வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : சனி, 11 மே 2019 (11:26 IST)

அரிய வகை காகபோ கிளிக் குஞ்சுக்கு மூளை அறுவை சிகிச்சை!!

நியூசிலாந்தில் உள்ள விலங்குகள் நல மருத்துவர்கள் பிறந்து 56 நாட்களே ஆன கிளிக்குஞ்சு ஒன்றுக்கு, உலகிலேயே முதல் முறையாக மூளை அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
 
அழியும் நிலையில் உள்ள உயிரினமாக அறிவிக்கப்பட்டுள்ள, நியூசிலாந்தை பூர்விகமாகக் கொண்ட காகபோ வகைக் கிளிகள் தற்போது வெறும் 144 மட்டுமே உள்ளன.
 
நியூசிலாந்தின் தெற்கு பகுதியில் உள்ள காட்பிஷ் தீவில் இருந்த இந்தக் கிளிக் குஞ்சின் தலையில் வழக்கத்துக்கு மாறான வீக்கம் இருப்பதை கண்ட விலங்குகள் பாதுகாப்புத் துறையின் காகபோ கிளிகள் மீட்புக் குழுவினர் அதன் மண்டை ஓட்டில் துளை இருப்பதைக் கண்டறிந்தனர்.
 
மனிதர்கள் மற்றும் பிற பாலூட்டிகளுக்கு மூளை அறுவை சிகிச்சை செய்யும் வழிமுறைகளைப் பின்பற்றி, எஸ்பி 1-பி என்று பெயரிடப்பட்ட இந்தக் கிளிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அந்த நாட்டின் அரசு விமான நிறுவனம் பயணச் செலவுக்கு கட்டணம் எதுவும் வாங்காமல் மாசே பல்கலைக்கழத்தில் உள்ள வைல்டுபேஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவியது.
 
அந்தக் கிளியின் மூளை மற்றும் வெளியுலகுக்கு இடையே ஒரு மெல்லிய தசையே இருந்தது என, கடந்த வாரம் நடந்த அறுவை சிகிச்சைக்கு பின், அந்த மருத்துவமனையின் இயக்குநர் பேராசிரியர் பிரெட் கார்டெல் கூறியுள்ளார்.
 
உலகில் உள்ள கிளி இனங்களிலேயே பருமனான காகபோ வகை கிளிகளால் பறக்க முடியாது. இவை இரவு நேரங்களிலேயே வெளியில் நடமாடும் இயல்புடையவை.