வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 30 ஆகஸ்ட் 2016 (22:38 IST)

பணம் கொடுத்து நாட்டை விட்டு தப்பினார்களா விடுதலைப் புலிகள்?

இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடைபெற்ற போது, பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவருக்கு பணம் கொடுத்து, 200-க்கும் மேற்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் நாட்டை விட்டு தப்பியோடியதாக வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
 

 
காணமால் போனோர் தொடர்பாக செயல்படும் அலுவலகம் குறித்து ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் கூட்டமொன்றில் உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்தார்.
 
இறுதிக் கட்டப் போர் நடைபெற்ற போது 200-க்கும் மேற்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் நாட்டை விட்டு தப்பியோடியுள்ளதாக தெரிவித்த அமைச்சர் சமரவீர, இவர்களுக்குள் அந்த அமைப்பின் முக்கிய தலைவர்களும் இருப்பதாக அறிவித்தார்.
 
இவ்வாறு தப்பியோடிய நபர்களும் காணாமல் போனோரின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் இவ்வாறான சட்ட விரோத செயல்கள் சம்பந்தமாக ஆராய காணாமல் போனோர் தொடர்பாக செயல்படும் அலுவலகம் அமைப்பது அவசியமென்று தெரிவித்தார்.
 
மேலும் கருத்துக்களை தெரிவித்த அமைச்சர் சமரவீர, காணாமல் போனோரின் அலுவலகம் அமைப்பது தொடர்பாக சில எதிர்க்கட்சிகள் பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகத் தெரிவித்தார்.
 
இந்த அலுவலகம் உருவாக்கப்படுவதன் மூலம் பாதுகாப்பு படையினர் பழி வாங்கப்படமாட்டார்கள் என்று அவர் கூறினார்.
 
மேலும் கருத்துக்களைத் தெரிவித்த அமைச்சர் மங்கள சமரவீர, உண்மை கண்டறியும் ஆணைக் குழுவொன்றை அமைக்கும் சட்ட மூலம் இந்த வருட இறுதிக்குள் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படுமென்று தெரிவித்தார்.
 
இதன் மூலம் கண்டறியப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, உள்ளூர் நீதிமன்ற கட்டமைப்பின் கீழ் மாத்திரம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுமென்று தெரிவித்த அமைச்சர் மங்கள சமரவீர, இந்த விசாரணைகளுக்கு சர்வதேச நீதிபதிகள் அழைக்கப்பட மாட்டார்கள் என்று மேலும் தெரிவித்தார்.