செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 8 அக்டோபர் 2020 (09:47 IST)

வருண் சக்ரவர்த்தி - தோனியை வீழ்த்திய தமிழக வீரர் - யார் இவர்?

2020 ஐபிஎல் தொடரில் பெரும் விவாதப்பொருளாக இருந்து வருவது சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வயதும், பங்களிப்பும் தான்.

தோனியின் உடல்தகுதி, பேட்டிங் வரிசை மற்றும் அவரின் ஷாட்கள் ஆகியவை தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வந்தது. இவற்றை பொருட்படுத்தாமல் தோனி விளையாடி வந்த போதிலும், சிஎஸ்கே அணி மீதும், அதன் ரசிகர்கள் மீதும் இந்த விமர்சனங்கள் அழுத்தம் அளித்து வந்தன.

இந்நிலையில், கொல்கத்தா அணிக்கு எதிராக அபுதாபியில் நடைபெற்ற போட்டியில் சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்த தோனி மிக அற்புதமாக பிடித்த கேட்ச் மற்றும் செய்த ரன்அவுட் பெரிதும் பாராட்டப்பட்டது.

பேட்டிங்கிலும் தோனி ஜொலிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், நான்காவது பேட்ஸ்மேனாக களத்தில் இறங்கி அந்த எதிர்பார்ப்பை அவர் அதிகரித்தார்.

ஆனால், சிஎஸ்கே அணியின் நம்பிக்கையும், தோனியின் விக்கெட்டும் கொல்கத்தா அணி சுழல் பந்துவீச்சாளரான வருண் சக்ரவர்த்தி வீசிய ஒரு பந்தில் வீழ்ந்தது.

சுழல் பந்துவீச்சாளர்களை திறன்பட எதிர்கொள்ளும் தோனி, வருண் சக்ரவர்த்தி வீசிய பந்தை சரியாக கணிக்க இயலாது போனதால் போல்டாகி ஆட்டமிழந்தார்.

மிகவும் பரபரப்பான தருணங்களில் நிதானமாக பந்துவீசிய வருண் சக்ரவர்த்தி, தான் வீசிய 4 ஓவர்களில் 28 ரன்கள் தந்து ஒரு விக்கெட்டை எடுத்தார்.

தோனியின் விக்கெட்டை எடுத்து தனது அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த வருண் சக்ரவர்த்தி, ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் நிபுணர்களின் பாராட்டை பெற்றுள்ளார்.

வருண் சக்ரவர்த்தி கடந்து வந்த பாதை
தமிழக வீரரான வருண் சக்ரவர்த்தி மிகவும் போராடியே கிரிக்கெட்டில் சாதித்தார் எனலாம்.

ஆரம்பத்தில், தமிழ்நாடு பிரீமியர்லீக் போட்டி தொடரில் சிறப்பாக விளையாடி அனைவரின் கவனத்தையும் அவர் ஈர்த்திருந்தார்.

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் தமிழக அணியின் சார்பாக விளையாடிய வருண் 22 விக்கெட்டுகளை எடுத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

2018-ஆம் ஆண்டு டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் கோப்பையை வென்ற மதுரை பாந்தர்ஸ் அணியில் அவர் விளையாடினார்.

7 விதமாக பந்து வீசும் திறமை

பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் விதமாக தனது சுழல் பந்துவீச்சில் 7 விதமான மாற்றங்களுடன் பந்துவீசுவார் வருண்.

ஆஃப்பிரேக், லெக்பிரேக், கூக்ளி, கேரம் பால், ஃப்ளிப்பர், டாப் ஸ்பின்னர் மற்றும் ஸ்லைடர் ஆகிய 7 விதமாக பந்து வீசக்கூடியவர் வருண் சக்கரவர்த்தி.

கணிக்க இயலாத சிறப்பான பந்துவீச்சு மற்றும் தொடர்ச்சியான பங்களிப்பால், 2018-ஆம் ஆண்டு டிசம்பரில் நடந்த ஐபிஎல் ஏலத்தில், கிங்ஸ் லெவன் அணிக்காக விளையாட 8.4 கோடி ரூபாய்க்கு அவர் ஏலம் எடுக்கப்பட்டார்.

அப்போது பிபிசி தமிழிடம் பேசிய அவர், ''அதிக தொகையில் ஏலம் எடுக்கப்பட்டது மற்றும் இதனால் கிடைக்கும் பெரும் கவனம் ஆகியவற்றைவிட ஓர் ஐபிஎல் அணிக்காக தேர்வாகியுள்ளேன் என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது'' என்று தெரிவித்தார்.

பள்ளி காலத்தில் விக்கெட்கீப்பராக வருண் சக்ரவர்த்தி செயல்பட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக அவர் சுழல் பந்துவீச்சில் சிறப்பாக பங்களித்து வருகிறார். இது குறித்து வருண், ''பள்ளிக்காலத்தில் விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேனாக நான் இருந்தேன். பள்ளி பருவத்துக்கு பிறகு ஏறக்குறைய 7 ஆண்டுகள் நான் பெரிதாக கிரிக்கெட் விளையாடவில்லை'' என்று நினைவுகூர்ந்தார்.

2018-ஆம் ஆண்டு ரஞ்சி கோப்பை தொடரில் தமிழக அணிக்காக வருண் அறிமுகமானார்.

தனது முதல் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய வருண், நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடுகிறார்.

இதுவரை இந்த தொடரில் 4 போட்டிகளில் விளையாடிய வருண், 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். குறிப்பாக சிக்கனமாக பந்துவீசுவதாகவும், நுட்பமாக பந்துவீசுவதாகவும் பாராட்டுகளை பெற்றுள்ளார்.