செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Murugan
Last Modified: புதன், 14 ஜூன் 2017 (19:15 IST)

தி மம்மி - விமர்சனம்

1999ல் ப்ரென்டன் ஃப்ரேஸர் நடித்து, ஸ்டீஃபன் சமர்ஸ் இயக்கி வெளிவந்த தி மம்மி திரைப்படம், ஒரு அட்டகாசமான சாகசம். எதிர்பாராதவிதமாக, ஒரு மிகப்பெரிய வெற்றிப்படமும்கூட.


 

 
கி.மு. 13ஆம் நூற்றாண்டில் எகிப்தில், ஒரு மந்திரவாதிக்கும் அரசனின் பிரிய நாயகிக்கும் ஏற்படும் உறவை அரசன் கண்டுபிடித்த பிறகு, அரசன் கொல்லப்படுகிறான். மந்திரவாதி எங்கோ சென்றுவிட, நாயகி ஆங்-சு-நாமுன் தற்கொலைசெய்துகொள்கிறாள். 20ஆம் நூற்றாண்டில், இவர்களது மம்மிகள் தவறுதலாக உயிர்ப்பிக்கப்பட ஏற்படும் விபரீதங்களே அந்தப் படத்தின் கதை.
 
இந்தப் படத்தின் தொடர்ச்சியாக பல படங்கள் வெளியான நிலையில் மீண்டும் முதலிருந்து துவங்க முடிவுசெய்து, இந்தப் படம் உருவாகியிருக்கிறது.
 
எகிப்திய இளவரசியான அமனெட் (சோபியா புதெல்லா), பட்டத்து அரசியாகவிருக்கும் தனக்குப் போட்டியாகப் பிறக்கும் குழந்தையையும் தந்தையையும் கொலைசெய்கிறாள். இதற்காக தனது ஆன்மாவை மரண தேவனுக்கு கொடுக்கிறாள். தனது காதலனை பலிகொடுத்து அந்தச் சடங்கை நிறைவேற்ற நினைக்கும்போது, அரசனின் வீரர்கள் அவளைப் பிடித்து உயிரோடு புதைத்துவிடுகிறார்கள்.
 
21ஆம் நூற்றாண்டில் எதிர்பாராதவிதமாக மெசபடோமியாவில் அமனெட்டின் மம்மியை ராணுவ வீரர்களான நிக் மார்ட்டினும் (டாம் க்ரூஸ்) அவரது அணியினரும் கண்டுபிடிக்கிறார்கள். அதனை லண்டனுக்குக் கொண்டுவரும் வழியில் விமானம் விபத்துக்குள்ளாகி அதிலிருந்த அனைவரும் கொல்லப்பட்டுவிடுகின்றனர், மார்ட்டினைத் தவிர. இதற்கிடையில், லண்டனில் ட்யூப் ரயிலுக்காக சுரங்கம் தோண்டும்போது ஒரு மிகப் பெரிய கல்லறை கண்டுபிடிக்கப்படுகிறது. மார்ட்டின் ஏன் தப்ப வைக்கப்பட்டான், அமெனெட்டின் மம்மி என்ன ஆனது, லண்டன் கல்லறயில் என்ன இருந்தது என்பது மீதிக் கதை.


 

 
மம்மி போன்ற தொடர் திரைப்படங்களில், முந்தைய படங்களோடான ஒப்பீடு தவிர்க்க முடியாதது. அப்படி ஒப்பிட்டால் ஏமாற்றத்தையே தரக்கூடிய படம் இது.
 
முதல் பாதியில், எகிப்திய பின்னணிக் கதை, மம்மி கண்டுபிடிக்கப்படுவது, விமானம் விபத்துக்குள்ளாவது என விறுவிறுப்பாக நகரும் கதை, இடைவேளைக்குப் பிறகு தேங்கிவிடுகிறது. இளவரசி அமனெட் ஒரு சிறிய ஆய்வுக் கூடத்தில் சிறைப்படுவதைப் போல, படமும் சிறைப்பட்டுவிடுகிறது. அதற்குப் பிறகு, இறுதிவரை படம் எப்போது முடியும் என்ற எதிர்பார்ப்பே எஞ்சியிருக்கிறது.
 
படத்தில் ஒரு ஆராய்ச்சியாளராக வரும் ரஸல் க்ரோ மட்டுமே சுவாரஸ்யமூட்டுகிறார். நல்லவனாகவும் திடீரென கெட்டவனாகவும் மாறக்கூடிய அவருக்கு, ஜெக்கில் என்றும் ஹைட் என்றும் பெயர் வைத்திருப்பது ரசிக்க வைக்கிறது. ஆனால், மற்ற பாத்திரங்கள் எதுவும் நெருக்கத்தையோ, ஆச்சரியத்தையோ ஏற்படுத்தவில்லை.
 
இந்தப் படத்திற்கும் இரண்டாம் பாகம் இருப்பதுபோல படத்தை முடிக்கிறார்கள். ஆனால், ரசிகர்கள் சற்று ஜாக்கிரதையாகவே இருப்பார்கள்.