'விடுதலைப் புலிகள் போரில் தோற்றாலும் அவர்களின் சிந்தனை தோற்கவில்லை' - சிறிசேனா
இலங்கையில் விடுதலைப் புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்டாலும், அவர்களின் பிரிவினைவாத சிந்தனை, கருத்து ரீதியில் தோற்கடிக்கப்படவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கூறியுள்ளார்.
அரசியலமைப்பு வழியாக நாட்டின் இனப்பிரச்சனைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கடந்த ஒன்பதாம் தேதி நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
ஆனால், வெறுமனே நிறைவேற்று ஜனாதிபதி முறை மற்றும் தேர்தல் முறையில் சீர்திருத்தங்களைக் கொண்டுவரும் அளவுக்குத்தான் புதிய அரசியமைப்பு மாற்றம் இருக்கவேண்டும். அதனைத் தாண்டி அரசியலமைப்பு முழுமையாக மாற்றப்படக்கூடாது என்று மைத்திரிபால சிறிசேனா தலைமை தாங்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த அமைச்சர்களே கூறிவருகின்றனர்.
இந்த நிலையில், அரசியலமைப்பு மாற்றம் மூலம் இனப்பிரச்சனைக்கு தீர்வுகாணமுடியுமா என்று பிபிசி ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பியது.
'அரசியலமைப்பை திருத்துவதன் மூலமோ அல்லது புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதன் மூலமோ இதற்கு முழுமையான தீர்வு கிடைத்துவிடும் என்று நாம் நினைக்கக்கூடாது. நடைமுறை ரீதியான செயற்பாடு மூலமாகத் தான் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்' என்றார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா.
'2009ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகளை யுத்தத்தில் தோற்கடித்தாலும், விடுதலைப் புலிகளின் சிந்தனையை கொண்டவர்களை கருத்து ரீதியில் நாம் தோற்கடிக்கவில்லை' என்றும் கூறினார் ஜனாதிபதி.
'நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படுவதை தவிர்ப்பதற்கு, மீண்டும் நாட்டை பிளவுபடுத்தும் பயங்கரவாத அமைப்பு உருவாகாமல் தடுப்பதற்காக, ஈழ அரசை உருவாக்கும் எண்ணத்தை முற்றாக தடுப்பதற்காக முதலில் அந்த மக்களின் உள்ளத்தை வெல்லவேண்டும்' என்று கூறினார் சிறிசேனா.
இலங்கையில் தனிநாடு கோரும் யுத்தம் இனிமேல் ஏற்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை புதிய அரசாங்கம் எடுத்துவருவதாகவும் இலங்கை ஜனாதிபதி கூறினார்.
'யுத்தம் ஏற்படுவதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்து அந்தக் காரணங்களுக்கு தீர்வு தேடுவது அவசியம். கடந்த பல ஆண்டுகளில் அந்தத் தீர்வுகாணும் வேலை நடக்கவில்லை. இன்று நாங்கள் அந்தக் காரணங்களை கண்டுபிடித்து அவற்றுக்குத் தீர்வு காண்கின்றோம்' என்றார் மைத்திரிபால சிறிசேனா.