1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (12:26 IST)

இலங்கையில் வரலாற்று வெற்றியை தனதாக்கியது ராஜபக்ஷ சகோதரர்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி

இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நடத்தப்பட்ட தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வரலாற்று ரீதியிலான வெற்றியை தன்வசப்படுத்தியுள்ளது.

68 லட்சத்து 53 ஆயிரத்து 690 வாக்குகளை பெற்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றியை தனதாக்கிக் கொண்டது.
 
225 ஆசனங்களில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுகொள்ளும் நோக்குடன் களமிறங்கிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு அதனை அண்மித்த வாக்குகளை பெற்றுகொள்ள முடிந்துள்ளது.
 
150 ஆசனங்களை பெற்றால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுகொள்ள முடியும் என்ற நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு 145 ஆசனங்கள்  கிடைத்துள்ளன.
 
எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி 27 லட்சத்து 71 ஆயிரத்து 980 வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்தை  பெற்றுள்ளது.
 
இதன்படி, ஐக்கிய மக்கள் சக்திக்கு 54 ஆசனங்கள் கிடைத்துள்ளன. தேசிய மக்கள் சக்தி மூன்று ஆசனங்களை தனதாக்கிக் கொண்டது.
 
தேசிய மக்கள் சக்திக்கு 4 லட்சத்து 45 ஆயிரத்து 958 வாக்குகள் கிடைத்துள்ள அதேவேளை, அந்த கட்சிக்கு 3 ஆசனங்கள் கிடைத்துள்ளன.
 
இலங்கை தமிழரசு கட்சி 3 லட்சத்து 27 ஆயிரத்து 168 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளதுடன், தமிழரசு கட்சிக்கு 10 ஆசனங்கள் கிடைத்துள்ளன.
 
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி இந்த முறை தேர்தலில் என்றும் இல்லாதவாறான தோல்வியை சந்தித்தது.
 
இதன்படி, 2 லட்சத்து 49 ஆயிரத்து 435 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தை மாத்திரமே பெற்றுகொண்டுள்ளது.
 
ஏனைய கட்சிகள் பெற்ற ஆசனங்களின் விபரங்கள்:
 
ஜாதிக்க ஜன பலவேகே - 2
 
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 2
 
தேசிய காங்கிரஸ் - 1
 
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி - 1
 
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 1
 
தமிழ் மக்கள் தேசியக் கட்சி - 1
 
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி - 1
 
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 1
 
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - 1
 
முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு - 1
 
இந்திய பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து
 
மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி வியாழக்கிழமை தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார்.
 
இதுதொடர்பாக இந்தியப் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், "கொரோனா நோய்த்தொற்று பரவலால் ஏற்பட்டுள்ள தடைகளுக்கு இடையிலும், இலங்கை  நாடாளுமன்ற தேர்தலை திறம்பட நடத்தியமைக்காக அந்நாட்டு அரசுக்கு பிரதமர் மோதி வாழ்த்து தெரிவித்தார். தேர்தலில் இலங்கை பொதுஜன பெரமுன கட்சி வெற்றிபெறும் என்று ஆரம்ப கட்ட வாக்கு எண்ணிக்கையின் மூலம் தெரிகிறது.

இதற்காக சிறப்பாக செயல்பட்ட அக்கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு  வாழ்த்து தெரிவித்தார். தேர்தலில் ஆர்வத்துடன் வாக்களித்த அந்நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த இந்தியப் பிரதமர் மோதி, இருநாடுகளும் வலுவான  ஜனநாயக விழுமியங்களை பகிர்ந்துகொள்வதை இது பிரதிபலிப்பதாகவும் தெரிவித்தார்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
 
இந்த தகவலை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இரு நாடுகள் இடையே நீண்ட கால ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த இலங்கை மக்களின் வலுவான ஆதரவுடன் இந்தியாவுடன் நெருக்கமாக பணியாற்றும் எதிர்பார்ப்புடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.