வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 17 செப்டம்பர் 2020 (15:00 IST)

தேசிய வேலையின்மை தினம் என்று பிரதமர் மோதியின் பிறந்தநாளில் ட்ரெண்ட் ஆவது ஏன்?

செப்டம்பர் 17ஆம் தேதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் 70வது பிறந்த நாள். இந்த சந்தர்ப்பத்தில், #HappyBdayNaMo, #PrimeMinister #NarendraModiBirthday, #NarendraModi ஆகிய ஹாஷ்டாகுகள் 17ஆம் தேதி அதிகாலையிலிருந்தே சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆக ஆரம்பித்துள்ளன. ஆனால், #NationalUnemploymentDay, #National_Berger_Day ஆகிய ஹாஷ்டாகுகளும் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகிவருகின்றன.

பிரதமர் மோதியின் பிறந்த நாளில் தேசிய வேலையின்மை தினம் என்ற அர்த்தத்தைத் தரும் ஹாஷ்டாக் ஏன் ட்ரெண்டாகி வருகிறது? இந்திய இளைஞர்கள், குறிப்பாக மாணவர்கள் அரசுக்கு தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யும் விதமாக இந்த ஹாஷ்டாகை ட்ரென்ட் செய்து வருகின்றனர்.

கொரோனா தொற்றுநோய் காலகட்டத்தில் இந்தியப் பொருளாதாரம் மிகப்பெரிய நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது. தேசிய புள்ளிவிவர அலுவலகம் (என்எஸ்ஓ) அளிக்கும் தகவல்களின்படி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்த ஆண்டு ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 23.9% சரிவை சந்தித்துள்ளது, இது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத மிகப் பெரிய சரிவு.

சென்டர் ஃபார் மானிடரிங் இந்தியன் எகானமி (சி.எம்.ஐ.இ) அளிக்கும் தரவுகளின்படி இந்தியாவின் நகர்ப்புற வேலையின்மை விகிதம் செப்டம்பர் 6 வாக்கில் 8.32% ஆளவுக்குக் குறைந்துள்ளது.

ஊரடங்கு, பொருளாதார மந்தநிலை ஆகியவற்றால் லட்சக்கணக்கான மக்கள் வேலை இழந்துள்ளனர்.

சி.எம்.ஐ.இ. அளிக்கும் தரவுகளின்படி, ஊரடங்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட 12 கோடி மக்கள் வேலை இழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் அமைப்புசாரா தொழில்துறை மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள். மாதச் சம்பளம் வழங்கும் ஒழுங்கமைக்கப்பட்ட தொழில்துறைகளில் 1.9 கோடி பேர் வேலையிழந்துள்ளனர்.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் மற்றொரு அறிக்கை, 30 வயதிற்கு உட்பட்ட நான்கு மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் தொற்றுநோயால் வேலை இழந்துவிட்டதாக மதிப்பிட்டுள்ளது. 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடும் அதிருப்தியில் மாணவர்கள்

பொருளாதார மந்தநிலை, அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ள இளைஞர்கள் அரசின் மீது தங்கள் அதிருப்தியைத் தொடர்ந்து வெளிப்படுத்திவருகின்றனர். இந்த மனக் கசப்பின் விளைவுதான் இந்திய சமூகவலைதளங்களில், குறிப்பாக ட்விட்டரில் தெளிவாக பிரதிபலிக்கிறது.

கடந்த சில வாரங்களில் அரசுக்கு எதிரான இந்தப் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. வேலையின்மை ஒரு பக்கமிருக்க, எஸ்.எஸ்.சி தேர்வுகள் சரியான நேரத்தில் நடைபெறாததாலும், சரியான நேரத்தில் வேலைகளுக்கான நியமனங்கள் செய்யப்படாததாலும் மாணவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

காலிப் பணியடங்களுக்கு விரைவில் போட்டித் தேர்வுகளை நடத்தி, அந்த இடங்களை நிரப்ப வேண்டுமென போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் கோருகின்றனர். இது தவிர, பல கல்வி நிறுவனங்களில் கட்டணங்கள் பெருமளவில் அதிகரித்திருப்பதால், அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவர்கள் கருதுகின்றனர்.

இதற்கு முன்பாக செப்டம்பர் 9 ஆம் தேதி நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள இளைஞர்கள் இரவு ஒன்பது மணிக்கு ஒளிரும் விளக்கு, மொபைல் ஃபிளாஷ் ஆகியவற்றை ஏற்றி தங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்தனர்.

இந்தப் பிரசாரத்தின் அடுத்தகட்டமாக, பல இளைஞர்களும் மாணவர் அமைப்புகளும் பிரதமர் மோதியின் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் தேதியன்று #National_Berger_Day என்ற ஹாஷ்டாகை பிரபலப்படுத்திவருகின்றனர். இளைஞர்களின் இந்த பிரசாரத்திற்கு பல எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் ஆதரவும் உள்ளது. #NationalUnemploymentDay என்ற ஹாஷ்டாகுகளின் கீழும் கருத்துகளைப் பல்வேறு தரப்பினரும் பதிவுசெய்து வருகின்றனர்.

பல மாணவர்கள் தங்களது ட்விட்டர் ஹாண்டிலில் 'வேலையற்றோர்' என்ற பொருள்படும் 'unemployed' என்ற வார்த்தையையும் இணைத்துள்ளனர்.

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோதியின் வானொலி நிகழ்ச்சியான 'மன் கி பாத்' மற்றும் பா.ஜ.கவின் பல வீடியோக்களுக்கு யு டியூபில் அதிக எண்ணிக்கையிலான dislike கிடைத்ததற்கு மாணவர்களின் கோபமும் ஒரு காரணம் எனக் கருதப்படுகிறது.

ஆனால், பா.ஜ.கவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவரான அமித் மால்வியா, இந்தப் போக்குகளுக்கு காங்கிரஸின் சதியும் துருக்கிய botகளுமே காரணம் எனக் குற்றம்சாட்டியிருக்கிறார்.