 134 ரன்கள் தேவை.