புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 27 அக்டோபர் 2021 (12:29 IST)

விண்வெளி அறிவியல் அதிசயம்: பால்வெளிக்கு வெளியே முதல் கோளைக் கண்டுபிடித்த நாசா

பால்வெளிக்கு வெளியே கோள் இருப்பதற்கான சில அறிகுறிகளை வானியல் வல்லுநர்கள் கண்டுள்ளனர். அது ஒரு கோள் என்று கண்டுபிடிக்கப்பட்டால் அது பால்வெளிக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட முதல் கோளாக இருக்கும்.

நமது சூரிய மண்டலத்தில் இல்லாத, கிட்டத்தட்ட 5,000 எக்ஸோப்ளேனட் எனப்படும் புறக்கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பூமி சூரியனைச் சுற்றுவதைப் போல அவை மற்ற நட்சத்திரங்களைச் சுற்றி வருகின்றன. ஆனால் அவை அனைத்தும் நாம் வாழும் பால்வெளி பேரடைக்கு (milky way galaxy) உள்ளேதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நாசாவின் சந்திரா எக்ஸ்-ரே தொலைநோக்கி, புதிய கோளுக்கான சமிக்ஞையை மெஸ்ஸியர் 51 பேரடையில் கண்டுபிடித்துள்ளது. அது நாம் இருக்கும் பால்வெளி பேரடையில் இருந்து 28 மில்லியன் (2.8 கோடி) ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.

வழக்கம் போலவே, புறக்கோள்களின் நகர்வை (டிரான்சிட்) வைத்தே இந்த புதிய கோள் கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது புறக்கோள்கள் அவை சுற்றும் விண்மீனைச் சுற்றி வரும்போது, அந்த விண்மீனில் இருந்து வரும் வெளிச்சம், பூமியில் இருந்து பார்ப்பவர்களுக்குத் தடுக்கப்படும். கோள்கள் கடப்பதால் வின்மீன்களின் ஒளி மங்குவதைத் தொலைநோக்கி மூலம் காணலாம்.

எக்ஸ்-ரே ப்ரைட் பைனரி என்கிற ஒரு வகையான விண்வெளிப் பொருளிலிருந்து வரும் எக்ஸ்-ரே கதிர்களின் பொலிவு குறைவாக இருந்ததை முனைவர் ரொசான் டி ஸ்டெஃபனோ மற்றும் அவரது சகாக்கள் ஆராய்ந்ததனர்.

பொதுவாக இது போன்ற பொருட்களில் ஒரு நியூட்ரான் நட்சத்திரம் அல்லது தனக்கு அருகில் இருக்கும் நட்சத்திரங்களிலிருந்து வாயுக்களை தனக்குள் இழுத்துக் கொள்ளும் கருந்துளையைக் கொண்டதாக இருக்கும். நியூட்ரான் நட்சத்திரம் அல்லது கருந்துளைக்கு அருகிலுள்ள பொருட்கள் அதிகம் சூடாகி, எக்ஸ்-ரே அலை நீளத்தில் ஜொலிக்கும்.

காரணம் அப்பகுதியில் பொலிவான எக்ஸ் ரே கதிர்கள் உருவாவது மிகவும் குறைவு, அதற்கு முன் ஒரு கோள் கடந்து செல்லும் போது, கடந்து செல்லும் பொருள் அல்லது கோள் பெரும்பாலான அல்லது முழுமையாகவே எக்ஸ் ரே கதிர்களை தடுக்கலாம். அப்போது டிரான்சிட் அமைப்பால் எளிதில் அடையாளம் காணப்படுகிறது.

M51-ULS-1 என்கிற பைனரி முறையில், கேண்டிடேட் என்கிற புறக்கோளைக் கண்டுபிடிக்க இந்த நுட்பத்தைப் பயன்படுத்தினர்.

"நாங்கள் மேம்படுத்தியுள்ள முறைதான் மற்ற விண்மீன் கூட்டங்களில் (பேரடை) உள்ள கோள்களைக் கண்டுபிடிக்க செயல்படுத்தப்படக் கூடிய ஒரே முறை" என கேம்பிரிட்ஜில் உள்ள ஹார்வர்ட் ஸ்மிட்சோனியன் ஆஸ்ட்ரோஃபிசிக்ஸ் மையத்தின் முனைவர் டி ஸ்டெஃபனோ பிபிசியிடம் கூறினார்.

"இது ஒரு தனித்துவமான முறை, எக்ஸ்-ரே பைனரி நட்சத்திரங்களுக்கு அருகில் உள்ளவைகளை, லைட் கர்வ் எனப்படும் ஒரு பொருளிலிருந்து வெளிப்படும் பொலிவை அளவிடும் தொலைவிலிருந்து கோள்களைக் கண்டுபிடிக்க உதவும் மிகவும் தனித்துவமான முறை"

இந்த பைனரி நட்சத்திரத்தில் கருந்துளை அல்லது நியூட்ரான் நட்சத்திரம் உள்ளது. நியூட்ரான் நட்சத்திரம் என்பது ஒரு காலத்தில் மிகப் பெரிய நட்சத்திரமாக இருந்த ஒன்றின் நிலைகுலைந்த மையப்பகுதி.

இந்த டிரான்சிட் முறை சோதனை கிட்டத்தட்ட மூன்று மணி நேரங்களுக்கு நீடித்தது. சோதனையின் போது எக்ஸ்-ரே கதிர்கள் வெளிப்பாடு பூஜ்ஜியமானது. இதன் அடிப்படையில், வானியல் வல்லுநர்கள் அந்த புதிய கோள் சனி கிரகம் அளவுக்கு இருக்கலாம் என்றும், அக்கோள் ஒரு நியூட்ரான் நட்சத்திரம் அல்லது கருந்துளையை சுற்றி வருவதாகவும் மதிப்பிட்டுள்ளனர். கோளுக்கும் கருந்துளை அல்லது நியூட்ரான் நட்சத்திரத்துக்கு இடையிலான தொலைவு சனி கோள் மற்றும் சூரியனுக்கு இடையில் உள்ள தொலைவைப் போல இரு மடங்கு இருக்கலாம் எனவும் வானியல் வல்லுநர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

பால்வெளிக்குள் இருக்கும் எக்ஸோப்ளேனட் எனப்படும் புறக்கோள்களை வெற்றிகரமாக கண்டுபிடிக்க உதவும் தொழில்நுட்பம்,, மற்ற விண்மீன் கூட்டங்களைக் கண்காணிக்கத் தொடங்கும் போது செயல்பட முடியாமல் திணறுகிறது.

அதீத தொலைவு காரணமாக தொலைநோக்கிக்கு வந்து சேரும் ஒளியின் அளவு குறைகிறது. அதே போல நாம் பூமியில் இருந்து காண்பது போல, ஒரு சிறு இடத்தில் அதிகப்படியான பொருட்கள் இருப்பதும் அந்த தொழில்நுட்பம் வெற்றிகரமாக செயல்பட முடியாததற்கு ஒரு காரணம்.

இதை உறுதி செய்ய மேற்கொண்டு நிறைய தரவுகள் தேவை என ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

கேண்டிடேட் கோளின் சுற்றுவட்டப்பாதை மிகவும் பெரியது என்பதால், பைனரி நட்சத்திரத்துக்கு முன் மீண்டும் வர 70 ஆண்டுகள் ஆகும். எனவே குறுகிய காலத்தில் அது தொடர்பாக எந்த ஆராய்ச்சியும் மேற்கொள்ள முடியாது.

தற்போதைய ஆப்டிகல் அல்லது இன்ஃப்ராரெட் தொலைநோக்கிகள் மிக நெருக்கமாக இருக்கும் பொருட்களைக் காண்பது மற்றும் பொலிவு குறைவு போன்ற பிரச்னைகளை சரி செய்யாது. எனவே எக்ஸ்-ரே கதிர்கள் அலைநீளத்தில் ஆராய்வது தொடர்ந்து பால்வெளிக்கு வெளியே உள்ள கோள்களை ஆராய முதன்மை முறையாக இருக்கலாம் என்கிறார் முனைவர் டி ஸ்டெஃபனோ.

இந்த ஆய்வு 'நேச்சர் ஆஸ்ட்ரானமி' என்கிற ஆய்வு சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.