செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 23 ஜூன் 2020 (08:42 IST)

கொரோனா வைரஸ் தொற்றுக்கு யார் காரணம்? மனிதர்களா - வௌவால்களா?

வௌவால்கள் குறித்து நினைத்தாலே ஐரொரோ டான்ஷி ஆர்வமடைந்துவிடுகிறார். அவற்றுக்கு ஈடு இணையில்லை என்கிறார் அவர்.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக இருக்கும் நைஜீரியாவைச் சேர்ந்த டான்ஷி, வெளவால்கள் குறித்த எதிர்மறையான எண்ணங்களை மாற்ற பணியாற்றிவரும் வெகு சில ஆராய்ச்சியாளர்களில் ஒருவர்.

உலகெங்கும் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வரும் கொரோனா வைரஸ் தொற்று வௌவால்களால்தான் பரவியது என்னும் கருத்து நிலவுகிறது.

வெளவால்களை கூண்டோடு அழிக்கும் பணி ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தோனேசியா வரைக்கும் நடைபெற்று வருகிறது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதுகுறித்து பெரும் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.


ஆனால் வெளவால்கள் மீது பழி சுமத்துவது நிஜமான குற்றவாளியை பிடியிலிருந்து நழுவ விட்டுவிடும் என பலர் கருதுகின்றனர்.

வெளவால்கள் மீது குற்றம் சுமத்துகின்றனர்?

கோவிட் 19க்கு காரணமான சார்ஸ்-கோவ்2 (Sars-Cov2)வைரஸ், இதற்கு முன்பு குதிரை லாட வடிவிலான மூக்கு கொண்ட காட்டு வௌவால்களிடமிருந்து கண்டுபிடிக்கப்பட்ட வைரஸை போன்று 96% இருப்பதால் அனைத்து வெளவால்கள் மீதும் சந்தேகம் திரும்பியது.



"சமீபத்திய பரிணாம வளர்ச்சி குறித்த ஆராய்ச்சி ஒன்றில், 40 -70 முந்தைய ஆண்டுகளில், சார்ஸ்-கோவ்2 வைரஸ், குதிரைலாட வெளவால்களிடமிருந்து பிரிந்து சென்றுவிட்டது என்பது தெரியவந்துள்ளது," என்கிறார் டான்ஷி.

" இது சார்ஸ்-கோவ்2 வைரஸ் வௌவால்களிடமிருந்து மனிதர்களுக்கு நேரடியாக பரவாது என்பதற்கு மேலும் ஆதாரமாக அமைகிறது.`` என்கிறார் அவர்.

கென்யாவின் மாசாய் மாரா பல்கலைக்கழகத்தில் வன உயிர் உயிரியல் மூத்த பேராசிரியர் பால் டபள்யு வெபாலா, "பரிணாம வளர்ச்சி கோட்பாடுகள் படி, மனிதர்களுக்கும் வெள்வால்களுக்கும் இடையே நீண்ட இடைவெளிகள் உள்ளன. எனவே இந்த வைரஸ், வெளவால்களிலிருந்து பரவியுள்ளது என்று கூறப்பட்டாலும், மனிதர்களுக்கும் வெளவால்களுக்கும் இடையே யாரோ இதை கடத்தி இருக்க வேண்டும்," என்கிறார்.

எனவே வெளவால்கள் மூலம் இந்த சார்ஸ்-கோவ்2 வைரஸ் பரவியுள்ளது என்று வைத்துக் கொண்டாலும், அது மனிதர்களுக்கு நேரடியாக பரப்பி இருந்திருக்காது. எறும்பு திண்ணி இடையில் கடத்தியாக செயல்பட்டிருக்கலாம் என சந்தேகங்கள் எழுகின்றன.


யாரை குறை சொல்லலாம்?

டான்ஷியும், அவருடன் பணிபுரியும் சக விஞ்ஞானிகளும் மனிதர்களுக்கு இடையே கொரோனா வைரஸ் பரவியதற்கு மனிதர்கள் மீது மட்டுமே குற்றம் சுமத்த வேண்டும் என்றும், வெளவால்கள் மீது இல்லை என்றும் கூறுகின்றனர்.

இந்த வைரஸ் பரவலுக்கு மனித செயல்பாடுகளே காரணம் என்கிறார் ஆராய்ச்சியாளர் வெபாலா.


``வன உயிரிகளின் வாழ்விடங்களை ஆக்கிரமித்து கொள்வது அதன் மூலம் வன உயிரிகளின் வாழ்விடங்களை மொத்தமாக அழிப்பது, வன உயிரிகளை வியாபாரத்திற்காகப் பயன்படுத்துவது ஆகிய காரணங்களால் நோய்க்கிருமிகள், இதற்கு முன்பு சற்றும் தொடர்பில்லாத உயிர்களிடத்தில் பரவக்கூடிய ஆபத்தை ஏற்படுத்துகிறது," என்கிறார் அவர்.

இம்மாதிரியாக விலங்குகளிடம் உருவாகி, அது மனிதர்களிடத்தில் பரவுவது விலங்குகளின் வாழ்விடங்கள் அதிகளவில் அழிப்பதால் ஏற்படும் விளைவு என்பதைக் காட்டும் பல ஆதாரங்கள் உண்டு என்கிறார் டான்ஷியா.

வெள்வால்களை கூண்டோடு அழிப்பதால் ஒரு பலனும் இல்லை. வெளவால்களை கூண்டோடு அழிப்பது அல்லது அதன் உறைவிடத்திலிருந்து வெளியேற்றுவது, நிலைமையை இன்னும் மோசமாக்கும் என்கின்றனர் சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள்.

"வெளவால்களால் உண்ணக்கூடிய பறக்கும் மற்றும் இரவு நேர பூச்சிகள் மனிதர்களின் உடல்நலத்தில் தீங்கு விளைவிக்கக்கூடிய நோய்களுக்கான கிருமிகளை பரப்பும் தன்மை கொண்டவை," என்கிறார் வெபாலா.

அதாவது மனிதர்களைப் பாதிக்கும் டெங்கு காய்ச்சல் மற்றும் மலேரியாவை உருவாக்கும் பூச்சிகளை வெளவால்கள் உண்கிறது.

எனவே வெளவால்களை அழித்தால் நோய்கள் பரவும் ஆபத்து அதிகரிக்கும்.

வெளவால்கள் மனிதர்களுக்கு எவ்வாறு நன்மையளிக்கின்றன?

"நீங்கள் பருத்தி ஆடை அணிந்திருந்தால், தேநீரோ அல்லது காபியோ பருகியிருந்தால், சோளம் போன்ற உணவை உண்டிருந்தால், அல்லது ஏதேனும் ஒரு காய்கறியை உண்டிருந்தாலோ வெளவால்கள் உங்களுக்கு நன்மை செய்திருக்கின்றன என்று சொல்ல வேண்டும்." என்கிறார் வெபாலா.

சுற்றுச்சூழலை கட்டிக் காப்பதற்கு வெளவால்கள் பெரும் பங்காற்றுகின்றன. மகரந்த சேர்க்கைக்கு உதவுகிறது, விதைகள் பரவ காரணமாகிறது, பூச்சியை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. உணவு, அழகு சாதனப் பொருட்கள், மேசை நாற்காலிகள், மருந்துகள் என அனைத்திற்கும் வெளவால்களின் பங்கு தேவை.


வெளவால்கள் இல்லாமல் இந்தோனேசியாவில் துரியன் பழங்களை வெற்றிகரமாக அறுவடை செய்ய முடியாது, மடகாஸ்கரின் புகழ்பெற்ற பெருக்க மரம் இருந்திருக்காது.



வெளவால்கள் பறவைகளைக்காட்டிலும் இரு மடங்கு அதிகமாக விதைகளைப் பரவச் செய்கின்றன என்கிறார் வெபாலா. இதன்மூலம் காடுகள் தழைப்பதற்கு வெளவால்கள் துணை புரிகின்றன.

பல ஆய்வுகளின்படி, அமெரிக்காவில் மட்டும், பூச்சிகளை அழிப்பதன் மூலமாகவும், பயிர்கள் சேதமடைவதை தடுப்பதன் மூலமாகவும், வெளவால்கள் பல பில்லியன் டாலர்களை விவசாயிகளுக்குச் சேமித்து கொடுப்பதாகத் தெரிகிறது.

வெளவால்களில் வேறென்ன சிறப்புகள்?

"பரிணாம வளர்ச்சியில் வெற்றி பெற்ற ஒரு விலங்கினம்தான் வெளவால்கள். கிட்டதட்ட அனைத்து கண்டங்களிலும் வெளவால்களை காணமுடியும். ஒரு வெளவால் ஆராய்ச்சியாளராக நான், பல குகைகள், காடுகள், மலைகள், புல்தரைகள் பலவற்றை ஆராய்ச்சி செய்திருக்கிறேன். வெளவால்கள் பரிணாம வளர்ச்சிக்கேற்ப தங்களை மாற்றிக் கொண்டே வருகின்றன" என்கிறார் டான்ஷி.

"விரல்களே இறக்கைகள், எதிரொலியின் மூலம் நகர்வு, இரவில் பிரகாசிக்கும் நட்சத்திர பார்வை என பல சிறம்பம்சங்களை வெளவால்கள் கொண்டுள்ளன . பாலுட்டிகளில் வெளவால்களுக்கு ஈடு இணையேதுமில்லை." என்கிறார் டான்ஷி.

`` வெளவால்களுக்கு சிறப்பான நோய் எதிர்ப்பு அமைப்பு உள்ளது. அது பல கிருமிகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் வெளவால்களை காப்பாற்றுகிறது.`` என்று முடிக்கிறார் ஆராய்ச்சியாளர் வெபாலா.