1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 18 ஆகஸ்ட் 2016 (20:37 IST)

முன்னாள் விடுதலைப் புலிகளுக்கு விஷ ஊசி? புகாருக்கு அமைச்சர் மறுப்பு

புனர்வாழ்வு வழங்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுக்கு, ராணுவம் விஷ ஊசிகளை ஏற்றியுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன நிராகரித்துள்ளார்.
 

 
கம்பஹா பிரதேசத்தில் ஊடகவியலாளர்களிடம் அவர் இதைக் கூறியுள்ளார்.
 
புனர்வாழ்வு வழங்கப்பட்டுள்ள விடுதலை புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களுக்கு ராணுவம் விஷ ஊசிகளை ஏற்றியுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் பொய்யானவை என்று தெரிவித்தார்.
 
புற்றுநோய் காரணமாகவே சில போராளிகள் மரணமடைந்துள்ளதாகக் கூறிய அமைச்சர், சுகாதார பிரச்சினை காரணமாகவே இந்த மரணங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
 
சர்வதேச ரீதியல் அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு அமைய ராணுவம் புனர்வாழ்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறிய அமைச்சர் விஜேவர்த்தன, சில அரசியல்வாதிகள் அரசியல் லாபம் கருதி இவ்வாறான பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாகக் குற்றம் சாட்டினார்.
 
இவ்வாறான செயல்பாடுகளின் மூலம் நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு பாதிப்புக்கள் ஏற்படுவதாக அமைச்சர் விஜேவர்த்தன தெரிவித்தார்.
 
தமிழ் ஈழக் கனவு:
 
தமிழ் ஈழமொன்றை அமைக்கும் கனவுகளை மனதில் வைத்துக்கொண்டு வாழும் சில அரசியல்வாதிகள், இவ்வாறான பொய் பிரசாரங்களை பரப்பி வருகின்ற போதிலும், தமிழ் ஈழம் அமைக்க இடமளிக்கப்பட மாட்டாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
 
ஆனால் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களை ஒன்று சேர்த்து சமாதானமுள்ள நாடொன்றை உருவாக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளை, இவ்வாறான செயல்பாடுகளின் மூலம் தோற்கடிக்க முடியாதென்றும் அமைச்சர் விஜெவர்த்தன தெரிவித்தார்.