திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 3 நவம்பர் 2022 (13:19 IST)

வடகொரியா ஏவுகணை வீச்சு: தென்கொரியா, ஜப்பானை நோக்கி 'கண்டம் விட்டு கண்டம்' பாயும் ஏவுகணை வீச்சு

வட கொரியா ஒரு நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளதாக தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர்கள் தெரிவித்தனர்.

அதில் ஒன்று கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையாக இருக்கலாம் என்று ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா கூறுகிறார்.

தென் கொரியாவின் பிராந்திய கடல் பகுதிக்கு அருகில் விழுந்த ஒரு ஏவுகணை உட்பட வட கொரியா புதன்கிழமை ஒரே நாளில் அதிகமாக ஏவுகணைகளை ஏவிய நிலையில் இது நடந்துள்ளது.

அதற்கு பதிலடியாக தென் கொரியா மூன்று ஏவுகணைகளை வீசியது.

"ஆக்கிரமிப்பு மற்றும் ஆத்திரமூட்டும்" நடவடிக்கை என்று வட கொரியாவை கடுமையாக விமர்சித்துள்ள, அமெரிக்காவும் தென் கொரியாவும் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய கூட்டு விமானப்படை பயிற்சிகளை நடத்தி வருவதைத் தொடர்ந்து, வட கொரியாவின் பல ஏவுகணை ஏவும் செயல்கள் நடந்துள்ளன.

வியாழனன்று காலை நேரத்தில் சமீபத்தில் ஏவப்பட்ட ஏவுகணை, ஜப்பான் அரசு அதன் வடக்குப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு, வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு ஓர் அரிய அவசர எச்சரிக்கையை வழங்க வழி வகுத்தது.

ஜப்பான் மீது ஏவுகணை பறந்ததாக டோக்கியோ கூறியது. ஆனால், பாதுகாப்பு அமைச்சர் யசுகாசு ஹமாடா, அது "ஜப்பானிய தீவுக்கூட்டத்தைக் கடக்கவில்லை. ஆனால், ஜப்பான் கடல் பகுதியில் விழுந்தது," என்றார்.

பின்னர், பிரதமர் கிஷிடா வட கொரியாவின் "தொடர் ஏவுகணை ஏவுதல்களை", "அட்டூழியம்" என்று குறிப்பிட்டு கண்டனம் செய்தார்.

இதற்கிடையில், தென் கொரியாவின் துணை வெளியுறவு அமைச்சர் சோ ஹ்யூன்-டாங், அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் வெண்டி ஷெர்மன் ஆகியோருக்கு இடையே வியாழக்கிழமையன்று நிகழ்ந்த தொலைபேசி அழைப்பின்போது இந்த ஏவுதல்கள் "வருந்தத்தக்கது, முறையற்றது" என்று தென் கொரியா தெரிவித்துள்ளது.

வட கொரியா கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக, ஜப்பானை நோக்கி ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய ஒரு மாதத்திற்குப் பிறகு இது நடந்துள்ளது.

பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்த ஆண்டு வட பகுதி ஏவுகணை வீச்சுகளும் முன்னெப்போதும் இல்லாத அதிகரித்திருக்கிறது.

பொருளாதாரத் தடைகள் இருந்தபோதிலும், வட கொரியா 2006 மற்றும் 2017ஆம் ஆண்டுக்கு இடையில் ஆறு அணு ஆயுத சோதனைகளை நடத்தியது. மேலும் ஏழாவதாக ஒரு சோதனையைத் திட்டமிடுவதாகவும் நம்பப்படுகிறது.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு மன்றத்தின் தீர்மானங்களை மீறும் வகையில், அண்டை நாடுகளை அச்சுறுத்துவதோடு அமெரிக்க நிலப்பரப்பை தாக்குதல் பரப்புக்குள் கொண்டு வரக்கூடிய வகையில் அதன் ராணுவ திறனை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.

புதன்கிழமை ஏவப்பட்டத்தில் வட கொரியாவின் பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்று இரண்டு கொரியாக்களுக்கும் இடையில் சர்ச்சைக்குரிய கடல் எல்லையான வடக்கு எல்லைக் கோட்டைத் தாண்டியது.

இந்த ஏவுகணை தென் கொரியாவின் கடல் எல்லைக்கு வெளியே விழுந்தது. இதுவே எல்லைக்கு மிகவும் அருகில் நெருங்கிய வட கொரிய ஏவுகணை.

தென் கொரியாவின் போர் விமானங்கள் மூன்று வான்-தரை ஏவுகணைகளை ஏவியதுடன் அதுவும் சர்ச்சைக்குரிய கடல் எல்லைக் கோட்டை தாண்டியது.

ரூபெர்ட் விங்ஃபீல்ட்-ஹேயெஸ்
டோக்கியோ செய்தியாளர்

வடக்கு ஜப்பானில் வசிக்கும் மக்களுக்கு இதுவொரு குழப்பமான அச்சுறுத்தலான காலை.

காலை 7:50 மணிக்கு, மியாகி மற்றும் யமகட்டா மாகாணங்கள் முழுவதும் வான்வழித் தாக்குதலுக்கான சைரன்கள் ஒலிக்கப்பட்டன. மக்களை தஞ்சம் அடையச் சொல்ல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டன. வட கொரியாவில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை ஜப்பானை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக ஜப்பானிய கடலோர காவல்படை தெரிவித்தது. பின்னர் அவர்கள் அந்த அறிக்கையைத் திரும்பப் பெற்றனர். அதற்கு பதிலாக ஜப்பானிய நிலப்பரப்பைக் கடக்காமல் ஏவுகணை கடலில் விழுந்தது.

ஏவுகணையின் பாதை மற்றும் காலம் (சுமார் 30 நிமிடங்கள்) ஆகியவற்றைக் கொண்டு அதிகாரிகள் ஏவுகணையைக் கண்காணிக்கும்போது, அது ஜப்பான் மீது செல்லும் என்று நினைத்ததாகத் தெரிகிறது. அதற்குப் பதிலாக, அது வானில் உயரமாகப் பறந்து பிறகு செங்குத்தாக மீண்டும் திரும்பி ஜப்பான் கடலுக்குள் சென்றதாகத் தெரிகிறது.
North Korea

எனவே தவறான எச்சரிக்கை, அனைவரும் அமைதியடைந்து, காலை காப்பிக்குத் திரும்பலாமா என்றால் இல்லை. முதலாவதாக அண்டை நாடுகளை நோக்கி எச்சரிப்பின்றி பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவுவது, அந்த ஏவுகணை எங்கே விழும் என்பதை யூகிக்க விட்டுவிடுவது சாதாரணமானதல்ல. இது மிகவும் ஆத்திரமூட்டும், ஆபத்தான நடவடிக்கை. இது சர்வதேச விதிமுறைகளுக்கு முற்றிலும் புறம்பானது.

இரண்டாவதாக, வட கொரியாவில் இருந்து தென் கொரியாவின் கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல்களில் ஏவுகணைகள் ஏவப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு இது நடந்துள்ளது.

வட கொரியா தனது அண்டை நாடுகளுடன் வேண்டுமென்றே பதற்றத்தை அதிகரித்து வருகிறது. இது அணுஆயுத சோதனை, அல்லது பசிபிக் பகுதியில் ஒரு முழு நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை அல்லது இரண்டும் போன்ற பெரிய அது உருவாக்குவதாக இருக்கலாம்.

சர்வதேச கவனத்தை ஈர்ப்பதற்கும் தென் கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவை சலுகைகள் மற்றும் உரையாடல்களை வழங்க கட்டாயப்படுத்துவதற்கும் கடந்த காலங்களில் வட கொரியா பயன்படுத்திய முறை இது. தற்போது மீண்டும் அவ்வாறு நடந்து வருகிறது.

ஆனால் வட கொரியா அதன் ஏவுகணை தொழில்நுட்பத்தை - குறிப்பாக அதன் நீண்ட தூர ஏவுகணைகள், மறு நுழைவு வாகனங்களை - முழுமையாக்குவதில் இன்னும் வெகு தூரத்தில் உள்ளது. எனவே, இதுபோன்ற சோதனைகள் ஜப்பானை மட்டுமல்ல, அமெரிக்காவையும் நோக்கியே மேற்கொள்ளப்படுகின்றன. அமெரிக்காவை அடையக்கூடிய நம்பகமான நீண்ட தூர ஆயுதங்களை வைத்திருப்பதே வட கொரியாவின் நோக்கம்.

வட கொரியாவின் நோக்கம் ஜப்பானை அடிபணிய வைப்பது என்றால், அது எதிர் விளைவையே ஏற்படுத்துகிறது. ஜப்பானின் வலதுசாரி நீண்டகாலமாக நாட்டை மீண்டும் ஆயுதம் ஏந்தவும் போருக்குப் பிந்தைய அமைதிவாத அரசியலமைப்பைக் கைவிடவும் விரும்புகிறது.