1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 14 பிப்ரவரி 2021 (13:30 IST)

அமெரிக்க நாடாளுமன்ற தாக்குதல்: தண்டனையில் இருந்து தப்பினார் டிரம்ப்

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது கொண்டு வரப்பட்ட கண்டனத் தீர்மானத்துக்கு செனட் சபை விசாரணையில், மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காததால், மேலதிக விசாரணை மற்றும் தண்டனையிலிருந்து டிரம்ப் தப்பியுள்ளார். கடந்த ஜனவரி 6-ம் தேதி நடந்த அமெரிக்க கேப்பிட்டல் கட்டட தாக்குதலுக்கு டிரம்பே காரணம் எனக் குற்றம் சுமத்தப்பட்டது.

இதுதொடர்பாக நடந்த வாக்கெடுப்பில், 57 செனட் உறுப்பினர்கள் டிரம்பை தண்டிக்கவும், 43 உறுப்பினர்கள் தண்டிக்க வேண்டாம் எனவும் வாக்களித்தனர். குறிப்பாக, டிரம்ப் அங்கம் வகிக்கும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 7 உறுப்பினர்கள் அவருக்கு எதிராக வாக்களித்தனர். இருப்பினும் தேவையான 67 வாக்குகள் கிடைக்கவில்லை.

"இது வரலாறு காணாத மிகப் பெரிய வேட்டையாடும் நடவடிக்கை" என இந்தக் கண்டனத் தீர்மான வாக்கெடுப்புக்குப் பிறகு கூறினார் டொனால்ட் டிரம்ப்.

இது டிரம்புக்கு எதிராக கொண்டு வரப்பட்ட இரண்டாவது கண்டனத் தீர்மானம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை டிரம்ப் தண்டிக்கப்பட்டிருந்தால், டிரம்ப் மீண்டும் அதிபர் தேர்தலில் பங்கெடுப்பதற்கு அமெரிக்க செனட் சபை தடை விதித்திருக்கக் கூடும்.

இந்த வாக்கெடுப்புக்குப் பிறகு, அமெரிக்க காங்கிரஸ் அவையில் இருக்கும் குடியரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் மிட்ச் மெக்கானல், "டிரம்ப் தான் கேப்பிட்டல் கட்டடத் தாக்குதலுக்கு பொறுப்பு. அது மிக மிக மோசமானது, அதிபர் தன் கடமையில் இருந்து தவறிய செயல்" எனக் கூறினார். இவர் கண்டனத் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது டிரம்ப் அதிபர் கிடையாது, எனவே இந்தக் கண்டனத் தீர்மானம் அரசியலமைப்புக்கு எதிரானது" எனக் கூறினார். டிரம்ப் பதவிக் காலம் முடியும் வரை (2021 ஜனவரி 20-ம் தேதி வரை), கண்டனத் தீர்மானம் தொடர்பான செனட் விசாரணையை தாமதப்படுத்தியதில் இவருக்கு முக்கியப் பங்குண்டு.

கண்டனத் தீர்மானத்தில் டிரம்புக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தாலும், நீதிமன்றத்தில் டிரம்ப் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று கூறுகிறார் மிட்ச் மெக்கானல்.

"டிரம்ப் எதிலிருந்தும் இன்னும் விடுபடவில்லை. அமெரிக்காவில் குற்றவியல் நீதி அமைப்பு இருக்கிறது. அதே போல சிவில் வழக்குகளும் தொடுக்கலாம். இந்த இரண்டில் இருந்தும் அமெரிக்க அதிபர்கள் பாதுகாக்கப்படமாட்டார்கள்" எனக் கூறியுள்ளார் மிட்ச் மெக்கானல்.

சனிக்கிழமை என்ன நடந்தது?

முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பை தண்டிக்காமல் விடுவது, ஆபத்தானது என ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் தங்கள் இறுதி வாதத்தின்போது குறிப்பிட்டனர்.

"இதை விட ஆபத்தான சூழல் இல்லை. காரணம் கடந்த 2021 ஜனவரி 6-ம் தேதி நடந்தது போல மீண்டும் ஒரு தாக்குதல் நடக்கலாம் என்பது தான் கசப்பான உண்மை" என்றார் பிரதிநிதிகள் சபை உறுப்பினர் ஜோ நெகஸ்.

"இந்தக் கண்டனத் தீர்மான விசாரணையே ஒரு காட்சிக்காகத் தான் நடத்தப்படுகிறது. ஜனநாயகக் கட்சியினர் டிரம்புக்கு எதிராக கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்கிற ஆவேசத்திலேயே இருக்கிறார்கள்" என டிரம்பின் வழக்குரைஞர் மைக்கெல் வன் டீர் வீன் வாதாடினார்.

"இதுபோன்ற ஒரு சூழலை இதுவரை எந்த அமெரிக்க அதிபரும் எதிர்கொண்டதில்லை. அமெரிக்காவை மீண்டும் பெரிய சக்தி வாய்ந்த நாடாக மாற்றுவோம் என்கிற இயக்கம் இப்போதுதான் தொடங்கி இருக்கிறது" என டொனால்ட் டிரம்ப் கூறினார்.

சாட்சியங்கள் விசாரிக்கப்படவில்லை

தொடக்கத்தில் சாட்சியங்களை விசாரிக்க செனட்டர்கள் வாக்களித்திருந்தனர். இதனால் இந்த விசாரணையின் தீர்ப்பு வெளியாக தாமதமாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அவசர கலந்தாலோசனைக்குப் பிறகு, எழுத்துப்பூர்வமான வாக்குமூலங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என மாற்றிவிட்டார்கள்.

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அதிகாரி கெவின் மெக்கார்திக்கு இடையில், கேப்பிட்டல் கட்டடத் தாக்குதல் நடந்து கொண்டிருந்த போது பேசிய தொலைபேசி அழைப்பு குறித்த விவாதத்தின் போது தான், சாட்சியங்களை விசாரிப்பது தொடர்பான விவகாரத்தில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டது.

டிரம்புடனான அழைப்பு குறித்து, கெவின் மெக்கார்தி கலவரம் ஏற்பட்ட அன்றே தன்னிடம் பகிர்ந்து கொண்டதாக குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் சபை உறுப்பினர் ஜேமி ஹெரெரா பெட்லர் கூறினார்.

"கேப்பிட்டல் கட்டடக் கலவரக்காரர்களை பின் வாங்க அழைப்புவிடுக்குமாறு, டிரம்பிடம் கெவின் மெக்கார்தி வேண்டுகோள் வைத்தார். ஆனால் டிரம்ப், அந்த கலவரத்துக்கு இடதுசாரிகள் மீது குறை கூறினார். அதை மறுத்த மெக்கார்தி, கலவரக்காரர்கள் டிரம்பின் ஆதரவாளர்கள் என டிரம்பிடம் விளக்கினார்" என ஜேமி ஹெரெரா கூறினார்.