திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (14:25 IST)

ரெம்டெசிவிர் எங்கே கிடைக்கிறது? என்ன பயன்? தமிழ்நாட்டுக்கு பாகுபாடா?

கொரோனா சிசிக்சைக்கான ரெம்டெசிவிர் மருந்தை வாங்குவதற்கு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. `மத்திய அரசு கூடுதல் மருந்துகளை விநியோகிக்கவில்லை' என்றும் கூறப்படுகிறது. என்ன நடக்கிறது?

பேக்கேஜ் கணக்கில் வசூல்

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொற்றின் தாக்கம் அதிகரித்தபடியே உள்ளது. அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இல்லாததால், தனியார் மருத்துவமனைகளை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர். அங்கு சிகிச்சை பெறுகிறவர்களுக்கும் பேக்கேஜ் கணக்கில் பண வசூல் நடப்பதாகவும் சொல்லப்படுகிறது.

அதிலும், `குறைந்தது 2 லட்ச ரூபாய் கட்டினால்தான் சிகிச்சை' என சிறிய அளவிலான தனியார் மருத்துவமனைகளும் கண்டிப்பான குரலில் தெரிவிப்பதாக நோயாளிகள் வேதனைப்படுகின்றனர். இதன்பின்னர், நோயாளிக்கு கொரோனா தொற்றின் தன்மையைப் பொறுத்து `ரெம்டெசிவிர் மருந்தை வாங்கி வந்தால் மட்டுமே சிகிச்சை அளிக்கப்படும்' எனவும் கூறிவிடுகின்றனர். இதனால் வசதி வாய்ப்பில்லாத நோயாளிகள் பலரும் பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள்.

இந்நிலையில், கள்ளச் சந்தையில் ரெம்டெசிவிர் புழக்கத்தைக் கட்டுப்படுத்த கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரூ.1,568 என்ற விலையில் தமிழக அரசு விநியோகிக்கத் தொடங்கியது. இதனால் மக்கள் கூட்டம் அலைமோதத் தொடங்கியது. இதனால் கொரோனா பரவக் கூடும் என அதிகாரிகள் அச்சப்பட்டதால், தற்போது கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் கூடுதலாக இரண்டு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டுக்கு பாகுபாடா?

அதேநேரம், ரெம்டெசிவிர் டோஸ்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் வரும் நாட்களில் பற்றாக்குறை ஏற்படலாம் எனவும் கூறப்படுகிறது. மத்திய அரசு வரும் 30 ஆம் தேதி வரையில் ஒதுக்கியுள்ள ரெம்டிசிவிர் மருந்தில் குஜராத் மாநிலத்துக்கு 1,65,000 டோஸ்களும் உ.பி மாநிலத்துக்கு 1,61,000 டோஸ்களும் வழங்கப்பட்டுள்ளன.


இதில், தமிழ்நாட்டுக்கு 58,900 டோஸ்கள் என விநியோகிக்கப்பட்டுள்ளன. தமிழகத்துக்கு மிகக் குறைந்த அளவே ரெம்டிசிவிர் கொடுக்கப்பட்டதால், மாநிலம் முழுவதும் பரவலாக விநியோகிக்க முடியாத நிலையில் தமிழக அரசு தவிப்பதாகவும் கூறப்படுகிறது.

அதேநேரம், ` கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு ரெம்டிசிவிர் மருந்தையே மருத்துவமனைகள் பரிந்துரைப்பதால் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. கொரோனா தாக்கம் தீவிரமாக இல்லாத நபர்களுக்கு இந்த மருந்து தேவைப்படுவதில்லை.
ஆனால், தொற்று ஏற்படுத்தும் உடல் உபாதைகள் காரணமாக ரெம்டெசிவிர் வாங்க விரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளது. இதற்காக நோயாளிகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு மத்திய அரசு விநியோகம் செய்ய வேண்டும். ஆனால், அவ்வாறு மத்திய அரசு கொடுப்பதில்லை" என்கின்றனர் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் சிலர்.

மாற்று வழிகள் என்ன?

`` பாத்திரத்தில் என்ன இருக்கிறதோ, அதுதான் கரண்டியில் வரும் என்பது போல நம்மிடம் ரெம்டெசிவிர் மருந்து இருப்பு குறைவாக உள்ளது. அதையும் மாவட்ட மருத்துவமனைகள், அம்மா மருந்தகங்கள் மூலமாக பரவலாக விநியோகிக்க நடவடிக்கை எடுத்தால் ஒரே இடத்தில் மக்கள் குவிய வேண்டிய தேவை இருக்காது" என்கிறார் சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்.

பிபிசி தமிழுக்காக தொடர்ந்து பேசிய அவர், `` ரெம்டெசிவிர் மருந்துக்கான காப்புரிமையை அமெரிக்க நிறுவனம் ஒன்று வைத்துள்ளது. அதனைப் பெற்று இங்குள்ள இந்திய நிறுவனங்களுக்கு கட்டாய உரிமம் கொடுத்து உற்பத்தியைப் பெருக்கும் வேலைகளில் மத்திய அரசு தீவிரம் காட்ட வேண்டும். அதேநேரம், ரெம்டெசிவிரை மட்டும் எதிர்நோக்காமல் மாற்று வழியையும் மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் ஆய்வு செய்ய வேண்டும். இன்டர்ஃபெரான் ஆல்பா 2பி (interferon Alfa-2b) என்ற மருந்தை டெங்கு காய்ச்சலுக்கு எதிராகவும், கொரோனாவுக்கு எதிராகவும் கியூபாவும் சீனாவும் பயன்படுத்தின.

இந்த மருந்து நல்லபடியாக வேலை செய்கிறது என இந்திய மருத்துவ நிபுணர்களும் தெரிவிக்கின்றனர். இது தோலுக்கு கீழே செலுத்தக்கூடிய ஊசியாக உள்ளது. மேலும், ஒரு டோஸ் விலை ஒன்பதாயிரம் ரூபாய் ஆகும்.

இந்த மருந்தைப் பயன்படுத்திய 80 சதவிகிதம் பேருக்கு நோய் தீவிரத் தன்மை அடைவதில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு குறைந்த அளவே ஆக்சிஜன் தேவைப்படுகிறது. இதை சீனாவில் இருந்தும் இறக்குமதி செய்யலாம். இதுபோன்ற மாற்று வழிகளையும் அரசு ஆலோசிக்க வேண்டும்" என்கிறார்.

போலி ரெம்டெசிவிர் மருந்துகள்!

``ரெம்டெசிவிர் மருந்தை தேவைப்படுகிறவர்களுக்கு மட்டும் கொடுப்பது சரியானது. சென்னையில் மட்டும் விநியோகிக்காமல் கோவை, சேலம், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி என முக்கிய ஊர்களில் கொடுத்தாலும் மக்கள் வாங்கிக் கொள்வார்கள். தற்போதுள்ள பற்றாக்குறையை சமாளிக்க ரெம்டெசிவிர் மருந்தை திரவ வடிவில் தயாரித்தால் உற்பத்தி பல மடங்கு பெருகும்" என்கிறார் தமிழக பொது சுகாதாரத்துறையின் முன்னாள் இயக்குநர் குழந்தைசாமி.

பிபிசி தமிழுக்காக தொடர்ந்து பேசியவர், ``தற்போதும் ரெம்டெசிவிர் கள்ளச் சந்தையில் விற்கப்பட்டு வருகிறது. நான் கேள்விப்பட்ட வரையில் மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகப்படியான விலைக்கு விற்கப்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்த மருந்து கம்பெனிகள் ஒவ்வொரு ஊர்களுக்கும் எவ்வளவு மருந்துகளை விநியோகம் செய்தன என்பதைக் கண்டறிந்து பதுக்கி வைத்துள்ள மருந்துகளை வெளியே கொண்டு வர வேண்டும். தற்போது மருத்துவர்களின் பரிந்துரைக்கேற்ப டோஸ்கள் வழங்கப்படுகின்றன.

பொதுமக்களில் சிலர், ரெம்டெசிவிரை கள்ளச் சந்தையில் வாங்கி தங்களது வீடுகளில் பதுக்கி வைப்பதாகவும் எங்களுக்குத் தகவல் வருகிறது. இதில் மிக முக்கியமான ஒரு பிரச்னையும் உள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் குப்பியைப் பயன்படுத்திய பிறகு அதனைத் திரும்பப் பெற வேண்டும்.

பொதுவாக, வலி நிவாரணியாக போதை மருந்துகளைப் பயன்படுத்தும்போது காலியான குப்பிகளைக் கணக்கு காட்ட வேண்டும் என்பது விதி. அதேபோல், ரெம்டிசிவிர் குப்பியையும் திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு செய்யாவிட்டால் காலியான குப்பிகளில் வேறு சில மருந்துகளை நிரப்பி ரெம்டெசிவிர் எனக் கூறி விற்கும் வேலைகளும் நடக்கின்றன. இந்த வகையில் சில அரசு செவிலியர்கள் பிடிபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மருந்து நிறுவனங்களும் தங்களது விநியோகம் குறித்த தகவல்களை அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அப்போதுதான் மறைமுக விற்பனையைத் தடுக்க முடியும். இந்த மருந்து நுரையீரல் பிரச்னை உள்ளவர்கள் உள்பட சிலருக்கு மட்டுமே தேவைப்படுகிறது. அனைவருக்குமே ரெம்டெசிவிர் தேவையில்லை என்பதை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்" என்கிறார் ஆதங்கத்துடன்.

தட்டுப்பாட்டை ஏற்படுத்துவது யார்?

``ரெம்டெசிவிரை பயன்படுத்தினால் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுவிடலாம் என்ற எண்ணத்தில் பொதுமக்கள் உள்ளனர். இது உயிர் காக்கும் மருந்து அல்ல என உலக சுகாதார நிறுவனமும் தமிழக அரசும் தெரிவித்துள்ளது. இந்த மருந்தின் மூலம் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறக் கூடிய நாள்களைக் குறைக்கலாம். அவ்வளவுதான். மற்றபடி, இந்த மருந்தை போட்டால் கொரோனாவில் இருந்து வெளியில் வரலாம் என்கிற சூழல் எதுவும் இல்லை" என்கிறார் தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் மருத்துவர் செல்வ விநாயகம்.

தொடர்ந்து பேசிய அவர், `` கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவருக்குமே ரெம்டெசிவிர் தேவைப்படுவதில்லை. இந்த மருந்து யாருக்கு தேவையோ, அவர்களுக்கு மட்டுமே மருத்துவர்களின் பரிந்துரை மற்றும் ஆவணங்களின்படி விற்கப்படுகிறது. சில தனியார் மருத்துவனைகள், வெளியில் சென்று ரெம்டெசிவிர் வாங்கி வருமாறு நோயாளிகளை சிரமப்படுத்துகின்றனர். தற்போது அரசு மருத்துவமனைகளில் போதிய எண்ணிக்கையில் மருந்து இருப்பு உள்ளது. பொதுவெளியில் ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் வேலையை சில தனியார் மருத்துவமனைகள் செய்கின்றன. இதை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது" என்கிறார்.