Last Updated : திங்கள், 14 ஏப்ரல் 2014 (22:25 IST)
பாகிஸ்தான் : நரமாமிசம் உண்டவர்
சிறிய குழந்தை ஒன்றை உண்டதாக சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்துள்ளதாக பாகிஸ்தான் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
நரமாமிசம் உண்டதாக முன்னரும் ஒப்புக்கொண்டிருந்த முஹமட் அரிஃப் அலி என்னும் நபரின் வீட்டில் இருந்து அழுகிப்போன பிணவாடை வருவதாக அயலவர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
அந்த வீட்டில் இருந்து அறுக்கப்பட்ட குழந்தையின் தலை ஒன்றை தாம் கண்டுபிடித்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
2011 இல் இறந்த ஒரு பெண்ணின் சடலத்தை திருடியதற்காக ஆரிஃப் அலியும் அவரது சகோதரரான முஹமட் ஃபர்மான் அலியும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சடலத்தின் காலின் கீழ் பகுதியை வெட்டி கறி சமைத்து உண்டதாக அவர்கள் பின்னர் ஒப்புக்கொண்டிருந்தனர்.
நரமாமிசம் உண்பவர்களுக்கு எதிராக பாகிஸ்தானில் நேரடிச் சட்டம் ஏதும் இல்லாத காரணத்தால், அவர்கள் மீது, சமாதியின் புனிதத்தை கெடுத்ததாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அவர்களது தண்டனை 2013 இல் முடிவடைந்தது. அவர்களை சிறையில் இருந்து விடுதலை செய்ததற்கு எதிராக டார்யா ஹான் நகரில் போராட்டங்கள் வெடித்தன.
அதனால், பொதுமக்களின் பார்வையில் இருந்து விலக்கி, இவர்கள் ஓரளவுக்கு மறைவாக வைக்கப்பட்டிருந்தனர்.