புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 1 நவம்பர் 2020 (15:07 IST)

சத்திஸ்கரில் ஒன்றரை வயது குழந்தை மீது சிகரெட்டால் சூடு வைத்த போலீஸ் அதிகாரி - என்ன நடந்தது?

சத்திஸ்கரின் பாலோத் மாவட்டத்தில் ஒன்றரை வயது பெண் குழந்தையின் முகம் மற்றும் உடலில் சிகரெட் துண்டை வைத்து போலீஸ் அதிகாரி ஒருவர் காயப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"குற்றஞ்சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதே சமயத்தில் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்," என பிபிசியிடம் பேசிய பாலோத் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜிதேந்திர மீனா தெரிவித்தார்.

என்ன குற்றச்சாட்டு?

குற்றஞ்சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரி அவினாஷ் ராய், சமீபத்தில் பாலோத் மாவட்டத்தில் இருந்து துர்க் மாவட்டத்திற்கு பணிமாற்றம் செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவிக்கிறது.
அதனையடுத்து அவர் அங்கு சென்று பணியில் சேர்ந்திருக்கிறார். பாலோத்தில் தான் எடுத்திருந்த வாடகை வீட்டிற்கு சாமான்களை காலி செய்ய வந்த இரவில், அங்கிருந்த வீட்டு உரிமையாளரின் ஒன்றரை வயது மகளிடம் தன்னை அப்பா என்று அழைக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

அந்தக்குழந்தை அப்பா என்று அழைக்காததால், அவினாஷ் அவரை சிகரெட்டை வைத்து காயங்களை ஏற்படுத்தியதாக காவல்துறை தெரிவித்தது.

குழந்தைக்கு சரியான நேரத்தில் கொடுக்கப்படாத சிகிச்சை

வியாழக்கிழமை அன்று காவல்துறை வழக்குப்பதிவு செய்தும், சனிக்கிழமை வரை அக்குழந்தைக்கு சிகிச்சை கிடைக்கப்பெறவில்லை.

இந்த விஷயம் ஊடக வெளிச்சத்திற்கு வந்ததும், சனிக்கிழமை அன்று அக்குழந்தை பாலோத் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். பின்னர் ராய்பூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட, அங்கும் சனிக்கிழமை மாலை வரை அவருக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை.

பிபிசிக்கு கிடைத்த ஆவணங்களின் படி, அக்குழந்தைக்கு அடுத்த நாள் துர்க் மாவட்டத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
ஒன்றரை வயது பெண் குழந்தையின் உடலில் ஏற்கனவே சில தீக்காயங்கள் இருந்ததும் அதில் தெரிய வந்தது. சமைக்கும்போதும் அவர் மீது சுடு தண்ணீர் கொட்டியதாலும் ஏற்பட்ட காயம் அது என்று கூறப்பட்டது.

மேலும், அந்த மருத்துவமனை ஆவணத்தில், பாதிக்கப்பட்ட குழந்தை அனுமதிக்கப்பட்ட பதிவேட்டில், குற்றஞ்சாட்டப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரியின் பெயரும், முகவரியும் இருந்தது.

அதிகாரி அவினாஷ் ராய்தான், அந்தக்குழந்தையையும், அவரது தாயையும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கூட்டிச் சென்றதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

குழந்தையின் தாய் சொல்வது என்ன?

நாட்டுப்புற பாடகரான பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய், கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு அமைப்புகளுக்காக பணியாற்றி வந்தார்.

அந்தக் குழந்தையின் தந்தை நாக்பூரில் இருக்க, தாயும் குழந்தையும் மட்டும் பாலோத்தில் வசித்து வந்தனர்.

"இந்தாண்டு ஜூன் 19ஆம் தேதி, என் 14 வயது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்போது என் மற்றொரு மகளுக்கு இப்படி நேர்ந்துள்ளது," என குழந்தையின் தாய் தெரிவித்தார்.

மேலும், குற்றஞ்சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரியுடன் சென்று குழந்தையை மருத்துவமனையில் சேர்த்ததையும் அவர் ஒப்புக்கொண்டார்.

தீக்காயங்கள் குறித்து பேசிய அவர், முதலில் சாதம் வைக்கும்போது கஞ்சித்தண்ணீர் கொட்டியதில் குழந்தைக்கு காயம் ஏற்பட்டதாக கூறிய அவர், பின்னர் குடித்துவிட்டு அவினாஷ் ராய் சிகரெட் துண்டுகளால் குழந்தையின் மீது சூடு வைத்தார் என்பதை ஒப்புக்கொண்டார்.