தோனி பேட்டிங்கைப் பார்க்க காத்திருந்து ஏமாந்த ரசிகர்கள்… குஜராத் அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த சி எஸ் கே!
ஐபிஎல் 17 ஆவது சீசனின் முக்கியமானப் போட்டிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதும் போட்டி இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸில் வென்ற குஜராத் கேப்டன் ஷுப்மன் கில் முதலில் பந்துவீச முடிவெடுத்தார்.
அதன்படி சென்னை அணி பேட்டிங் செய்ய அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரச்சின் ரவீந்தரா அதிரடியாக விளையாடி வான வேடிக்கைக் காட்டினார். அவர் 20 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ருத்துராஜ் 46 மற்றும் ஷிவம் துபே 51 ரன்கள் சேர்க்க அந்த அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
கடைசி நேரத்தில் களமிறங்கிய ஷமீர் ரிஸ்வி அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தார். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 206 ரன்கள் சேர்த்தது. இந்த போட்டியில் சென்னை அணியின் நட்சத்திர வீரர் தோனியின் பேட்டிங்கைப் பார்க்க ஆர்வமாகக் காத்திருந்த ரசிகர்களுக்கு அவர் பேட் செய்யாதது ஏமாற்றமாக அமைந்தது. குஜராத் அணி சார்பாக ரஷீத் கான் 2 விக்கெட்கள் அதிகபட்சமாக வீழ்த்தினார்.