திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : வியாழன், 26 ஏப்ரல் 2018 (12:16 IST)

வட கொரியா அணு ஆயுத சோதனை தளம் சேதம்: கதிரியக்க பொருட்கள் வெளியேறும் ஆபத்து?

வட கொரியாவின் அணு ஆயுத சோதனை தலம் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும், பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும் சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 
பூங்கே ரியில் உள்ள அந்த சோதனைத் தளத்தில் 2006 ஆம் ஆண்டிலிருந்து ஆறு ஆணு ஆயுத சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. 
 
அந்த தலத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட சோதனைக்கு பிறகு அடுத்தடுத்து ஏற்பட்ட நில அதிர்வுகளால் மலையின் உள்பகுதி சேதமடைந்தது என புவி ஆய்வு வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
 
சனிக்கிழமையன்று அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை நிறுத்தி வைப்பதாக வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்திருந்தார்.
 
இந்த ஆச்சரியம் அளிக்கும் அறிவிப்பு தென் கொரியா மற்றும் அமெரிக்காவுடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தைக்கு பின் வந்தது.
 
வட கொரியாவின் வட கிழக்கு பகுதியில் உள்ள மலை பகுதியில் இந்த பூங்கே ரி தலம் அமைந்துள்ளது. மாண்டாப் மலைப்பகுதி என்று அழைக்கப்படும் மலைக்கு அடியில் இருக்கும் டனல் அமைப்புகளில் அணு ஆயுத சோதனை நடைபெறும்.
 
சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடத்திய ஆய்வு அறிக்கை ஒன்றில், செப்டம்பர் மாதம் நடைபெற்ற அணு ஆயுத சோதனைக்கு பிறகு அந்த மலைப்பகுதியில் சோதனை நடைபெறும் இடத்தில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேற்கொண்டு எந்தவித அணு சோதனைகளுக்கும் மாண்டாப் மலைப்பகுதியை பயன்படுத்தக்கூடாது என்றும் அந்த ஆய்வு சுருக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆனால் இறுதி அறிக்கையில், கதிரியக்க பொருட்களின் கசிவை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 
செப்டம்பர் மாதம் பெரிய அளவில் அணு சோதனைகள் நடத்தப்பட்ட பிறகு மாண்டாப் மலைப்பகுதியின் டனல் சேதமடைந்திருக்கும் என சீன விஞ்ஞானிகள் ஏற்கனவே கவலை தெரிவித்திருந்தனர்.