வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 11 செப்டம்பர் 2024 (14:14 IST)

பாலியல் குற்றச்சாட்டுகள்: சினிமா நடிகைகள் காவல்துறையில் புகார் அளிக்க தயங்குவது ஏன்?

abuse

பாலியல் அத்துமீறலில் ஈடுபடுபவர்களிடம் இருந்து தப்பிக்க சிலர் அவர்களை அறைந்தனர், சிலர் அலறினர், சிலர் உதவி கோரினர்.

 

 

சிலர் அவர்களின் கண்களை நேரடியாக பார்த்தனர். மற்றொருவரோ, கேமரா முன்பு தன் வசனத்தை மறக்கும் அளவுக்கு பயந்துபோனார்.

 

இதன்மூலம், பெண்கள் தங்களுடைய நம்பகத்தன்மை நிலைத்திருக்க, தங்களுக்கென ஒரு 'கோட்டை'யை உருவாக்கினர்.

 

“சமரசம்” மற்றும் “ஒத்துப்போதல்” ஆகிய இரண்டு வார்த்தைகளும் நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கமிட்டி, மலையாளத் திரையுலகில் பெண்களின் பணிச்சூழலை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டது.

 

திரையுலகில் நுழைவதற்கோ அல்லது அதில் முன்னேறுவதற்கோ அல்லது திரைத்துறை தொடர்பான சங்கங்களில் இணைவதற்கோ ‘காஸ்டிங் கவுச்’ (சினிமாவில் வாய்ப்புக்காக பாலியல் ரீதியாக சமரம் செய்தல்) மூலம் மட்டும்தான் முடியும் என்ற கருத்தை சில நடிகைகள் புறக்கணித்துள்ளனர். அவ்வாறான நடிகை ஒருவர் காவல்துறையில் புகாரும் அளித்துள்ளார்.

 

நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையின்படி, திரையுலகில் சில காலம் தடையை எதிர்கொண்ட பெண்களும் இருக்கிறார்கள் என்பதும் உண்மை.

 

மலையாள திரையுலகில் உள்ள ‘அதிகாரமிக்க குழு’ அல்லது ‘மாஃபியா’ மூலம் சிலருக்கு தடை விதிக்கப்பட்டது. சிலர் பிற மொழித் திரையுலகின் பக்கம் திரும்ப வேண்டியதாயிற்று.

 

ஆனால், சில பெண்கள் மீண்டும் திரும்பிவந்து படங்களில் நடித்துள்ளனர். பெண் இயக்குநர்கள் அல்லது பெண் தயாரிப்பாளர்கள் அவர்களுக்கு வாய்ப்பளித்தனர். அல்லது ஆண் ஒருவர் அப்பெண்ணின் திறமையை கண்டுகொண்டபோது அவரால் மீண்டும் நடிக்க முடிந்தது.

 

படப்பிடிப்பிலேயே அத்துமீறல்
 

இதேபோன்ற ஒரு 'பயங்கரமான' அனுபவம் மற்றொரு நடிகைக்கும் ஏற்பட்டது. கடந்த 2009-ம் ஆண்டு கேமரா முன்பு அச்சம்பவம் நடந்தது என்பதுதான் ஆச்சர்யமான விஷயம். அந்த நடிகரின் மூன்றாவது படம் அது.

 

"அந்த ஆண் நடிகர் என்னை கேமரா முன் பிடித்தபோது நான் பயந்தேன். நான் வலியில் முனகிக் கொண்டிருந்தேன். நான் திகைத்து விட்டேன்” என, மாலா பார்வதி பிபிசியிடம் கூறினார்.

 

பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அந்த நடிகரின் மனைவியாக அத்திரைப்படத்தில் மாலா நடித்திருந்தார்.

 

“காட்சியின்படி கண்ணாமூச்சி விளையாடும் தன் மகளை அந்த நடிகர் பிடிக்க வேண்டும். அப்போது, தன்னுடைய இன்னொரு கையால் அவர் என்னைப் பிடித்தார். அப்படி செய்ய வேண்டாம் என இயக்குநர் அந்த நடிகரிடம் கூறினார்” என்கிறார் மாலா.

 

“அதன்பின் என்னால் வேலை செய்ய முடியவில்லை. ஒரு ‘ஷாட்’டுக்கு 10-12 டேக்குகள் எடுக்க வேண்டியிருந்தது. இயக்குநர் என்னை கடிந்துகொண்டார். அடுத்த நாள் படப்பிடிப்பில், நான் அந்த நடிகரை முறைத்துக் கொண்டே இருந்தேன். அவர் வசனம் பேசும்போது பல தவறுகளை செய்தார். அவரும் பல டேக்குகளை எடுக்க வேண்டியிருந்தது” என்கிறார் அவர்.

 

நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையில் பார்வதியின் உதாரணம் முறையாக சேர்க்கப்பட்டுள்ளது.

 

நீதிபதி ஹேமா கேட்டுக் கொண்டதன் பேரில், அந்த அறிக்கையின் பெரும்பகுதி வெளியிடப்படவில்லை. 290 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் சுமார் 44 பக்கங்கள் வெளியிடப்படவில்லை.

 

பார்வதி கூறுகையில், “படப்பிடிப்பில் எனக்கு ஆறுதல் சொன்ன ஒரே நபர் படத்தொகுப்பாளர் தான். கவலைப்பட வேண்டாம் என அவர் கூறினார். அந்த நடிகர் எப்படி இதைச் செய்தார் என தொடர்ந்து கேட்டுக்கொண்டு இருந்தார். அச்சம்பவத்திற்கு பின் எனக்கு புதிய பட வாய்ப்புகள் இல்லாததால் நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். பின் நான் நடிப்பதை நிறுத்திவிட்டேன். நண்பரின் வற்புறுத்தலுக்குப் பின்னர் மீண்டும் நடிக்க தொடங்கினேன்” என்கிறார் மாலா.

 

பெண்கள் தைரியத்தை வெளிப்படுத்திய போது...
 

ஆனால், பார்வதி இதுதொடர்பாக தற்போது காவல்துறையில் புகார் அளிக்க விரும்பவில்லை.

 

“இப்போது அதிலிருந்து வெளியே வந்துவிட்டேன். நான் யாரையும் சங்கடப்படுத்த விரும்பவில்லை. இத்தகைய அத்துமீறல்களை எதிர்கொள்ளும் நபர்களிடம் மற்றவர்கள் கூர் உணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன்” என அவர் கூறினார்.

 

நடிகை ஸ்வேதா மேனன் பிபிசி ஹிந்தியிடம் கூறுகையில், "இது ஒரு அழகான தொழில். தொடக்கத்திலேயே உங்கள் நிலைப்பாட்டை நீங்கள் தெளிவுபடுத்துவதே முக்கிய விஷயம். பின்னர் யாரும் உங்களிடம் தீய எண்ணம் கொள்ள மாட்டார்கள்" என்று கூறினார்.

 

பாலியல் அத்துமீறலுக்கு ஆளான எந்தவொரு நபரும் அதைப் பற்றி பேசுவது 'எளிதல்ல' என்று ஸ்வேதா கூறினார்.

 

"இது மிகவும் வேதனையானது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். காவல்நிலையத்திற்கு சென்று புகார் செய்ய பெண்களுக்கு தைரியமும் பலமும் வேண்டும். இதைச் செய்ய முன்வந்தவர்களுக்குப் பாராட்டுகள். இதைச் செய்ததற்காக, அவர்களுடைய குணம் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கும்” என்றார் ஸ்வேதா.

 

அத்துமீறலை அவர் எப்படி சமாளித்தார்?

 

இந்த கேள்விக்கு பதிலளித்தா அவர், "நான் எந்தவொரு விஷயத்திற்கும் உடனடியாக எதிர்வினையாற்றுவேன். சில நேரங்களில் நான் அவர்களை அறைந்திருக்கிறேன், சில சமயங்களில் காயப்படுத்தியிருக்கிறேன். நான் சலசலப்பை உருவாக்கவில்லை, நான் பலமாக எதிர்வினையாற்றுகிறேன். நிஜ வாழ்க்கையில் நான் மிரட்டல்கள் குறித்து கவலைப்படுவதில்லை. கேமரா முன்பு மூத்த நடிகர்கள் இருந்தால் இதுபோன்று நடக்கலாம்” என்றார்.

 

நடிகைகள் காவல்துறையில் புகார் அளிக்க தயங்குவது ஏன்?
 

காவல்துறை அல்லது ஊடகங்களுக்கு வரும் இத்தகைய புகார்களின் நோக்கம் பழைய கதைகளை வெளியே கொண்டு வந்து 'ஆண்களை குறிவைப்பது' என்ற கருத்து, திரையுலகில் சிலரது மனதில் உள்ளது.

 

நடிகை கீதா விஜயன் பிபிசியிடம், “ஒரு நாள் இரவு ஹோட்டலில், திரைப்பட இயக்குநர் எனது அறையின் கதவைத் தட்டினார். ஆனால் மற்ற கலைஞர்களின் கூற்றுகளை உறுதிப்படுத்தும் வகையில், மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கம் என்னுடைய புகாரை பதிவு செய்யவில்லை” என்றார்.

 

ஆனால், அச்சமயத்தில் தனக்கு உடல் ரீதியான துன்புறுத்தல் ஏதும் நிகழவில்லை என தான் உறுதிப்படுத்தியிருப்பதால், தான் தொழில் வாய்ப்புகளை இழக்கவில்லை என்றார் கீதா விஜயன்.

 

இதுகுறித்து கீதா விஜயன் கூறுகையில், “இந்த விவகாரத்துக்கு சட்ட வடிவம் கொடுக்க விரும்பவில்லை. இது 33 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் எனது வாக்குமூலத்தை அளித்துள்ளேன். அப்படிப்பட்டவர் மீது வேறு எந்த கலைஞரும் புகார் கொடுத்தால் 100 சதவீதம் அவருக்கு ஆதரவளிப்பேன்” என்றார்.

 

திரைப்பட தயாரிப்பாளர் ஆஷா ஏ. ஜோசப், திரைப்படத் துறையில் தனது சக ஊழியர்களின் கருத்துகளை ஆதரிப்பதோடு, 'பாலியல் சுரண்டலை எதிர்ப்பதும் தனிநபரைப் பொறுத்தது' என்றும் கூறுகிறார்.

 

"காஸ்டிங் கவுச்சைத் தவிர்க்க முடியவில்லை என்று, சில சலுகை பெற்ற பெண்களிடமிருந்து நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை சில தீவிரமான புகார்கள் இருப்பதை உறுதிப்படுத்துகிறது. ஆனால் அவை நிவர்த்தி செய்யப்படவில்லை” என்கிறார் அவர்.

 

திரைப்பட விமர்சகர் சௌமியா ராஜேந்திரன் இத்துறையைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார். காவல்துறையில் புகார் அளிக்க வேண்டாம் என்று பெண்கள் நினைப்பதை அவர் வேறு கண்ணோட்டத்தில் பார்க்கிறார்.

 

நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையின் நோக்கம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுபவர்களின் பட்டியலை வெளியிட்டு, அவர்களை சிறைக்கு அனுப்புவது அல்ல என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

 

“இந்த அறிக்கையின் நோக்கம் திரைத்துறையில் பெண்களுக்கான பணிச்சூழலை முன்னிலைப்படுத்துவது, பாலியல் அத்துமீறல்கள் வெறும் கதைகள் அல்லது செவிவழிச் செய்திகள் அல்ல என்பதை நிரூபிப்பதாகும்” என்கிறார் அவர்.

 

"பாலியல் வன்முறை மற்றும் பாலியல் சுரண்டல் திரைத்துறையில் பரவலாக இருப்பதை நாங்கள் இப்போது அறிவோம். இதன்மூலம், பெண்கள் தங்கள் அனுபவங்களைப் பற்றி பேசும்போது, முன்பு போன்று அல்லாமல் அவர்கள் நம்பப்படுவார்கள், அவர்களின் கருத்துகள் நிராகரிக்கப்பட மாட்டாது” என்கிறார் அவர்.

 

மலையாள திரையுலகினர் கவலை
 

நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர், நடிகைகளின் பகிரங்க அறிக்கைகள், 58 ஆண்டுகளாக திரைத்துறையில் பாடலாசிரியர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளராக பணியாற்றிய ஸ்ரீகுமரன் தம்பி போன்றவர்களைக் கூட கவலையடையச் செய்துள்ளது.

 

"60கள் மற்றும் 80களில் மிகக் குறைவான பிரச்னைகளே இருந்தன. அக்காலத்தில் பாலியல் சுரண்டல் பிரச்னை இல்லை என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். தமிழ், தெலுங்கு திரையுலகில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. பல பெண் கலைஞர்கள் இந்த விஷயங்களை முன்னெடுத்துச் செல்ல விரும்பவில்லை. அப்படி பிரச்னைகள் இருந்தால் கூட, திரையுலகில் அவை அவர்களுக்குள்ளாகவே தீர்த்துக்கொள்ளப்பட்டது” என்றார் அவர்.

 

ஊதியத்தில் பெண்களுக்கு பாகுபாடு காட்டப்படுவது குறித்து பேசிய அவர், நடிகர், நடிகைகளின் சம்பள வித்தியாசம் அச்சுறுத்தும் வகையில் இருக்கிறது என்றார்.

 

“கதாநாயகனின் சம்பளம் 5 கோடி முதல் 10 கோடி வரை என்றால், படத்தின் முன்னணி நாயகி சில லட்சங்களில் திருப்தி அடைய வேண்டியுள்ளது. 33 வருடங்களுக்கு முன் என்னுடைய முதல் படத்தை எடுத்த போது கதாநாயகனுக்கு கொடுத்த சம்பளத்தில் 75 சதவீதம் கதாநாயகிக்கு கொடுக்கப்பட்டது” என்றார்.

 

“70, 80களில் பிரேம் நசீர், சத்யம், மது போன்ற கதாநாயகர்கள் இருந்த போது, ​​சூழல் மிகவும் நன்றாக இருந்தது. அவர்கள் மொத்த தயாரிப்பு செலவில் 10 சதவிகிதத்தை சம்பளமாக பெற்றனர். ஆனால் இன்று ‘சூப்பர் ஹீரோ’க்கள் தயாரிப்பு செலவில் மூன்றில் ஒரு பங்கை தங்கள் கட்டணமாக வசூலிக்கின்றனர்” என்றார்.

 

புதிய தலைமுறை கலைஞர்களிடம் நம்பிக்கை கொண்டிருக்கும் அவர், “எல்லாம் மாறும் என்று நான் நம்புகிறேன். பெண்கள் மீதான பாரபட்சமான அணுகுமுறை குறைந்து, சினிமாவில் பெண்கள் வெற்றியாளர்களாக வருவார்கள்” என்றார்.

 

ஒரு தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் இருந்த தம்பி, 1976-ல் பெண்கள் பிரச்னைகளை மையமாக வைத்து மோகினியாட்டம் என்ற படத்தை எடுத்தார்.

 

சௌமியா ராஜேந்திரன் கூறுகையில், “நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை மற்றும் புகார் அளிக்க முன்வந்த பெண்களின் வார்த்தைகளை புறக்கணிப்பது கடினம். ஆனால், நிலைமையை மாற்ற, திரைத்துறை தொடர்பான அமைப்புகளும், அரசாங்கமும் சில உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பாலியல் குற்றங்களில் முழு சகிப்பின்மையை கடைபிடிக்க வேண்டும். பெண்கள் கழிவறை வசதி, ஊதிய வேறுபாடு போன்ற திரையுலகில் உள்ள பிரச்னைகளை எழுப்பி வருகின்றனர். அவை குறித்து விவாதம் நடத்த வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, பாலியல் வன்கொடுமை பிரச்னை பொது களத்திற்கு வந்தவுடன் அதற்கான முக்கியத்துவத்தை இழந்துவிடுகிறது. இதிலிருந்து முன்னேற வேண்டிய தேவை உள்ளது” என கூறினார்.

 

- இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு