வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 9 பிப்ரவரி 2023 (08:59 IST)

திருநங்கைகள் 4 பேருக்கு போலீஸ் வேலை: 'நீதிமன்றம் உத்தரவிட்டது; தமிழ்நாடு அரசு தாமதிக்கிறது'

தமிழ்நாட்டில் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நான்கு திருநங்கைகளை, இரண்டாம் நிலை காவலர் பணிக்கான உடல்தகுதி தேர்வுக்கு அழைத்து அவர்களை சோதனைக்கு உட்படுத்தவேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியபோதும், தேர்வுக்கு அழைக்காமல் மீண்டும் வழக்கில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்து காலம் தாழ்த்தி வருவதாக, திருநங்கை சமூகத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால், சட்டச் சிக்கல்களை தவிர்ப்பதற்காகத்தான் மேல்முறையீடு செய்துள்ளதாக அரசு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
 
2019 மற்றும் 2020ம் ஆண்டுகளில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வுகளை எழுதிய நான்கு திருநங்கைகள், தேர்ச்சி பெறாதபோதும், சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் கணக்கில் கொண்டு, அவர்கள் தேர்வானதாகக் கருதி, உடல்தகுதி தேர்வுக்கு அழைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 2022இல் உத்தரவிட்டிருந்தது.
 
ஆனால், இந்த நான்கு திருநங்கை தேர்வாளர்களை உடல்தகுதி தேர்வுக்கு உட்படுத்தாமல், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மேல்முறையீடு செய்துள்ளதாக திருநங்கைகள் குற்றம்சாட்டுகின்றனர்.
 
"கனவாகவே உள்ளது"
 
பிபிசி தமிழிடம் பேசிய திருநங்கை தேன்மொழி மற்றும் கவி, சென்னை உயர் நீதிமன்றம் முதலில் அளித்த தீர்ப்பின்படி தங்களை உடல்தகுதி தேர்வுக்கு அழைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறுகின்றனர்.
 
32 வயதான தேன்மொழி கோவில்பட்டியைச் சேர்ந்தவர். 10ஆம் வகுப்பு வரை படித்துள்ளதாகவும், பின்னர் தனது பாலின அடையாளத்தின் காரணமாக எழுந்த பிரச்னையால் படிப்பைத் தொடரமுடியவில்லை என்றும் கூறுகிறார்.
 
''திருநங்கை என்று வீட்டில் தெரிந்ததும், என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. நான் வீட்டிலிருந்து வெளியேறி, திருநங்கை சமூகத்தினருடன் அறிமுகமாகி, என் வாழ்க்கை பாதையை மாற்றிக்கொள்ளப் பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த சமூகத்தில் என் படிப்புக்கான வேலை, அதுவும் ஒரு கௌரவமான வேலையில் இருக்க வேண்டும், நான் சார்ந்த திருநங்கை சமூகத்திற்கு உதவ வேண்டும் என்பதற்காக பல முயற்சிகள் செய்து மீண்டும் படிப்பைத் தேர்வு செய்தேன், காவலர் தேர்வை எழுதினேன்.
 
ஆனால், முதல்முறை தேர்வு எழுதும் வாய்ப்புதான் எனக்கு கடைசி வாய்ப்பாக அமைந்தது. வயது வரம்பு 29ஆக இருந்ததால், நான் அடுத்தமுறை தேர்வு எழுதமுடியவில்லை. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவால் தேர்வின் அடுத்தகட்டத்திற்குப் போவேன் என்று எதிர்பார்ப்போடு காத்திருந்தேன். தற்போதுவரை அது கனவாக உள்ளது,'' என்கிறார்.
 
"தேர்வுக்குத் தயாராவது சுலபமல்ல"
மற்றொரு திருநங்கையான கவி (31) திருப்பூரை சேர்ந்தவர். 12ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். அவர் திருநங்கை என்று தெரியவந்தபோது, குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கவில்லை என்பதால், வீட்டிலிருந்து வெளியேறியதாகவும், தனது சான்றிதழ்களை அவர்களிடம் இருந்து பெறுவதற்குப் பல தடைகள் இருந்ததாகவும் சொல்கிறார்.
 
''மற்ற ஆண்கள், பெண்கள் போல நாங்கள் ஒரு அரசு தேர்வுக்குத் தயாராகுவது அவ்வளவு சுலபம் இல்லை. நாங்கள் பிச்சை எடுப்பது, பாலியல் தொழில் செய்வது உள்ளிட்டவற்றிலிருந்து மீண்டு வருவதற்காகப் படிப்பைத் தேர்வு செய்கிறோம். மற்றவர்களுக்கும் எங்களுக்கும் ஒரே மாதிரியான மதிப்பெண் மற்றும் உடல்தகுதிகளை வைத்து பார்ப்பது சரியல்ல.
 
எங்களுக்கான வேலைவாய்ப்புகளில் சில சலுகைகளைத் தருவது எங்களுக்கு ஒரு புதிய வாழ்வைத் தரும். அதுவும் நீதிமன்றம் முன்வந்து எங்களுக்கு வாய்ப்பளித்துள்ளபோது, எங்களுக்கு உடல்தகுதி தேர்வை நடத்த ஏன் தாமதிக்கிறார்கள்?'' என கேள்வி எழுப்புகிறார்.
 
"சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்கள் நாங்கள்"
 
தேன்மொழி, கவின் உள்பட நான்கு திருநங்கைகளுக்கு தமிழ்நாடு காவல்துறையில் வேலைவாய்ப்பு தரப்பட வேண்டும் என சட்டப்போராட்டத்தை முன்னெடுத்து நடத்தி வருகிறார் திருநங்கை செயற்பாட்டாளர் கிரேஸ் பானு.
 
'திருநங்கை சமூகத்தில் உள்ளவர்களைப் பெண் தேர்வாளராக எழுத்து மற்றும் உடல்தகுதி தேர்வில் கருதினாலும், வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு அளிக்கும்போது அவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களாகத்தான் கருதப்படுகிறார்கள். பட்டியல் இனத்தவர், கணவரை இழந்த பெண்கள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண் என்ற ஒதுக்கீடு முறையில் அளிக்கப்படும் சலுகை திருநங்கை சமூகத்திற்கு அளிக்கப்பட்டால் பலருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும்,'' என்கிறார் கிரேஸ் பானு.
 
எடுத்துக்காட்டாக, யாழினி என்ற திருநங்கை தேர்வாளர் 2021ல் காவல்துறையின் எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றபோதும் உடல்தகுதி தேர்வில் 0.5சென்டிமீட்டர் உயரம் குறைவாக இருந்ததால் வேலைவாய்ப்பு அவருக்கு மறுக்கப்பட்டதாகக் கூறுகிறார்.
 
''இட ஒதுக்கீடு அடிப்படையில் திருநங்கை சமூகத்தினருக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவில் எங்களைச் சேர்க்கின்றனர். ஆனால் பட்டியல் இன மக்களுக்கான இட ஒதுக்கீடுதான் எங்களுக்குத் தரப்படவேண்டும். எந்த சாதியில் பிறந்திருந்தாலும், நாங்கள் மொத்தமாக இந்த சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்கள் என்பதால் எங்களை பட்டியலினத்தவரின் இட ஒதுக்கீடு தட்டில் தான் வைத்துப் பார்க்க வேண்டும். அதுபோன்ற இட ஒதுக்கீடு இருந்திருந்தால், யாழினி தேர்வாகியிருப்பார்,'' என்கிறார் கிரேஸ் பானு.
 
"மேல்முறையீடு செய்வது தவறல்ல"
 
திருநங்கை தேர்வாளர்களின் குற்றச்சாட்டுகளுக்கான பதிலைப் பெறுவதற்காக தமிழ்நாடு அரசின் சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் டிஜிபி சீமா அகர்வாலிடம் பேசினோம்.
 
''காவல்துறையில் தற்போது பல திருநங்கைகள் பணியில் உள்ளனர். எழுத்துத்தேர்வு, உடல் தகுதித்தேர்வு என இரண்டு தேர்வுகளில் வெற்றி பெற்ற திருநங்கைகள் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்துவரும் வழக்கில், நான்கு திருநங்கைகளுக்கு உடல்தகுதித் தேர்வை நடத்துமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனால், இந்த வழக்கை வைத்துக்கொண்டு, எதிர்காலத்தில் வேலைவாய்ப்பில், எழுத்துத் தேர்வை மற்றவர்கள் புறக்கணிக்க வாய்ப்பிருக்கலாம். காலம் தாழ்த்துவதற்காக இந்த வழக்கில் நாங்கள் மேல்முறையீடு செய்யவில்லை. மேல்முறையீடு செய்வது என்பது தவறல்ல.'' என்கிறார் சீமா அகர்வால்.