ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 12 மே 2021 (09:38 IST)

சிக்கல் தரும் சீன மக்கள்தொகை: குறையும் பிறப்பு விகிதம்; அதிகரிக்கும் முதியவர்கள்

சீனாவின் மக்கள்தொகை பெருக்க விகிதம் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைந்திருப்பதாக சீன அரசு வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்களில் தெரியவருகிறது.
 
கடந்த 10 ஆண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 0.53 சதவிகிதமாக இருந்தது. அதற்கு முந்தைய பத்தாண்டுகளில் இது 0.57 சதவிகிதமாக இருந்து வந்தது. மக்கள்தொகை அதிகரிக்கும் வேகம் குறைந்திருப்பதால் தற்போதைய மக்கள்தொகை 141 கோடி ஆகியுள்ளது.
 
இந்தப் புள்ளி விவரங்கள் சீன அரசுக்கு புதிய சிக்கலை உருவாக்கியுள்ளன. மக்கள்தொகை குறைந்துவிடாமல் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்கு சீனா நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.
 
சீனாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் விவரங்கள் வெளியிடப்பட்டிருக்க வேண்டும்.
 
மக்கள்தொகை கணக்கெடுப்பு 2020-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நடத்தப்பட்டது. 70 லட்சம் ஊழியர்கள் வீடுவீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
 
இந்தக் கணக்கெடுப்பு மூலம் வெளியிடப்பட்டிருக்கும் புள்ளிவிவரம் மிகவும் விரிவானதாகவும், நாட்டின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு அவசியமானதாகவும் கருதப்படுகிறது.
 
சீனாவின் பிறப்பு விகிதம் பற்றி தெரிந்தது என்ன?
கடந்த ஆண்டில் மட்டும் 1.2 கோடி குழந்தைகள் பிறந்திருப்பதாக தேசிய புள்ளிவிவர அமைப்பின் தலைவர் நிங் ஜிஷே தெரிவித்துள்ளார். 2016-ஆம் ஆண்டில் பிறந்த 1.8 கோடி குழந்தைகளை விட இந்த எண்ணிக்கை கணிசமாகக் குறைவு.
 
சீனாவில் பிறப்பு விகிதம் குறைந்து போனதற்கு சமூகப் பொருளாதார வளர்ச்சியே காரணம் என்று ஜிஷே கூறினார்.
 
சீனாவின் அண்டை நாடுகளான ஜப்பான், தென்கொரியா போன்றவற்றிலும் பிறப்பு விகிதம் வீழ்ச்சியடைந்திருக்கிறது. தம்பதிகள் இப்போது இருப்பதைவிட அதிகமான எண்ணிக்கையில் குழந்தைகளைப் பெறுவதற்காக அரசுகள் எடுத்த நடவடிக்கைகளுக்கு போதிய பலன் கிடைக்கவில்லை.
 
கடந்த ஆண்டில் தென்கொரியாவில் பிறப்புகளைவிட அதிக இறப்புகள் பதிவாகின. இது வரலாற்றிலேயே முதல்முறை. ஏற்கெனவே உலகில் குறைந்த பிறப்புவிகிதம் கொண்டிருக்கும் நாட்டில், இந்தப் புள்ளி விவரம் புதிய அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
 
மக்கள்தொகை சுருங்குவது புதிய சிக்கல்களை ஏற்படுத்தும். வயதானவர்கள் அதிகமாகவும் இளையவர்கள் குறைவாகவும் இருப்பார்கள். அப்படி நடக்கும்போது வேலை செய்வதற்கான இளைஞர்கள் கிடைக்கமாட்டார்கள். முதியவர்களுக்கு ஆதரவாக இருப்பதற்கான ஆட்களும் இருக்கமாட்டார்கள். மருத்துவத்துக்கும் சமூகப் பராமரிப்புத் திட்டங்களுக்கும் அதிகம் செலவிட வேண்டியிருக்கும்.
 
பிறப்பு விகிதம் குறைவதை சரிசெய்ய சீனா என்ன செய்திருக்கிறது?
நிறைய செய்திருக்கிறது. ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற சர்ச்சைக்குரிய கொள்கையை 2016-ஆம் ஆண்டில் சீனா நீக்கியது. இரண்டு குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள அனுமதி அளித்தது.
 
ஆனால் இது நீடித்த பலனைத் தரவில்லை. முதல் இரண்டு ஆண்டுகளுக்கு பிறப்பு விகிதம் அதிகரித்தது. பின்னர் வீழ்ச்சியடைத் தொடங்கிவிட்டது.
 
"இரண்டாவது குழந்தைக்கு அனுமதியளிக்கும் கொள்கை நல்ல விளைவைத் தந்தாலும், அது குறுகிய காலத்துக்கு மட்டுமே" என்கிறார் பொருளாதார நுண்ணறிவுப் பிரிவின் முதன்மை பொருளாதார நிபுணரான யீ சூ.
 
மக்கள் தொகை புள்ளிவிவரங்களுடன் குடும்பக் கட்டுப்பாட்டுக் கொள்கை நீக்கப்படும் என்ற அறிவிப்பும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் வெளியாகவில்லை.
 
மக்கள்தொகை கணக்கெடுப்பு புள்ளி விவரங்கள் வெளியாகும்போது சீனாவில் மக்கள்தொகை குறைந்து வருவது தெரியவரும் என்று அதிகாரிகளை மேற்கோள்காட்டி கடந்த ஏப்ரலில் ஃபைனான்சியல் டைம்ஸ் இதழ் கூறியது. ஆனால் அப்படி நடக்கவில்லை. மக்கள்தொகை பெருகும் வேகம் மட்டுமே குறைந்திருக்கிறது. இருப்பினும் வரும் ஆண்டுகளில் அப்படி நடக்கலாம் என்ற நிபுணர்கள் கூறுகிறார்கள்.
 
"2021 அல்லது 2022 அல்லது கூடிய விரைவில்" மக்கள்தொகை குறைந்திருப்பதாக அறிவிப்பு வெளியாகும் என்று மக்கள்தொகை நிபுணர் ஹுவாங் வென்ஷாங் கூறியதாக ராய்ட்டர்ஸ் தெரிவிக்கிறது.
 
மக்கள்தொகையைக் குறைப்பதற்காக ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்று கொள்கையை 1979ஆம் ஆண்டு சீனா அறிமுகப்படுத்தியது. இதை மீறிய குடும்பங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. வேலை பறிபோனது. சில நேரங்களில் வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்யப்பட்டது. இதன் மூலமாக சீனாவின் மக்கள்தொகை படிப்படியாக கட்டுக்குள் வரத் தொடங்கியது.
 
உழைக்கும் மக்கள்தொகை
16 முதல் 59 வயது வரையிலான நபர்களின் எண்ணிக்கையைத்தான் உழைக்கும் மக்கள்தொகை என்கிறோம். சீனாவில் இந்த எண்ணிக்கை கடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பைவிட சுமார் 4 கோடி அளவுக்குக் குறைந்திருக்கிறது.
 
ஆயினும் உழைக்கும் மக்கள் இப்போதும் 88 கோடி பேர் இருக்கிறார்கள். இது குறைவான எண்ணிக்கை இல்லை. அளவுக்கு அதிகமாகவே உழைக்கும் மக்கள் இருக்கிறார்கள் என்கிறார் மூத்த முறையிலாளர் ஜெங் யூபிங்.
 
ஆனால் பொருளாதார நிபுணர் யூவின் கருத்து வேறு மாதிரி இருக்கிறது. உழைக்கும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வந்தால் சீனாவின் பொருளாதார வளர்ச்சி முடங்கும் நிலை ஏற்படலாம் என்று அவர் எச்சரிக்கிறார்.
 
உலகளாவிய தாக்கம் என்ன?
- ராபின் பிரான்ட், ஷாங்காய் செய்தியாளர்
 
மக்கள் தொகை பற்றி புள்ளி விவரங்களைத் "தயாரிக்க" கூடுதலாகச் சில வாரங்கள் எடுத்துக் கொண்ட அதிகாரிகள் சீனாவில் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்ற தகவலைக் கூற உதவியிருக்கிறார்கள்.
 
மக்களில் பெரும்பாலோனோருக்கு வயதாகிறது. 14 வயதுக்கு உட்பட்டோரின் எண்ணிக்கை சற்று அதிகரித்திருக்கிறது. இதற்கு ஒரு குழந்தை கொள்கையைக் கைவிட்டதே காரணம் என்று மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அமைப்பின் தலைவர் கூறுகிறார்.
 
அடுத்த ஆண்டில் இருந்து மக்கள்தொகை குறையத் தொடங்கும் என்று அரசு ஊடகம் பேசத் தொடங்கிவிட்டது.
 
இத்தகைய மக்கள்தொகை மாற்றம் சீனாவுக்கு மட்டுமே உடையதல்ல. உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட, உள்நாட்டு நுகர்வைச் சார்ந்திருக்கிற ஒரு நாட்டுக்கு இது முக்கியமான பிரச்னையாகிறது.
 
செலவுகளைக் குறைப்பதற்கு ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க வேண்டும் என்று சீன கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஏற்கெனவே வலியுறுத்தத் தொடங்கிவிட்டார்கள்.
 
சீனாவின் மக்கள் தொகை குறையத் தொடங்குவது உலகின் பகுதிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
 
"சீனாவின் பொருளாதாரம் மிக விரைவாக வளர்ச்சியடைந்துவி்ட்டது. உலகின் பல தொழில்கள் சீனாவைச் சார்ந்திருக்கின்றன. அதனால் மக்கள்தொகை குறைவதால் ஏற்படும் தாக்கத்துக்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம்" என்கிறார் விஸ்கான்சின் - மேடிசன் பல்கலைக்கழக விஞ்ஞானியான யீ பியூக்சியான்.