1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 31 டிசம்பர் 2015 (12:35 IST)

தில்ஷன் சாதனை; நியூசிலாந்தை வீழ்த்தியது இலங்கை

நியூசிலாந்திற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இலங்கை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
 

 
நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில், இலங்கை அணி குவித்த 188 ரன்களை 21 ஓவர்களில் நியூசிலாந்து அணி கடந்தது.
 
கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில், இலங்கை அணி எடுத்து 117 ரன்களை, நியூசிலாந்து அணி 8.2 ஓவர்களில் [சராசரி 14.16] வெற்றி இலக்கை எட்டி சாதனை படைத்தது.
 
இந்நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் குவித்தது.
 

 
அதிகப்பட்சமாக வில்லியம்சன் 59 ரன்களும், டாம் லாதன் 42 ரன்களும், மிட்செல் சாண்ட்னர் 38 ரன்களும் எடுத்தனர். இலங்கை தரப்பில் நுவன் பிரதீப், துஷ்மந்த சமீரா, வாண்டர்சே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
 
பின்னர், 277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில், தொடக்க ஆட்டக்காரர் தில்ஷன் 92 ரன்களும், குணதிலக 65 ரன்களும் எடுத்து வெளியேறினர். பின்னர் வந்த திரிமன்னே 87 ரன்களும், சண்டிமால் 27 ரன்களும் எடுக்க 46.2 ஓவர்களில் 277 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
 
தில்ஷன் சாதனை:
 
இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் திலகரத்னே தில்ஷன் 2015ஆம் ஆண்டு மட்டும் 24 இன்னிங்ஸில் விளையாடி 1207 [4 சதங்கள், 6 அரைச் சதங்கள்] ரன்கள் எடுத்துள்ளார்.
 
இதன் மூலம் ஓர் ஆண்டிற்குள் அதிக ரன்கள் எடுத்த தொடக்க ஆட்டக்காரர்களில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.
 
இதற்கு முன்னதாக, முன்னாள் வீரர் சானத் ஜெயசூர்யா 2001ஆம் ஆண்டு 33 இன்னிங்ஸில் விளையாடி 1202 ரன்கள் எடுத்த தொடக்க ஆட்டக்காரர் ஒருவரின் அதிகப்பட்ச ரன் குவிப்பாக இருந்தது.