வியாழன், 31 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 31 அக்டோபர் 2024 (18:13 IST)

லக்கி பாஸ்கர் விமர்சனம்: மிடில் கிளாஸ் குடும்பஸ்தராக ரசிகர்களை ஈர்த்த துல்கர் சல்மான்

Lucky Bhaskar

மலையாள நடிகராக இருந்தபோதிலும், நடிகர் துல்கர் சல்மான், மகாநதி, சீதாராமன் போன்ற தெலுங்கு படங்களின் மூலம் டோலிவுட் ரசிகர்களையும் கவர்ந்தார்.

 

 

தமிழில் ஓ காதல் கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தவர் துல்கர்.

 

இந்த தீபாவளிக்கு தெலுங்கில் அவர் நடித்துள்ள ‘லக்கி பாஸ்கர்’ என்ற படம் தமிழ் ரசிகர்களுக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இயக்குநர் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் தீபாவளி ரேஸின் முக்கிய ஈர்ப்பாக இந்தப் படம் அமைந்துள்ளது.

 

படத்தின் ஒன்-லைன்
 

பாஸ்கர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர். குடும்பத்தை மகிழ்ச்சியாக வைத்திருக்க, அவர் என்ன தந்திரங்களைச் செய்தார்? அதில் அவர் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் கதை.

 

யார் யார் நடித்துள்ளனர்?

துல்கர் சல்மான் நடுத்தர வர்க்க வங்கி ஊழியராக மிகவும் சாதாரண தோற்றத்தில் நடித்துள்ளார். பொறுப்புள்ள கணவர், தந்தை, சகோதரர், மகன் என அவர் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளார்.

 

பாஸ்கரின் மனைவியாக சுமதி (மீனாட்சி சௌத்ரி) நடித்துள்ளார். அவரது நடிப்பு திரையில் சிறப்பாக இருந்தாலும், தனது கதாபாத்திரத்தை இன்னும் முக்கியத்துவம் வாய்ந்ததாக வடிவமைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

 

பாஸ்கரின் நண்பராக சம்பா கதாபாத்திரத்தில் ராஜ்குமார் காசிரெட்டி சுறுசுறுப்பாக நடித்துள்ளார். ராங்கி, சாய் குமார், ஹைப்பர் ஆதி, சச்சின் கெடேகர், சூர்யா ஸ்ரீனிவாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

 

படத்தின் கதை என்ன?

 

நிதிசார்ந்த குற்றங்கள் தொடர்பாக ஏற்கெனவே பல படங்கள் வெளிவந்துள்ளன. இதுவும் அதுபோன்ற மற்றொரு படம்தான்.

 

இந்தக் கதை 1989இல் நடக்கிறது. த்ரில்லர் படத்திற்கான அம்சங்களைக் கொண்டுள்ள இந்தப் படம் நிதிக் குற்றங்கள் குறித்துப் பேசும் ஒரு பீரியட் த்ரில்லர் என்று கூறலாம். இந்தப் படத்தில் ஒரு நடுத்தர வர்க்க மனிதரை கதையின் முக்கியக் கதாபாத்திரமாக இயக்குநர் வடிவமைத்திருப்பதால் ரசிகர்களால் தங்களை துல்கருடன் தொடர்புபடுத்திக் கொள்ள முடிகிறது.

 

மிடில் கிளாஸ் மனிதன் வெவ்வேறு சூழ்நிலைகளில் எப்படி நடந்து கொள்கிறான் என்பதைக் காட்டும் படம் இது. நடுத்தர மக்களுக்கு சமூகத்தில் உயர வேண்டும் என்ற ஆசை இருக்கும். நிதி நிலைமைகள் பெரும்பாலும் அதற்குச் சாதகமாக இருக்காது.

 

இந்தச் சூழலில் வளரும் குழந்தைகள் குடும்பத்தில் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகின்றனர். குடும்பத் தலைவர் தனது குடும்பத்தை நல்ல பொருளாதார நிலைக்குக் கொண்டு வர ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்புகிறார். அப்படிப்பட்ட பொறுப்புகளைக் கையாள்பவர் பாஸ்கர்.

 

இப்படிப்பட்ட நடுத்தர வர்க்கம் பணம் சம்பாதிப்பதற்கான குறுக்கு வழிகளைக் கண்டால் எப்படி சலனங்களுக்கு அடிபணிகிறது?

 

பணம் தேவைப்படும்போது ஒருவராகவும், சம்பாதிப்பதில் அடிமையாகும்போது முற்றிலும் வேறு நபராகவும் அவர்கள் மாறுவது ஏன்?

 

இவற்றை இந்தப் படம் பேசுகிறது.

 

படத்தின் இரண்டாம் பாதி எப்படி உள்ளது?

 

கதையின் முக்கிய அம்சம் நிதிசார்ந்த குற்றங்கள்.

 

"ஒரு வங்கி மற்றொரு வங்கிக்கு கடன் கொடுக்கும்போது, சிலர் அந்த இரண்டு வங்கிகளையும் எப்படிப் பயன்படுத்தி போலியான பாதுகாப்பை உருவாக்கி பங்குச் சந்தைகளிலும் முதலீடுகளிலும் செல்வாக்கு செலுத்துகிறார்கள்? இந்த வலையில் வங்கிகள் எப்படி சிக்குகின்றன? "

 

இதுபோன்ற பல தீவிரமான அம்சங்கள் இந்தப் படத்தில் உள்ளன. இவையெல்லாம் 1989இல் மும்பையில் நடப்பதாக திரைக்கதை அமைந்துள்ளது. ஆனால், இந்தக் கதையை சைட் டிராக்காக மாற்றி, எமோஷனல் ஃபேமிலி டிராமாவாக படம் முன்னேறி 'ஃபீல் குட் வைப்ஸ்' கொடுத்துள்ளது.

 

மும்பையின் பின்னணி இன்னும் வலுவாக இருந்திருந்தால் படம் இன்னும் பலமாக இருந்திருக்கும். இந்தப் பின்னணியில் ஏற்கெனவே ஹாலிவுட் மற்றும் இந்தியாவில் பல படங்கள் வந்திருப்பதால், பழைய கதையைப் புதிதாகப் பார்க்கும் உணர்வு ஏற்படுகிறது.

 

படத்தின் இரண்டாம் பாதியில் குடும்பம், உறவுகள், உணர்ச்சிகள் எனப் படம் நகர்கிறது. அதற்குப் பதிலாக மும்பையில் நடைபெறும் நிதிசார் குற்றங்கள் குறித்த காட்சிகள் கூடுதலாக இருந்திருந்தால் படம் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும், கதை வலுவாக இருந்திருக்கும்.

 

அதோடு, சிபிஐ போன்ற புலனாய்வு அமைப்புகளின் சித்தரிப்பு எதார்த்தத்தில் இருந்து வெகு தொலைவில், மிகவும் செயற்கையாக உள்ளது.

 

'அதிர்ஷ்டம்' வரவில்லையா?

 

படத்தின் தலைப்பிற்கு ஏற்றாற்போல், பாஸ்கரின் கதாபாத்திரம் கடினமான சூழ்நிலைகளில் இருந்து எந்தவித மோதலும் இல்லாமல் வெளியேறும் அதிர்ஷ்டசாலியாக அடிக்கடி காட்டப்படுகிறார்.

 

புத்திசாலித்தனமான ஹீரோவின் கதாபாத்திரத்தை முழுவதுமாக வெளிப்படுத்த திரைக்கதையில் ஸ்கோப் இல்லாததால், சில காட்சிகளில் ஹீரோயிசமாக 'அதிர்ஷ்டம்' இருப்பது போலத் தெரிகிறது. இது படத்திற்கு ப்ளஸ்-ஆக அமையவில்லை.

 

இசையும் பாடல்களும் இந்தப் படத்திற்குக் கூடுதல் பலம். லக்கி பாஸ்கர் படத்தின் அறிமுகப் பாடல் நன்றாக உள்ளது. இசை, பின்னணி இசை, ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது.

 

படத்தின் பலம்

 
  • உணர்ச்சி நாடகம்
  • பாடல்கள் - இசை
  • துல்கர் சல்மான் நடிப்பு

படத்தின் பலவீனம்

  • கதையில் புதுமையின்மை
  • மும்பை பின்னணி வலுவாகச் சித்தரிக்கப்படவில்லை

கதை புதுமையாக இல்லாவிட்டாலும், துல்கர் சல்மானின் நடிப்பாலும், வெங்கி அட்லூரியின் உணர்ச்சிகரமான நாடகத்தாலும் ஓரளவுக்கு ஈர்க்கப்பட்ட படம்தான் 'லக்கி பாஸ்கர்'.

 

(குறிப்பு: இந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ள விமர்சனங்கள் அனைத்தும் விமர்சகருடையது.)