செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 2 அக்டோபர் 2016 (18:04 IST)

வலுவான நிலையில் இந்தியா - 339 ரன்கள் முன்னிலை

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் குவித்துள்ளது.
 

 
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 316 ரன்கள் குவித்தது. அதிகப்பட்சமாக புஜாரா 87 ரன்களும், ரஹானே 77 ரன்களும் குவித்தனர். விருத்திமான் சஹா தனது பங்கிற்கு 54 ரன்கள் குவித்தார்.
 
நியூசிலாந்து அணி தரப்பில் மாட் ஹென்றி 3 விக்கெட்டுகளும், ஜீத்தன் பட்டேல், நெய்ல் வாக்னர், ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
 
பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 204 ரன்களுக்குள் சுருண்டது. அதிகப்பட்சமாக ஜீத்தன் பட்டேல் 47 ரன்களும், ராஸ் டெய்லர் 36 ரன்களும், ரோஞ்சி 35 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் ஒருவர் கூட அரைச்சதத்தை தொடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்திய அணியில் புவனேஷ்குமார் அபாரமாக பந்துவீசினார். முதலிலேயே நியூசிலாந்து அணியின் முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றிய புவனேஷ்குமார் அடுத்தடுத்த விக்கெட்டுகளையும் அற்புதமாக பந்துவீச்சால் சாய்த்தார். அவருக்கு பக்கபலமாக முஹமது சமியும் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
 
பின்னர் 112 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் தொடக்கமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. முரளி விஜய் 7 ரன்களிலும், புஜாரா 4 ரன்களிலும், தவான் 17 ரன்களிலும், ரஹானே 1 ரன்களிலும் வெளியேற 43 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
 
முதல் இன்னிங்ஸிலும் இதேபோல் 46 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து பின்னர் நிமிர்ந்தது. அதேபோலவே, இரண்டாவது இன்னிங்ஸிலும் நடந்தது. விராட் கோலி, ரோஹித் சர்மா இணை அணியை சரிவில் இருந்து மீட்டது. இந்த ஜோடி 5ஆவது விக்கெட்டுக்கு 48 ரன்கள் எடுத்தது.
 
கோலி 45, அஸ்வின் 5 என வெளியேறினாலும், நீண்ட நாட்களுக்குப் பிறகு நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா 82 ரன்கள் எடுத்து வெளியேறினார். 3ஆம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகளுக்கு 227 ரன்கள் எடுத்துள்ளது. இதுவரை இந்திய அணி 339 ரன்கள் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.