வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 4 ஜூன் 2022 (17:50 IST)

காதல் வந்தால் உடலில் நடக்கும் மாற்றங்கள் என்ன? இச்சை வந்தால் நடப்பவை என்ன?

லவ் ஃபீவர், காதல் பித்து, வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பது போன்ற உணர்வு - இப்படி காதல் உணர்வு எப்படி இருக்கும் என்பதை விவரிக்க நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வழி இருக்கும். ஆனால், நாம் காதலில் விழும்போது உண்மையில் நம் மூளையில் என்ன மாதிரியான மாற்றங்கள் நிகழும்? காதல் மற்றும் இச்சை இரண்டையும் எப்படி வித்தியாசப்படுத்துவது?

நரம்பியல் அறிவியல் பார்வையில் காதல் என்பது என்ன?

ரட்கெர்ஸ் பல்கலைக்கழகத்தின் ஹெலென் இ ஃபிஷர் கூற்றுப்படி, காதல் உணர்வில் மூன்று அம்சங்கள் உள்ளன. அந்த மூன்று அம்சங்கள் என்ன?

இச்சை

காதலில் பெரும்பாலும் இச்சை உணர்வு முதலாவதாக தோன்றும், ஆனால், எல்லா சமயங்களிலும் அப்படி நிகழ்வது இல்லை. பாலியல் உணர்வு அற்ற (asexual) சிலருக்கு இது எப்போதும் நிகழாது. ஆனால், இச்சை உணர்வு ஏற்படுபவர்களுக்கு அது ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன்களால் நிகழ்கிறது. இந்த ஹார்மோன்கள் ஒருவர் மீதுள்ள பாலியல் ஆசையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது முற்றிலும் உடல் ரீதியானதாக தோன்றலாம், ஆனால், இது ஒருவருடன் இணைசேர்ந்து சந்ததியை உருவாக்கி உங்களின் டி.என்.ஏவை கடத்துவது பற்றியதாகும். இச்சை இல்லாமல் எந்தவொரு உயிரினமும் உயிர் பிழைத்திருக்காது என்றே சொல்லலாம்.

கவர்ச்சி

காதலின் இரண்டாம் அம்சம் ஒருவரால் கவரப்படுவது, இது டோப்பமின் என்கிற நரம்பு கடத்தியால் நிகழ்கிறது. இது மூளையிலிருந்து வெளிப்படும் நல்ல உணர்வை ஏற்படுத்தும் ஒரு ஹார்மோனாகும். நமக்கு நல்ல உணர்வை ஏற்படுத்தும் ஒன்றை மீண்டும் மீண்டும் செய்ய வைப்பது டோப்பமின் வேலை. இதனால்தான் ஒருவர் மீதுள்ள ஆழமான கவர்ச்சி என்பது அந்நபருக்கு அடிமையாவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

சிலர் அந்த சுழலில் சிக்கிக்கொள்வார்கள். எப்போதும் ஒரு புதிய உறவின் வாயிலாக டோப்பமின் மூலம் நிகழும் உற்சாகத்தை அடைய அதனை துரத்திக்கொண்டிருப்பார்கள். காதலுக்கு நீங்கள் அடிமையாகிவிட்டீர்கள் என்று இதற்குப் பொருள், அதனை எதிர்கொள்ளுங்கள். மேலும், உங்களின் பகுத்தறியும் சிந்தனை மற்றும் விமர்சனரீதியாக சிந்திப்பது இரண்டையும் ஒருங்குபடுத்தும் மூளையின் ஒரு பகுதியை வலுவிழக்கச் செய்கிறது டோப்பமின். பலரும் இந்த பகுத்தறிவற்ற தேனிலவு காலத்தில் 18 மாத காலம் வரை இருப்பார்கள்.

கவர்ச்சியை உருவாக்குவதில் பங்கு வகிக்கும் மற்றொரு ஹார்மோன் நோரேபினெஃப்ரின். ஒருவர் கவர்ச்சி நிலையில் இருக்கும்போது, உடலியல் ரீதியான எதிர்வினைகளை உருவாக்குவதில் இது பங்கு வகிக்கிறது. உள்ளங்கைகள் வேர்ப்பது, இதயம் படபடப்பது, வேகமாக மூச்சிறைப்பது ஆகியவற்றை சிந்தித்துப் பாருங்கள். இதில் வலுவான கவர்ச்சி என்பது ஒருவித அழுத்தத்திற்கு இணையானதாக உள்ளது, ஆனால், அது நல்லவொரு அழுத்தமே. ஏனெனில் இந்த உணர்வுகள் நம் காதலர்/காதலியின் பார்வை, சப்தம் அல்லது அவர்களின் வாசனை போன்ற நேர்மறை எண்ணங்களுடன் தொடர்புடையவை.

பிணைப்பு

காதலின் மூன்றாவது அம்சம் ஒருவருடனான இணைப்பு அல்லது பிணைப்பு. இதில் ஆக்சிடாசின் மற்றும் வாசோப்ரெசின் என்ற இரண்டு ஹார்மோன்கள் செயலாற்றுகின்றன. 'அரவணைக்கும் ஹார்மோன்' (cuddle hormone) என அழைக்கப்படும் ஆக்சிடாசின், பாலியல் உறவு கொள்ளும்போதோ, அல்லது ஒருவருடன் தோலுடன் தோல் தொடர்புகொள்ளும்போதோ வெளிப்படும் ஹார்மோன் ஆகும். இணையுடன் ஆழ்ந்த பிணைப்பை ஏற்படுத்தும் வகையிலான பாதுகாப்பு மற்றும் மனநிறைவை ஏற்படுத்தும் உணர்வுகளை இது அதிகரிக்கும்.

சிலரிடத்தில் குழந்தை பருவத்தில் ஏற்பட்ட எதிர்மறை அனுபவங்கள், ஆக்சிடாசின் அமைப்பை பாதிக்கலாம். இதனால் அவர்களின் வளரிளம் பருவத்தில் மற்றவர்களுடன் பிணைப்பு ஏற்படுவது அவர்களுக்கு கடினமானதாக இருக்கும். ஆனால், சரியான சிகிச்சை மூலம் ஆரோக்கியமான உறவுகளை ஏற்படுத்திக்கொள்ளும் வகையில் நம் மூளையை மீண்டும் மாற்றியமைக்க முடியும்.

வாசோப்ரெசின் ஹார்மோன் பாலியல் உறவு கொண்ட பின் நேரடியாக வெளிப்படும் ஒரு ஹார்மோனாகும். இந்த ஹார்மோனும் மனநிறைவை ஏற்படுத்துகிறது. ஒழுங்கற்ற நபர்களிடத்தில் அடக்குதல் போன்ற உணர்வை ஏற்படுத்தும், இதன்மூலம் நரம்பியல் அமைப்பை தூண்டி, நீங்கள் காதலிக்கும் நபருடன் இருக்க விரும்புவதை ஊக்குவிக்கும்.

காலப்போக்கில் அனைத்தும் நன்றாக சென்றால் காதல் நிலையானதாகவும் நிறைவானதாகவும் மாறும். காதலில் இரக்க குணம் முக்கிய பங்கு வகிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரு நீண்ட கால பந்தம் என்பது இரக்க உணர்வின் தொடர்ச்சியான நிகழ்தலின் மூலம் ஏற்படுகிறது.

ஆம், நிச்சயமாக காதலில் கருப்பு பக்கம் என்ற ஒன்று இருக்கிறது. ஆட்டிப்படைத்தல், பொறாமை குணங்கள் போன்றவை, மனநிலையை ஒருங்கமைக்கும் ஹார்மோனான செரோட்டோனின் குறைவதால் இந்த விளைவுகள் அதிகரிக்கலாம். காதல் எல்லா சமயங்களிலும் நிலைத்திருக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அப்படி நிலைத்திருக்காதபோது அது வலிமிகுந்ததாக இருக்கும். இதயம் உடைந்துவிட்டது என கூறுவது இந்த சமயங்களில் உண்மையானதாக இருக்கிறது. இது 'ப்ரோக்கன் ஹார்ட் சிண்ட்ரோம்' என அழைக்கப்படுகிறது, சிலர் இதனை 'ஹார்ட் அட்டாக்' என்று கூட தவறாக நினைக்கலாம்.

பிரேக்-அப் நிகழ்ந்தவுடன் வரும் மன அழுத்தம், பொதுவாக உடல் வலியைக் குறிக்கும் ஹார்மோன்களை வெளியிடுகிறது. இந்த வலியை நம் மூளை பிரேக்-அப் நிகழ்வதை மிகுந்த வலியுடையதாக எடுத்துக்கொள்கிறது.

ஆனால், ஹார்ட் பிரேக், உள்ளங்கை வியர்ப்பது, பகுத்தறிவற்ற நடத்தைகள் எல்லாமும் இருந்தாலும் அதனையும் தாண்டி மனிதர்கள் ஒரு நாளின் ஒவ்வொரு நொடியிலும் காதலில் விழுகின்றனர், காதலில் நிலைத்திருக்கின்றனர். டோப்பமின் ஹார்மோன் அற்புதமாக உணரச்செய்யலாம். அப்படி இல்லாவிட்டாலும் இதயத்தை எப்போதும் மூளையே ஆளுகிறது.

('பிபிசி ஐடியாஸ்' பகுதியில் ' தி ஓபன் யுனிவர்சிட்டி'யுடன் கூட்டுறவு (Partnership) மூலம் தயாரிக்கப்பட்ட காணொளியின் அடிப்படையில் அமைந்தது இக்கட்டுரை)