1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 2 செப்டம்பர் 2024 (13:35 IST)

தாய்லாந்து: 'அந்நிய' திலாப்பியா மீன்களை பிடித்தால் மக்களுக்கு பணம் தரும் அரசு - காரணம் என்ன?

Tilapia Fish

திலாப்பியா மீன்களை தாய்லாந்தில் கண்டுப்பிடிக்கப்பட்ட ''வேறு எங்கோ பகுதியில் இருந்து வந்த, மிகவும் அபாயகரமான உயிரினம்'' என்று அதிகாரிகள் விவரிக்கின்றனர். இவை சுற்றுச்சூழலுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும் ஆபத்தை கொண்டவை.

 

 

இவற்றை கட்டுப்படுத்த மரபணு மாற்றம் செய்வது மற்றும் ஏரிகளில் மக்கள் கூட்டத்தை இறக்கி மீன்களை பிடிக்க வைப்பது ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

இருப்பினும் பிளாக்சின் திலாப்பியா தாய்லாந்தின் நீர்வழிகள் வழியாக தொடர்ந்து பரவி வருகிறது, இதுவரை 17 மாகாணங்களை பாதித்துள்ளது.

 

தாய்லாந்து நாடாளுமன்றத்தில் இதுகுறித்து மேற்கொள்ளப்படும் விசாரணையானது அந்த மீன் பரவும் காரணத்தையும், அதன் தீர்வையும் வெளிக் கொணர்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

பாங்காக் நாடாளுமன்ற உறுப்பினர் நட்டாச்சா பூஞ்சைன்சாவத் இது குறித்து பேசுகையில் "நாங்கள் அடுத்த தலைமுறைக்கு இந்த அழிவுகரமான சுற்றுச்சூழல் அமைப்பை கடத்த மாட்டோம்" என்று குறிப்பிட்டார்.

 

தொலைதூர மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து வந்த இந்த மீன்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவது எப்படி? இதற்கு எதிரான போரில் தாய்லாந்து அதிகாரிகளால் வெற்றி பெற முடியுமா?

 

ஒரு அந்நிய மீனுடன் போரிடுதல்
 

தாய்லாந்தில் கடந்த காலத்தில் பிளாக்சின் திலாப்பியாவின் பரவல் ஏற்பட்டது. ஆனால் இந்த மிக சமீபத்திய பரவல் அத்தியாயத்தைப் போல இதுவரை தீவிரமாக ஏற்படவில்லை.

 

இந்த குறிப்பிட்ட நிகழ்வு, தாய்லாந்து பொருளாதாரத்தில் குறைந்தது 10 பில்லியன் பாட் (293 மில்லியன் டாலர்) வரை பாதிப்பை ஏற்படுத்தும் என நட்டாச்சா மதிப்பிடுகிறார்.

 

தாய்லாந்தின் முக்கியமான மீன்வளர்ப்பு பிரிவில் உள்ள சிறிய மீன்கள், இறால் மற்றும் நத்தை லார்வாக்களை, பிளாக்சின் திலாப்பியா வேட்டையாடுகிறது என்பதே முக்கிய பிரச்னை.

 

எனவே பல மாதங்களாக, ஆறுகள் மற்றும் சதுப்பு நிலங்களில் தங்கள் வழியைக் கண்டறிந்த கருப்பு நிற திலாப்பியாவைப் பிடிக்க அரசாங்கம் மக்களை ஊக்குவித்து வருகிறது.

 

இந்த மீன்கள் உவர் நீரில் வளரும், அதே சமயம் நன்னீர் மற்றும் உப்பு நீரிலும் வாழ முடியும். தாய்லாந்து அரசாங்கம் மீன் பிடிப்பவர்களுக்கு ஒரு கிலோவிற்கு 15 பாட் ($0.42) என்று வழங்கும் தொகையை தற்போது இரட்டிப்பாக்கியுள்ளது.

 

அதன் விளைவாக பாங்காக்கின் புறநகர் பகுதிகளில், தங்கள் பிளாஸ்டிக் பைகளுடன் பிளாக்சின் திலாப்பியாவை பிடிக்கும் நம்பிக்கையில் மக்கள் கூட்டம் முழங்கால் ஆழம் இருக்கும் நீரில் அலைமோதுகிறது.

 

பிளாக்சின் திலாப்பியாவை அழிக்கும் முயற்சியாக, அதனை வேட்டியாடும் ஏசியன் சீபாஸ் மற்றும் நீண்ட மீசையை கொண்ட கெட்ஃபிஷ்களை நீர் நிலைகளில் அதிகாரிகள் நீந்த விட்டுள்ளனர்

 

இருப்பினும், வேகமாக இனப்பெருக்கம் செய்யும் இந்த மீன்களை எதிர்த்து போராடுவது கடினம். பெண் திலாப்பியா மீன்களால் ஒரே நேரத்தில் 500 குஞ்சுகளை உற்பத்தி செய்ய முடியும்.

 

எனவே, மலட்டு சந்ததிகளை உருவாக்கும் மரபணு மாற்றப்பட்ட பிளாக்சின் திலாப்பியாவை உருவாக்கும் அளவிற்கு அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர். அவற்றின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதைத் தடுக்கும் நம்பிக்கையில், இந்த ஆண்டு இறுதிக்குள் மரபணு மாற்றப்பட்ட திலாப்பியாவை நீர் நிலைகளில் விட திட்டமிட்டுள்ளனர்.

 

ஆனால் நட்டாச்சா பிபிசி தாய்லாந்து சேவையிடம் பேசுகையில், அரசாங்கம் இன்னும் அதிகமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கூறினார்.

 

"மக்கள் இந்த பிரச்னைகளை மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டும், இல்லையெனில் இந்த விஷயம் அமைதியாகிவிடும், மேலும் இதுபோன்ற சூழலை அடுத்த தலைமுறைக்கு நாம் கடத்தி செல்வோம்." என்றார்.

 

தாய்லாந்தில் இந்த மீன்கள் நுழைந்தது எப்படி?
 

இந்த மீனின் கன்னங்களில் உள்ள கரும்புள்ளிகளால் இதனை எளிதில் அடையாளம் காண முடியும். தாய்லாந்தில் இந்த மீன்கள் நுழைந்தது எப்படி?

 

சாரோன் போக்பாண்ட் ஃபுட் (சிபிஎஃப்) என்ற உணவு உற்பத்தி நிறுவனம் 14 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொண்ட சோதனை மூலம் இந்த மீன்களின் பரவல் நிகழ்ந்தது.

 

கால்நடை தீவனங்களை உற்பத்தி செய்வது, இறால் மற்றும் கால்நடை பண்ணைகளை நடத்துவது ஆகிய தொழிலில் உள்ள இந்த நிறுவனம் 2010 இன் இறுதியில் கானாவிலிருந்து 2,000 திலாப்பியா மீன்களை இறக்குமதி செய்தது. அப்போது அனைத்து மீன்களும் இறந்து, முறையாக புதைக்கப்பட்டன என அந்த நிறுவனம் கூறியது.

 

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தாய்லாந்தில் பிளாக்சின் திலாபியாவின் பரவல் பதிவாகியுள்ளது. அந்த சிபிஎஃப் ஆய்வகம் அமைந்திருக்கும் பகுதிகளிலும் இந்த கொடிய மீனின் பரவல் காணப்பட்டதாக உள்ளூர் ஊடகமான `தாய் பிபிஎஸ்' தெரிவித்துள்ளது.

 

ஆனால், தாய்லாந்தின் மிகப்பெரிய கூட்டு நிறுவனங்களில் ஒன்றான சரோயன் போக்பாண்ட் குழுமத்தின் (CP Group) விவசாய வணிகப் பிரிவான சிபிஎஃப் இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது.

 

இந்த விஷயத்தில் "தவறான தகவல்" பரப்புபவர்கள் மீது வழக்குத் தொடர போவதாகவும் அது மிரட்டல் விடுத்துள்ளது.

 

தீங்கு விளைவிக்கும் அந்நிய மீன்களின் பரவலை எதிர்த்துப் போராடும் அரசு அமைப்புகளுடன் இந்த நிறுவனம் இணைந்து செயல்படுகிறது.

 

"மீனின் பரவலுக்கு தாங்கள் காரணம் அல்ல என்று நிறுவனம் நம்பினாலும், இந்த விஷயத்தில் நிறுவனம் அலட்சியமாக இல்லை, மேலும் மக்களின் துன்பத்தைப் போக்க அரசாங்கத்துடன் ஒத்துழைக்கத் தயாராக உள்ளது" என்று சிபிஎஃப்-இன் மீன்வளர்ப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு அதிகாரி பிரேம்சக் வனுச்சூன்டோர்ன் கூறினார்.

 

இருப்பினும், சிபிஎஃப் நிறுவன அதிகாரிகள் ஒரு முறை மட்டுமே நாடாளுமன்ற விசாரணைகளில் நேரில் கலந்து கொண்டுள்ளனர்.

 

அவர்கள் இதற்கு முன்பு சட்ட வல்லுனர்களுடன் எழுத்துப்பூர்வமாக தங்கள் விளக்கத்தை அளித்துள்ளனர்.

 

தாய்லாந்தின் மீன்வளத் துறையின் இயக்குநர் ஜெனரல் பாஞ்சா சுக்காவ், இதற்கு முன்பு ஒரு தனியார் நிறுவனம் மட்டுமே திலாப்பியாவை இறக்குமதி செய்ய அனுமதி கோரியதாகக் குறிப்பிடுகிறார். ஆய்வகத்தில் இருந்து தப்பிச் சென்றதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

 

பரவலை கட்டுக்குள் கொண்டு வருவது கடினம்
 

இருப்பினும், இந்த மீன்கள் தாய்லாந்திற்கு கடத்தப்பட்டிருக்கக் கூடிய சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து வருவதாக அவர் கூறினார்.

 

இறுதியில், தாய்லாந்து நீர்வழிகளில் அவை எப்படி வந்தன என்பது கடந்த காலம். தற்போது கருத்தில் கொள்ள வேண்டியது எதிர்காலத்தில் அதன் பரவலை எப்படி கட்டுக்குள் கொண்டு வருவது என்பது மட்டுமே. அதுதான் உண்மையான பிரச்னை. ஆனால் அது சாத்தியமா?

 

பிளாக்சின் திலாப்பியாவுக்கு எதிரான இந்த போர் தோல்வியடையும் என்று நிபுணர்கள் பிபிசி தாய்லாந்து சேவைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தனர்.

 

வாலைலக் பல்கலைக்கழகத்தின் நீர்வாழ் விலங்கு மரபியல் நிபுணரான டாக்டர் சுவிட் வுதிசுதிமேதவீ, "அதை ஒழிப்பதற்கான சாத்தியக்கூறுகளை நான் தற்போது வரை காணவில்லை" என்றார்.

 

"ஏனென்றால் அதன் வரம்பை நாம் கட்டுப்படுத்த முடியாது. இது இயற்கை சூழலில் இருக்கும்போது, அது தொடர்ந்து இனப்பெருக்கம் செய்கிறது, வேகமான இனப்பெருக்க சுழற்சியைக் கொண்டுள்ளது" என்று டாக்டர் சுவிட் கூறினார்.

 

நன்னீர் சுற்றுச்சூழல் அமைப்புகளில் நிபுணரான நோன் பானிட்வோங் இதனை ஒப்புக்கொண்டார்.

 

"அந்நிய இனங்கள் மத்தியில் இருக்கும் பிரச்னை என்னவென்றால், அவை சுற்றுச்சூழலுக்குள் நுழைந்தவுடன், அவற்றை அழிப்பது மிகவும் கடினம்," என்று அவர் கூறினார்.