திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 6 மார்ச் 2020 (15:18 IST)

கொரோனா வைரஸ்: மலேசியாவில் ஒரே வாரத்தில் இரட்டிப்பான பாதிப்பு

மலேசியாவில் ஒரே வாரத்திற்குள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. 
 
இதையடுத்து மலேசிய சுகாதார அமைச்சு கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தி உள்ளது. மலேசியாவில் கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, 55ஆக உள்ளது. கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி வரை மலேசியாவில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 25க்கும் குறைவாகவே இருந்தது. 
 
இதையடுத்து பிப்ரவரி 26ஆம் தேதி வரை, 11 நாட்களுக்கு புதிதாக யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை. இதனால் மலேசிய அரசும் மக்களும் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், திடீரென கடந்த சில தினங்களாக அங்கு கிருமித் தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கை மளமளவென அதிகரித்துள்ளது.
 
கடந்த செவ்வாய்க்கிழமை ஏழு பேருக்கும், புதன்கிழமை 14 பேருக்கும், வியாழக்கிழமை 5 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பதை மலேசிய சுகாதார அமைச்சு உறுதி செய்துள்ளது.