புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: செவ்வாய், 2 ஜூலை 2019 (21:38 IST)

இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: பாதுகாப்பு முன்னாள் செயலாளர், போலீஸ் மாஅதிபர் கைது

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பி வைக்கப்பட்டிருந்த போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணைகளின் பின்னர் இருவரும் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவிக்கின்றார்.
 
குறித்த இருவரும் விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று காலை 10 மணிக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
 
இந்நிலையில் பாதுகாப்பு முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, உடல்நலக் குறைவு காரணமாக தேசிய மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார்.
 
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையினால், தான் எதிர்வரும் திங்கட்கிழமை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாவதாக அறிவித்திருந்தார்.
 
எனினும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹேமசிறி பெர்ணான்டோவிடம், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலத்தை பெற்றுக் கொண்ட நிலையில் அவரை கைது செய்ததாக ருவன் குணசேகர குறிப்பிட்டார்.
 
 
அதனைத் தொடர்ந்து, கட்டாய விடுமுறையில் அனுப்பி வைக்கப்பட்ட போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தரவும் உடல்நலக் குறைவு எனக் கூறி போலீஸ் மருத்துவமனையில் இன்று முற்பகல் அனுமதிக்கப்பட்டார்.
 
போலீஸ் மருத்துவமனைக்கு சென்ற குற்றப் புலனாய்வுத் திணைக்கள, அதிகாரிகள், அவரை தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளதாகவும் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.
 
ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னதாகவே தகவல் அறிந்திருந்த போதிலும், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க தவறியதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிந்தது.
 
இந்நிலையில், பாதுகாப்பு முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பி வைக்கப்பட்ட பூஜித் ஜயசுந்தர ஆகியோரை கைது செய்யுமாறு, சட்ட மாஅதிபர், பதில் போலீஸ்மா அதிபருக்கு நேற்று அறிவித்திருந்தார்.
 
இந்த பின்னணியிலேயே இவர்கள் இருவரையும் குற்றப் புலனாய்வு பிரிவினர் இன்று கைது செய்துள்ளனர்.