வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பட்ஜெட் 2021 - 2022
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 1 பிப்ரவரி 2021 (10:43 IST)

பட்ஜெட் 2021: தனிநபர் மீது செஸ் வரி போடப்படுமா?

வரவிருக்கும் பட்ஜெட்டில் தனிநபர் வரி செலுத்துவோர் மீது அரசாங்கம் கொரோனா வைரஸ் செஸ் அறிமுகப்படுத்தலாம் என்று தெரிகிறது.

 
மத்திய அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் 2021-22 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். வழக்கமாக பட்ஜெட் அறிவிப்புகள் காகிதத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்படும் நிலையில் தற்போது கொரோனா காரணங்களால் காகிதத்தை தவிர்க்க அரசு முடிவு செய்துள்ளது.
 
இதனால் இந்திய பட்ஜெட் வரலாற்றிலேயே முதன்முறையாக டிஜிட்டல் முறையில் பட்ஜெட் தாக்கல் நடைபெற உள்ளது. இதனால் பட்ஜெட் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்யும் 8 வது பட்ஜெட் இதுவாகும். அதோடு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 3வது முறையாக தாக்கல் செய்யும் முழு பட்ஜெட் இது. 
 
இந்நிலையில் வரவிருக்கும் பட்ஜெட்டில் தனிநபர் வரி செலுத்துவோர் மீது அரசாங்கம் கொரோனா வைரஸ் செஸ் அல்லது கூடுதல் கட்டணத்தை அறிமுகப்படுத்தலாம் என்று தெரிகிறது. அதிக வருமானம் கொண்டவர்களுக்கோ அல்லது குறிப்பிட்ட வருவாய் கொண்ட வணிகங்களுக்கோ இந்த செஸ் பொருந்தும்.
 
செஸ் என்றால் என்ன? 
தனி நபரின் வருமானத்தின் மீது நேரடியாக விதிக்கப்படுவது வரியாகும். அந்த வரி தொகையின் மீது குறிப்பிட்ட சதவீதத்தில் விதிக்கப்படுவதே 'செஸ்' வரி. அதாவது 'செஸ்' என்பதை மேல் வரி அல்லது கூடுதல் வரி என்று புரிந்து கொள்ளலாம்.